St. Eustochium St. Exsuperius Of Coulouse St. Wenceslas

செப்டம்பர் 28

மறைசாட்சி வென்செஸ்லாஸ்

mary

மறைசாட்சி வென்செஸ்லாஸ்
St. Wenseslaus


பிறப்பு : 904 / 907,போஹேமியா( Bohemia), ப்ராக் (prague)
இறப்பு : 929 / 935,பொலேஸ்லேவில்(Boleslew), போஹேமியா(Bohemia)
பாதுகாவல்: போஹூமியா, பிராக் நாட்டின் பாதுகாவலர்

“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” (மத் 19: 21)

வாழ்க்கை வரலாறு

வென்சஸ்லாஸ், பொஹிமியா நாட்டு அரசராகிய விராடிஸ்லாஸ் என்பவருக்கும் அவருடைய மனைவி டிராஹோமிரா என்பவருக்கும் 909 ஆம் ஆண்டு தலைமகனாகப் பிறந்தார். வென்சஸ்லாசின் தந்தை கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வந்தார். ஆனால் அவருடைய தாயாரோ வேற்று மதத்தைத் தழுவி வந்தார். அதனால் அவர் கிறிஸ்தவர் என்ற பெயரைக் கேட்டாலே கடும் சீற்றம் கொண்டு வந்தார்.

இதற்கு மத்தியில் வென்சஸ்லாசின் தாய் வழிப் பாட்டியும், கிறிஸ்தவ விசுவாசத்தில் சிறந்து விளங்கியவளுமான லுட்மில்லா வென்சஸ்லாசுக்கு கிறிஸ்தவ பக்தி நெறியை சிறப்பான முறையில் ஊட்டி வளர்த்துவந்தார். இப்படி நாட்கள் சென்றுகொண்டிருந்த வென்சஸ்லாசின் தந்தை திடிரென இறந்துபோனார். அவர் இறந்த ஒருசில நாட்களிலேயே அவருடைய பாட்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதனால் வென்சஸ்லாசின் தாயார் அரசியாகப் பொறுப்பேற்று நாட்டை ஆளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே கிறிஸ்தவர்கள் மீது கடுமையான வெறுப்போடு இருந்த டிரஹோமிரா, இதுதான் நல்ல வாய்ப்பு என நினைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களை ஒடுக்கவும் பலவாறு சித்ரவதை செய்யத் தொடங்கினார். எனவே கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்து அரசிக்கு எதிராகக் கொதித்தெழுந்து, ‘வென்சஸ்லாஸ்தான் எங்களை அரசராக ஆளவேண்டுமே ஒழிய, டிரஹோமிரா அல்ல’ என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் வென்சஸ்லாஸ் தன்னுடைய 18 வயதில் அரசராக மாறினார்.

அரசராக மாறியபிறகு வென்சஸ்லாஸ் மக்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்கினார். ஏழை எளியவர் தங்களுடைய வாழ்வில் உயரப் பாடுபட்டார்; அனாதைகள், கைவிடப்போட்டோர் போன்றவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தார். சமயத்தில் கைம்பெண்களின் வீட்டுக்கு அடுப்பெரிய விறகுகளை கால்நடையாக தூக்கிக்கொண்டு போய் வைத்தார். இது மட்டுமல்லாமல் வென்சஸ்லாஸ் ஆலய காரியங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். நாள்தவறாமல் திருப்பலியில் கலந்துகொண்டு வந்தார்.

வென்சஸ்லாஸ் அரசராக இருந்த சமயத்தில் திருச்சபைக்கு அதிகமான நிதி உதவிகள் கொடுக்கபட்டன; நிறைய ஆலயங்கள் கட்டி எழுப்பப்பட்டன. இதனால் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், எல்லாருக்கும் மத்தியிலும் வென்சஸ்லாசுக்கு நல்ல மதிப்பு உண்டானது. இது அவருடைய சகோதரருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அவர் தக்க சமயம் பார்த்து வென்சஸ்லாசை வீழ்த்த நினைத்தார்.

929 ஆம் ஆண்டு, புனிதர்களான கோஸ்மாஸ் மற்றும் தமியான் இவர்களுடைய விழா நாளின்போது வென்சஸ்லாசின் சகோதரர் பொலேஸ்லாஸ் அவரிடம், “சகோதரா! வா, நாம் இருவரும் ஆலயத்திற்குப் போவோம்” என்றான். வென்சஸ்லாசும் அவரோடு ஆலயத்திற்குச் செல்ல, வழியிலே பொலேஸ்லாஸ் வென்சஸ்லாஸ்மீது பாய்ந்து கத்தியால் குத்தி கொன்றுபோட்டான். இதனால் வென்சஸ்லாஸ் அந்த இடத்திலே துடிதுடிக்க இறந்துபோனார். வென்சஸ்லாஸ் தான் இறப்பதற்கு முன்பாக தன் சகோதனை மனதார மன்னித்துவிட்டு இறந்துபோனார்.
அவர் இறந்த உடனே, அம்மாநில மக்களால் மறைசாட்சியாக கருதப்பட்டார். இவரே அவ்வூரின் முதல் மறைசாட்சியாவார். வென்செஸ்லாஸ் தனது சிறு வயதிலிருந்தே நற்கருணையின்மீது பக்தி கொண்டு வளர்ந்தார். இவர் இறந்த இந்நாள் செக் குடியரசின், தேசிய விடுமுறை நாளாக உள்ளது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வென்சஸ்லாசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. எளியவர் வறியவரிடத்தில் இரக்கம்

தூய வென்சஸ்லாசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, அவர் எளியவர் மற்றும் வறியவர் பால் கொண்டிருந்த அன்பும் இரக்கமும் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. தூய வென்சஸ்லாசைப் போன்று நாம் எளியவரிமும் வறியவரிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் எளியவரையும் வறியவரையும் கண்டும் காணாமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலை மாறவேண்டும்.

ஓர் ஊரின் ஆற்றங்கரையோராமாய் இருந்த ஓர் ஆலமரத்தடியில் துறவி ஒருவர் இருந்தார். அவரது செயல்கள் வார்த்தைகள் யாவுமே ஞானம் நிறைந்தவையாய் இருந்தன. ஆனால், அவரிடம் ஒரு கெட்டபழக்கம் இருந்தது. அது என்ன கெட்ட பழக்கம் என்றால் திருடுவது. திருடுகின்ற அவர் மாட்டிக்கொள்வார். அதனால் சிறை செல்வார். சிறையிலிருந்து திரும்பிவருவார். மீண்டுமாகத் திருடுவார், மாட்டிக்கொள்வார். இப்படியே அவர் திருடுவதும் மாட்டிக்கொள்வதும் வழக்கமாக இருந்தாது.

ஒருநாள் அவரிடத்தில் வந்த ஒருவர், “மகா மாகான் நீங்கள்! இப்படிச் சின்னச் சின்னத் திருட்டு வேளைகள் செய்கிறீர்களே?” திருடும்போது மாட்டிக்கொள்வேன் என்ற பயம் உங்களுக்கு இல்லையா? ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, “சிறிது சிறிதாய் திருடுகிற நான் காரணமில்லாமல் திருடுவதிலை, திருக்கின்ற என்னை காவல்துறையினர் பிடித்து சிறையில் அடைகின்றனர். அப்போது நான் அங்கே இருப்பவர்களை நல்வழிப்படுத்தி வெளியே அனுப்புகிறேன். இதனை நான் ஒவ்வொருமுறையும் செய்கிறேன்” என்று சொன்ன அவர் தொடர்ந்து அவரிடம், “வெளியே இருப்பவர்களைவிட உள்ளே இருப்பவர்களுக்கு என்னுடைய உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் நான் சிறுசிறு திருட்டு வேளைகளில் ஈடுபடுகிறேன்” என்றார்.

சிறையில் இருக்கின்ற கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கு அந்தத் துறவி உள்ளன்போடு மேற்கொள்கின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. நாம் நம்மோடு வாழ்கின்ற எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் நம்மாலான உதவிகளைச் செய்வது சிறப்பானது.

ஆகவே, தூய தூய வென்சஸ்லாசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்த நாம், அவரைப் போன்று ஏழை, எளியவர், வறியவர் பால் உண்மையான அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இயேசுவுக்கு சான்று பகர்வோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

image