St. Caesarius Of Arles St. Gebhard II of Constance St. Monica

ஆகஸ்டு 27

✠ புனிதர் மோனிக்கா ✠

mary

✠ புனிதர் மோனிக்கா ✠(St. Monica)

✠தாய், கைம்பெண், உறுதிமொழி ஏற்காத மறைப்பணியாளர் :
(Mother, Widow, Religious Lay Woman)

✠பிறப்பு : 332
தகாஸ்தே, நுமிடியா, ரோமப் பேரரசு
(Thagaste, Numidia, Roman Empire)

✠இறப்பு : 387,
ஓஸ்தியா, இத்தாலி, ரோமப் பேரரசு
(Ostia, Italy, Roman Empire)

✠முக்கிய திருத்தலம் :
தூய அகுஸ்தினார் திருத்தலம், ரோம், இத்தாலி
(Basilica of Sant'Agostino, Rome, Italy)

✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 27

✠பாதுகாவல் :
திருமண பிரச்சினைகள், ஏமாற்றமடையும் குழந்தைகள், பாலியல் வன்கொடுமை அல்லது துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், (வாய்மொழி) துஷ்பிரயோகம் மற்றும் உறவினர்களின் மனமாற்றம், பொய்க் குற்றச்சாட்டினாலும் வதந்திகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்

புனிதர் மோனிக்கா, "ஹிப்போவின் மோனிக்கா" (Monica of Hippo) என்று அறியப்படுகிறவரும், ஆதி கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர், புனிதரும், மறைவல்லுநருமான புனிதர் அகுஸ்தீனுடைய (St. Augustine of Hippo) தாயாருமாவார். புனிதர் அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலில் (Confessions), தம் மனமாற்றம் பற்றி எழுதுவதோடு அந்த மனமாற்றத்துக்குத் துணைபுரிந்த தன் அன்னையாகிய மோனிக்காவின் புனிதத்தையும் வெகுவாகவே போற்றியுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு :
மோனிக்காவின் பெயரிலிருந்து அவர் "பேர்பர்" (Berber) இனத்தவர் என நம்பப்படுகின்றது. இவர் இளவயதிலேயே "பேட்ரீசியஸ்" (Patricius) என்னும் "ரோம-பேகனியருக்கு" திருமணம் செய்துவைக்கப்பட்டார். "பேட்ரீசியஸ்", அல்ஜீரியாவில் அரசு சார்ந்த பதவி வகித்து வந்தார். "பேட்ரீசியஸ்" வன்முறை, கோபம் போன்ற குணங்களைக் கொண்டிருந்ததோடு ஒழுங்கீன பழக்கவழக்கங்கள் கொண்டவராக இருந்தார். இதனால் கிறிஸ்தவரான மோனிக்காவின் மணவாழ்வு அமைதியின்றி இருந்தது. மோனிகாவின் உதாரகுணம், செயல்பாடுகள் மற்றும் பிரார்த்தனை பழக்கங்கள் பேட்ரிசியஸைக் கோபமூட்டின. ஆனாலும், அவர் மோனிக்காவை மரியாதையுடனேயே நடத்தினார் என்று கூறப்படுகிறது.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் "அகுஸ்தீன்" (Augustine); இரண்டாமவர் "நவீஜியஸ்" (Navigius); மூன்றாவது பெண்குழந்தை "பெர்பெச்சுவா" (Perpetua). தன் கணவரின் அனுமதி கிடைக்காததால் இவர்களுக்கு மோனிக்காவால் திருமுழுக்கு கொடுக்க இயலவில்லை. இளவயதினில் அகுஸ்தீன் நோய்வாய்ப்பட்டபோது, திருமுழுக்கு கொடுக்க இணங்கினாலும், உடல் நலம் தேறியதும், பேட்ரிசியஸ் தன் மனதை மாற்றிக் கொண்டார்.

அகுஸ்தீன் "மடௌரஸ்" (Madauros) நகருக்கு கல்விகற்க அனுப்பப்பட்டார். இவ்வேளையில் பேட்ரீசியஸ் மனமாறி கிறிஸ்தவரானார். பேட்ரீசியஸ் மனமாறிய சில நாட்களிலேயே இறந்தார். தமது பதினேழு வயதில், "கார்தேஜ்" (Carthage) நகருக்கு அணியிலக்கணம் (Rhetoric) கற்க சென்ற அகுஸ்தீன், அங்கே ஒழுக்கமற்ற வாழ்வை வாழத் தொடங்கினார்.

அங்கே அகுஸ்தீன் "மனிச்செஸ்ம்" (Manichaeism) எனும் புதிய மதத்தைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார். மகனுடைய போக்கினால் வேதனையுற்ற மோனிக்கா கிறிஸ்தவ சமயத் தலைவராகிய ஒரு புனித ஆயரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அவர் மோனிக்காவிடம், "இவ்வளவு கண்ணீர் வழிந்தோடக் காரணமாக இருந்த மகன் ஒருநாள் மனம் திரும்புவார்" என்று கூறிய சொற்கள் வரலாற்றில் சிறப்புப் பெற்றவை.

அகுஸ்தீன் அன்றைய உலகின் கலாச்சார மையமாக இருந்த ரோம் நகருக்கு யாரிடமும் சொல்லாமல் பயணமாகிச் சென்றார். இதை அறிந்த மோனிக்கா மகனைத் தேடி ரோமுக்குச் சென்றார். அதற்குள் அகுஸ்தீன் மிலன் (Milan) சென்றுவிட்டார். அங்கேயும் மோனிக்கா மகனைப் பின்தொடர்ந்தார். மிலன் நகர பேராயரான அம்புரோசால் (Ambrose) மனமாற்றம் அடைந்த அகுஸ்தீன், 17 வருட எதிர்ப்புக்குப் பின் திருமுழுக்கு பெற்றார். அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலாகிய " ஒப்புதல்கள்" (Confessions) என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் பின் தன் தாயின் இறை வேண்டுதலால் மனம் மாறியதையும் விரிவாக விளக்கியுள்ளார்.

இறப்பு :
இத்தாலி நாட்டை விட்டு ஆப்பிரிக்காவுக்குப் பயணமாகச் செல்லுவதற்கு அகுஸ்தீனும் மோனிக்காவும் ரோம் நகரின் துறைமுகமாகிய "ஓஸ்டியா" (Ostia) நகரில் காத்திருந்தபோது மோனிக்கா நோய்வாய்ப்பட்டு மரித்தார். ஓஸ்டியா நகரிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை சிறிதுகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், 6ம் நூற்றாண்டில் மோனிக்காவின் மீப்பொருள்கள் ஓஸ்டியாவில் புனித அவுரா என்பவர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனித அவுரா கல்லறை அருகே மோனிக்கா அடக்கம் செய்யப்பட்டார்.

image