St. Vincent De Paul

செப்டம்பர் 27

புனித வின்சென்ட் தெ பால்
St.Vincent de Paul, Priest and Founder

mary

புனித வின்சென்ட் தெ பால்
St.Vincent de Paul, Priest and Founder

பிறப்பு: 24 ஏப்ரல்1581,காஸ்கோனி(Gascony), பிரான்சு
இறப்பு27 செப்டம்பர் 1660,பாரீஸ், பிரான்சு
முத்திபேறுபட்டம்: 13 ஆகஸ்டு 1729, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூன் 1737, திருத்தந்தை 12 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: குதிரைகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர்கள், வின்சென்ட் தெ பால் சங்கங்கள்

நிகழ்வு

வின்சென்ட் தே பவுல் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் ஆடுமாடுகளை மேய்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து ஆடு மாடுகளை மேய்த்து வந்தார். ஒரு சமயம் வின்சென்ட் தே பவுலின் ஊரில் வாழ்ந்த கோமத் என்ற நீதிபதி அவரிடம் இருந்த ஞானத்தையும் புத்திக்கூர்மையையும் பார்க்க நேர்ந்தது. உடனே அந்த நீதிபதி வின்சென்ட் தே பவுலின் தந்தையைச் சந்தித்து அவரிடம், “உம்முடைய பையன் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டியவன் அல்ல, அவன் பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டியவன், தயவு செய்து எப்படியாவது அவனை படிக்கவையுங்கள். இல்லையென்றால் ஒரு மிகச் சிறந்த அறிவாளியை நீங்கள் இழக்க நேரிடும்” என்று புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார். உடனே வின்சென்ட் தே பவுலின் தந்தை தன்னிடம் இருந்த ஆடு மாடுகளை விட்டு, அவரை பள்ளியில் படிக்க வைத்தார்.

வாழ்க்கை வரலாறு

வின்சென்ட் தே பவுல் 1581 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள காஸ்காணி என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். வின்சென்ட் தே பவுலின் வீட்டில் கடுமையான வறுமை நிலவியது. இத்தகைய வறுமையான சூழ்நிலையில் வின்சென்ட் தே பவுலால் படிக்க முடியவில்லை. எனவே, அவர் வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்த்து குடும்பத்தாரின் கஷ்டத்தைப் போக்க ஓரளவு வழி செய்தார். அப்போதுதான் அவர் கோமத் என்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் படிக்க அனுப்பப்பட்டார். வின்சென்ட் தே பவுலிடம் இருந்த ஞானமும் அறிவும் அவரை மிகச் சிறந்த படிப்பாளியாக மாற்றியது. இந்த சமயத்தில் அவருக்கு பெருய்ல் (Berulle) என்பரின் நட்பு கிடைத்தது. அவர்தான் வின்சென்ட் தே பவுலை குருவாகப் படிக்கச் சொன்னார். அவருடைய அறிவுறுத்தலில் பேரில் வின்சென்ட் தே பவுல் குருவாகப் படித்து, 1600 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 19 ஆம் வயதிலே குருவாக மாறினார்.

குருவாக மாறிய பிறகு, வின்சென்ட் தே பவுல் பாரிஸ் நகருக்கு மிக அண்மையில் இருந்த கிளிசி என்னும் ஒரு கிராமப் பங்கில் பங்குக் குருவாக நியமிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சரியான பொருளாதார வசதி கிடைக்காததால் நிறையவே கஷ்டப்பட்டார். அப்போதுதான் டிகோண்டி என்று செல்வச் சீமாட்டி தன்னுடைய கணவருடன் சேர்ந்து, ‘ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்ய முன்வருவோருக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கின்றோம்” என்ற ஓர் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பைக் கேட்ட வின்சென்ட் தே பவுல் ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் பணி செய்யத் தான் முன்வருவதாக வாக்குக் கொடுத்தார். உடனே அந்த செல்வச் சீமாட்டி தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வின்சென்ட் தே பவுலின் பெயருக்கு மாற்றி எழுதினார். இதனால் அவருடைய பொருளாதாரக் கஷ்டம் சற்றுக் குறைந்தது.

ஒருசமயம் அந்தச் செல்வச் சீமாட்டியிடம் கடன்பட்டிருந்த ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்காக அவர் கப்பலில் சென்றபோது துருக்கி நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் அவரை கடத்திச் சென்று டூனீஸ் நகரில் இருந்த ஒரு முகமதியரிடம் அடிமையாக விற்றார்கள். அவர் வின்சென்ட் தே பவுலை வேறு நபரிடம் விற்றார். அவரோ வின்சென்ட் தே பவுலை ஒரு கிறிஸ்தவரிடம் விலைக்கு விற்றார். அந்தக் கிறிஸ்தவரோ ஆன்மீகக் காரியங்களில் அதிக நாட்டமில்லாது இருந்தார். ஆனால் அவருடைய மனைவியோ கடவுள்மீது அதிக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்மணியிடத்தில் வின்சென்ட் தே பவுல் திருப்பாடல்களையும், வேறு சில கிறிஸ்தவப் பாடல்களையும் பாடிக் காட்டினார். இது அவருக்குப் பிடித்துப்போக அவர் அவருடைய கணவரிடம் வின்சென்ட் தே பவுலுக்ககப் பரிந்து பேச, அம்மனிதர் வின்சென்ட் தே பவுலை விடுதலை செய்து அனுப்பினார். வின்சென்ட் தே பவுல் அங்கிருந்து வெளியேறி நான்காம் ஹென்றி என்ற மன்னரிடம் தஞ்சம் அடைந்தார். அங்கு சிறுது காலம் ஆன்ம ஆலோசகராக இருந்துவிட்டு பின்னர் பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்தார்.

பாரிஸ் நகருக்குத் திரும்பி வந்த பிறகு வின்சென்ட் தே பவுல் பற்பல பணிகளை செய்யத் தொடங்கினார். அனாதைகள், கைவிடப்பட்ட முதியவர்கள் போன்றோரைப் பராமரிப்பதற்காக அனாதை இல்லங்களைத் தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஒப்புரவு அருசாதனங்களை வழங்கி மக்களை ஆன்மீக பாதையில் வழி நடத்திச் சென்றார். அவர் ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்கச் செல்வார். அப்போது பாதையோரங்களில் கிடக்கும் அனாதைக் குழந்தைகளைத் தூக்கி வந்து, அவர்களை தன்னுடைய அனாதை இல்லங்களில் சேர்த்து பராமரித்து வந்தார்.

1626 ஆம் ஆண்டில் ஒருநாள், வின்சென்ட் தே பவுல் தான் செய்து வரும் பணிகளைத் தனி ஒரு மனிதராகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூன்று பேர் கொண்ட சபையை ஏற்படுத்தி அதற்கு நற்செய்தி அறிவிப்பு சபை (Congregation of the Mission (CM) என்று பெயரிட்டார். பின்னர் அந்த சபையின் வழியாக பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் தூய பிரான்சிஸ் சலேசியாரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு மிகவும் ஆழமாக வளர்ந்தது. எந்தளவுக்கு என்றால் பிரான்சிஸ் சலேசியாரின் இறப்புக்குப் பிறகு அவர் நடத்தி வந்த Sisters of Visitation என்ற சபையை இவர் தான் தலைமை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு வின்சென்ட் தே பவுல் பெண்களுக்கு என்று ‘அறப்பணி மகளிர் சபை’யும் ஆண்களுக்கு என்று ‘ஏழைகளின் பணியாளர் சபை’யையும் தோற்றுவித்தார். இச்சபைகளின் மூலமாக வின்சென்ட் தே பவுல் ஆற்றிய பணிகள் ஏராளம்.

எப்போதும் சிலுவையைத் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் வின்சென்ட் தே பவுல், இந்த சிலுவையில் அறையப் பட்ட இயேசுவின் துணையால் எப்படிப்பட்ட பணிகளையும் செய்ய முடியும் என்று குறிப்பிடுவார். இப்படி ஏழைகளில் சிரிப்பில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு வந்த வின்சென்ட் தே பவுல் 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். 1737 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருச்சபையில் நடைபெறும் இரக்கச் செயல்களுக்கு பாதுகாவலராக விளங்கும் தூய வின்சென்ட் தே பவுலின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மக்கள்பணியே இறைப்பணி

வின்சென்ட் தே பவுல் மக்களுக்குப் பணிசெய்வதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டார். குறிப்பாக ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டோர் இவர்களுடைய வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

1648 ஆம் ஆண்டிலிருந்து 1653 ஆம் வரை பிரான்சில் நடைபெற்ற உட்நாட்டுக் கலவரத்தில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஏராளமான பேர் தங்களுடைய வீடுகளையும், உறவுகளையும் இழந்தது தவித்தார்கள். அத்தகைய தருணத்தில் மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை வின்சென்ட் தே பவுலே பேருதவியாக இருந்தார்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image