St. Adomnan Of Fona St. Padre Pio St. Thecla

செப்டம்பர் 23

✠ புனிதர் பியோ ✠

mary

✠ புனிதர் பியோ ✠(St. Pio of Pietrelcina)

✠துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு:
(Priest, Religious, Mystic, Stigmatist, and Confessor)

✠பிறப்பு : மே 25, 1887
பியட்ரல்சினா, பெனேவென்ட்டோ, இத்தாலி
(Pietrelcina, Benevento, Italy)

✠இறப்பு : செப்டம்பர் 23, 1968 (வயது 81)
சேன் ஜியோவன்னி ரொட்டொன்டோ, ஃபொக்கியா, இத்தாலி
(San Giovanni Rotondo, Foggia, Italy)

✠முக்திபேறு பட்டம் : மே 2, 1999
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

✠புனிதர் பட்டம் : ஜூன் 16, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

✠முக்கிய திருத்தலங்கள் :
சான் ஜியோவானி ரொட்டொன்டோ, இத்தாலி
(San Giovanni Rotondo, Italy)

✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 23

✠பாதுகாவல் :
மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் (Civil defense volunteers), வளர் இளம் பருவத்தினர் (Adolescents), மன அழுத்த நிவாரணம் (Stress relief), இத்தாலி மற்றும் மால்ட்டா (Italy and Malta), பியட்ரல்சினா (Pietrelcina)

பியட்ரல்சினா நகரின் புனிதர் பியோ, கப்புச்சின் துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் "ஃபிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன்" (Francesco Forgione), கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். குருவானது முதல் "பாட்ரே பியோ" என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002ம் ஆண்டு, ஜூன் மாதம், 16ம் தேதி அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

தொடக்க காலம் :
தென் இத்தாலியின் "கம்பானியா" (Campania) எனும் பிராந்தியத்தின் "பியட்ரல்சினா" (Pietrelcina), என்னும் விவசாய நகரில் "க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன்" (Grazio Mario Forgione) (1860�1946) � "மரிய க்யுசெப்பா டி நுன்ஸியோ" (Maria Giuseppa Di Nunzio) (1859�1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887ம் ஆண்டு, மே மாதம், 25ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த "தூய அன்னா" (Santa Anna Chapel) சிற்றாலயத்தில் திருமுழுக்கு பெற்ற இவர், தமது சிறுவயதில் பீடப் சிறுவனாக திருப்பலிகளில் குருவுக்கு உதவி செய்து வந்தார். இவருக்கு "மிச்சேல்" (Michele) எனும் மூத்த சகோதரனும், "ஃபெலிசிட்டா" (Felicita), "பெல்லக்ரீனா" (Pellegrina) மற்றும் "க்ரேஸியா" (Grazia) ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், கார்மேல் அன்னையின் (Our Lady of Mount Carmel) மேலுள்ள பக்தி காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ம் வயதில் "மொர்கோன்" (Morcone) நகரிலுள்ள கப்புச்சின் சபையில் புகுநிலை துறவியாக இணைந்த இவர், ஜனவரி 22ம் தேதி தனது துறவற ஆடைகளைப் பெற்றுக்கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.

குருத்துவ வாழ்வு :
ஏழு ஆண்டுகள் குருத்துவப் கல்வியின் பின்னர், 1910ம் ஆண்டு, பேராயர் "பவோலோ சிநோசி" (Archbishop Paolo Schinosi) பியோவுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றிய காரணத்தால் குடும்பத்துடன் வசிப்பதற்காக இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.

1917ம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.

இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்�� பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.

திருக்காய வரம் :
1918ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறும் பேறு பெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.

அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.

இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.

இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.

புனிதர் பட்டம் :
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ம் தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.

1968 செப்டம்பர் 23ம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ம் தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

image