St. Rose of Lima St. Juan Maria de la Cruz

ஆகஸ்டு 23

தூய லீமா ரோஸ்

mary

தூய லீமா ரோஸ் (ஆகஸ்ட் 23)

“இறைவா என்னுடைய துன்பங்களைப் பெருக்கும். அதே நேரத்தில் எனது ஆன்மாவில் உம்முடைய அன்பு பற்றி எரியச் செய்யும்” – லீமா ரோஸ்

வாழ்க்கை வரலாறு

கி.பி. 1586 ஆம் அண்டு பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் நகரில் பிறந்தவர் ரோஸ். லீமா என்னும் நகரில் பிறந்ததால் இவர் லீமா ரோஸ் என்று அழைக்கப்படுகின்றார். இவருடைய பெற்றோர் ஸ்பானிய குடிகள். ஸ்பெயின் நாட்டிலிருந்து பெருவில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள்.

லீமா ரோஸ் பேரழகியாக இருந்தார். அதனால் நிறைய ஆண்கள் அவரை மணமுடிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர் எல்லாரையும் மறுத்துவிட்டார். அவருடைய பெற்றோர் அவரை மணமுடித்துக் கொடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. மாறாக, அவர் தன்னுடைய முகத்தை சிதைத்து அழகில்லாமல் ஆக்கிக்கொண்டு யாரும் அவரை பெண்கேட்டு வராமல் செய்தார்.

சிறுது காலத்திற்குப் பின்னர் லீமா ரோஸ் தன்னுடைய சகோதரரின் உதவியின் பேரில் தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை கட்டி, அங்கேயே தன்னுடைய வாழ்நாளை ஜெபத்திலும் தவத்திலும் செலவழிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே சியன்னா நகரைச் சார்ந்த தூய கத்ரின் மீது மிகுந்த பக்திகொண்ட லீமா ரோஸ் அவரிடம் உருக்கமாக ஜெபிக்கத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல் பொது நிலையினருக்கான டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து இறைவனுக்காய் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார்.

தோட்டத்திலேயே தங்கியிருந்த லீமா ரோஸ் ஓய்வு நேரங்களில் தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு, அதனைச் சந்தையில் விற்று அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்திற்குப் பெரும் உதவியாக இருந்தார். இது தவிர நேரம் கிடைகின்றபோதெல்லாம் இவர் அக்கம் பக்கத்தில் இருந்த ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் பல செய்துவந்தார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பு உண்டாயிற்று. லீமா ரோசின் ஜெபத்தினால் நிறைய வல்ல செயல்கள் நடந்தன. அதனால் நிறைய மக்கள் அவரைத் தேடிவந்து குணம் பெற்றுச் சென்றார்கள். அப்போதெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லக்கூடிய வார்த்தைகள், “இறைவன் ஒரு தராசில் துன்பத்தையும் இன்னொரு தராசில் அருளையும் வைத்திருக்கின்றார். துன்பத்தின் அளவு கூடக்கூட இறைவன் தருகின்ற அருளின் அளவு கூடும்” என்பதாகும்.

இப்படி ஏழை எளியவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராய், சிறந்த ஜெப மனுசியாய் விளங்கிய லீமா ரோஸ் 1617 ஆம் ஆண்டு தன்னுடைய மண்ணுலக வாழ்வைத் துறந்தார். இவருக்கு 1671 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லீமா ரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழைகளின் மீது அக்கறை

தூய லீமா ரோஸ் ஏழைகள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏழைகளைச் சந்தித்துப் பேசுவதன் வழியாகவும் அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதன் வழியாகவும் அவர் அவர்கள் மீது கொண்ட தன்னுடைய அன்பினை வெளிப்படுத்தினார். இவருடைய விழாவினைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மனிதன் முதன்முதலாக நிலவில் தன்னுடைய கால் பதித்த நாள் 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள். அன்றைய தினத்தில் கல்கத்தாவில் உள்ள அன்னைத் தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்தில் அவருக்கும் அவரோடு இருந்த மற்றொரு சகோதரிக்கும் இடையே நடந்த உரையாடல். “அன்னையே! இன்று நிலவில் மனிதன் கால்தடம் பதித்து விட்டான் என்று செய்தி வந்திருக்கின்றது. நீங்கள் நிலவில் சென்று சேவை செய்வீர்களா?” என்று கேட்டார் அந்த சகோதரி. அதற்கு சிறிதும் தாமதியாமல் அன்னைத் தெரசா அவரிடம், “ஒருவேளை நிலவில் ஏழைகள் இருந்தால், நிச்சயமம் அங்கே சென்று பணி செய்வேன்” என்றார். அன்னைத் தெரசா ஏழை எளியவர், கைவிடப்பட்டவர்கள், அனாதைகள் மீது அவர் எந்தளவுக்கு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்கின்றார். (மத் 25:40). நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் யாவும் இறைவனுக்குச் செய்கின்ற உதவிகள் ஆகும் என்பது எவ்வளவு ஆழமான உண்மை.

ஆகவே, தூய லீமா ரோசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஜெபத்தில் வேரூன்றி நிற்போம். ஏழைகள் பால் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

ஆகஸ்டு 23

J}a

mary

t

rpe;jid: c

nrgk;: k

image