St. Januarius St. Theodore Of Canterburg

செப்டம்பர் 19

தூய ஜனுவாரியுஸ் (செப்டம்பர் 19)

mary

தூய ஜனுவாரியுஸ் (செப்டம்பர் 19)

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12:24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜனுவாரியுஸ் எங்கு, எப்போது பிறந்தார் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் இவர் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், இத்தாலியில் உள்ள பெனேவேண்டோ நகரின் ஆயராக இருந்தார் என்று நம்பப்படுகின்றது. ஆயராக இருந்த இவர் மிகவும் பொறுப்புடனும் முன்மாதிரியாகவும் வாழ்ந்து வந்தார். இவருடைய காலத்தில் டையோக்ளசியன் என்பவன் உரோமையை ஆண்டு வந்தான். அவன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதனை கலாபனையில் இறங்கினான். நிறையக் கிறிஸ்தவர்களைக் கொலை செய்தான்; ஏராளமான திருத்தொண்டர்களையும் குருக்களையும் சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தான்.

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட திருத்தொண்டர்களைச் சந்தித்து, அவர்களைத் தேற்றுவதற்காகப் போன ஆயர் ஜனுவாரியுசையும் அங்கிருந்த சிறை அதிகாரிகள் பிடித்து சித்ரவதை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் ஆயரிடம், “நீ உரோமைக் கடவுளை வணங்கினால், உன்னை உயிரோடு விட்டுவிடுவோம், இல்லையென்றால் உன்னைக் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போட்டுவிடுவோம்” என்று மிரட்டினார்கள். ஆயரோ எதற்கும் பயப்படாமல், “நான் உரோமைக் கடவுளை வணங்கி உயிர்வாழ்வதைவிட சாவதே மேல்” என்றார். இதனால் அவரை சிறை அதிகாரிகள் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போட்டார்கள்.

கொடிய விலங்குகளுக்கு முன்பாகப் போடப்பட்ட ஆயர் ஜனுவாரியுசை அவை ஒன்றுமே செய்யவில்லை. இதனால் மிரண்டுபோன அதிகாரிகள் அவரை வாளுக்கு இரையாக்கினார்கள். இதற்கிடையில் ஆயர் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட யூசேப்பியா என்ற பெண்மணி, தரையில் வழிந்து கிடந்த அவருடைய இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் சேகரித்து, அதனை நேபல்ஸ் நகரில் இருந்த ஆயரிடம் கொடுக்க, அது பத்திரமாக வைக்கப்பட்டது. அவருடைய இந்த புனித இரத்தமானது அவர் கொல்லப்பட்ட செப்டம்பர் 19 ஆம் நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும், திடநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுவதை மக்கள் பார்த்துவிட்டு, இறைவனுக்கு நன்றிசெலுத்திவிட்டுப் போகிறார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜனுவாரியுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்..

1. ஒருவர் மற்றவரைத் தேற்றுவோம்!

தூய ஜனுவாரியுசின் சாட்சிய வாழ்வு நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தாலும் அவர் கிறிஸ்துவின் பொருட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பலவாறாக சித்ரவதை செய்யப்பட்ட திருத்தொண்டர்களைத் தேற்றியதும் அவர்களுக்கு ஆறுதல் சொன்னதும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமாக இருக்கின்றது. தூய ஜனுவாரியுசைப் போன்று நாம், வேதனையில், கவலையில், வருத்தத்தில், தனிமையில் தவிக்கின்ற மக்களைத் தேற்றுக்கின்றமா? அவர்களுக்கு ஆறுதலாக ஏதாவது ஊக்கப்படுத்துகின்ற வார்த்தைகளைப் பேசுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலில் சொல்வார், “ஒருவர் மற்றுவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்” என்று (கலா 6:2). ஆம், வேதனையில், கலக்கத்தில் இருக்கின்ற ஒருவரைத் தேற்றுவதும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும் கூட கிறிஸ்தவத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கின்றது.

ஒரு சிறிய நிகழ்வு. நத்தனியேல் ஹாவ்தார்ன் என்பவர் சுங்க அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ஒருசமயம் அவர் அந்தப் பணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். வேலையை விட்டு மிகுந்த மனவேதனையோடு வந்து சேர்ந்த அவரிடம் அவரது மனைவி, “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே, ஏதாவது எழுதவேண்டும் என்று, அதை இப்போது தொடங்குங்கள். நீங்கள் வீட்டுச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் நான் சேமித்து வைத்துள்ளேன். இந்த சேமிப்பு நமது குடும்பத்திற்குப் போதும்” என்று கூறி அவரை எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.

அதனால் நத்தனியேல் மகிழ்ச்சியோடு தன் கனவான எழுத்துப் பணியைத் தொடங்கினார். அவ்வாறு அவர் எழுதிய நூல்தான் “The Scarlet Letter” என்பதாகும். இந்த நூல் மிகப் பிரபலம் அடைந்து, அவருக்கு பேரையும் புகழையும் செல்வத்தையும் பெற்றுத் தந்தது.

நத்தனியேலுக்கு அவருடைய மனைவி தந்த ஊக்கம், அவரை எழுத்துலகில் மிகப்பெரிய சாதனையைச் செய்ய தூண்டுகோலாக இருந்தது. நாமும் ஒருவர் மற்றவரைத் தேற்றும்போது அவர்கள் தங்களுடைய வாழ்வில் முன்னுக்கு வருவது உறுதி.

ஆகவே, தூய ஜனுவாரியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம், ஒருவர் மற்றவரைத் தேற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image