St. Michael, Gabriael, Raphael

செப்டம்பர் 29

அதிதூதர்களான தூய மிக்கேல் தூய கபிரியேல் தூய ரபேல்

mary

அதிதூதர்களான தூய மிக்கேல் தூய கபிரியேல் தூய ரபேல்

நிகழ்வு

ஒருசமயம் திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது திடிரென மூர்ச்சையானார். மக்கள் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் திருத்தந்தை இறக்கவில்லை, மாறாக ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் அதிதூதர் மிக்கேல் சாத்தானோடு போர் தொடுத்து வெற்றிக்கொண்டார். இந்தக் காட்சியைக் கண்டபிறகு அவர் விழித்தெழுந்து தூய மிக்கேல் அதிதூதருக்கு ஒரு ஜெபத்தை எழுதினார். அந்த ஜெபம் இதுதான்: அதிதூதரான தூய மிக்கேலே! எங்கள் போராட்டத்தில் எங்களைக் காத்தருளும். சாத்தானின் வஞ்சக தந்திரங்களில் எங்களுக்குத் துணையாயிரும்; தாழ்மையான எங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, எல்லாம் வல்ல இறைவன் சாத்தனைத் தண்டிப்பாராக; வான் படையின் தலைவரே, ஆன்மாக்களைக் கெடுக்க இவ்வுலகில் சுற்றித் திரியும் சாத்தானையும் மற்ற தீய ஆவிகளையும் இறை வல்லமையால் நரகத்தில் தள்ளுவீராக – ஆமென்.

இந்த ஜெபத்தை அவர் எழுதி முடித்துவிட்டு, மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தீமைகளும் சோதனைகளும் வரும்போது இச்செபத்தைச் சொல்லி மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்.

வானதூதர் என்பவர் யார்?

அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் முதலில் வானதூதர்கள் யார் என அறிந்துகொள்வோம். வானதூதர் என்பவர் யார் என்பதற்கு தூய அகுஸ்தினார் இவ்வாறு விளக்கம் தருவார், “வானதூதர் என்பது இயல்பு கிடையாது, மாறாக செய்யக்கூடிய பணி. வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று எப்போதும் அவரைப் புகழ்ந்துகொண்டிருப்பவர்கள்; அவர்கள் கடவுள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றக் கூடியவர்கள்; தீமைக்கெதிரான போராட்டில் நம்மோடு உடன் இருப்பவர்கள்”. தூய கிரகோரியார் வானதூதர்களை அவர்கள் செய்யக்கூடிய பணிகளை வைத்து இரு வகைப்படுத்துவார். முக்கியமான பணிகளைக் செய்பவர்களை வானதூதர்கள் என்றும், மிக முக்கியமான பணிகளைச் செய்பவர்களை அதிதூதர்கள் என்றும் அவர் குறிப்பிடுவார்.

மிக முக்கியமான பணிகளைச் செய்ய அதிதூதர்கள் எழுவர் இருப்பதாக திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத ஏனோக் நூலில் வாசிக்கின்றோம். அவர்களுடைய பெயர்கள் பின்வருவனவாகும் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், சீத்தியேல், ஜுகுதியேல், பரசியேல். அந்த ஏழு அதிதூதர்களில் மூவரின் பெருவிழாவை இன்று திருச்சபையானது நினைவுகூறுகின்றது. அவர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிக்கேல்

மிக்கேல் என்றால் ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் (தானி 10:13, 12:11), தூய யூதா புத்தகத்தில், மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக் குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும் என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம் (யூதா 1:8,9). எதற்காக சாத்தான் மோசேயின் உடலைப் புதைக்கவேண்டும் என்று வாதிட்டது என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் விளக்கம். சாத்தான் சொல்வதுபோன்று மோசேயின் உடலை புதைக்கும் பட்சத்தில் மக்கள் அவரைக் கடவுளாக வழிபடத் தொடங்கிவிடுவார்கள். அதுவே மிகப்பெரிய பாவம் ஆகிவிடும் என்பதற்காகத்தான் மிக்கேல் சாத்தானைக் கடிந்துகொள்கிறார்.

திருவெளிப்பாடு நூலில் மிக்கேல் சாத்தானோடு போரிட்டு வெல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒரு சமயம் விண்ணகத்தில் கடுமையான போர் மூழ அந்தப் போரில் ஒரு பக்கம் அரக்கப் பாம்பும் (அலகை) அதன் தூதுவர்களும் இன்னொரு பக்கம் தலைமைத் தூதரான தூய மிக்கேலும் அதன் தூதுவர்களும் நின்று போரிட்டார்கள். மிக்கேல் அதிதூதரோடு போரிட்ட இந்த அலகை வேறு யாரும் கிடையாது தொடக்கத்தில் கடவுளை எதிர்த்து நின்ற லூசிபர் என்ற சாத்தான்தான். அப்படிப்பட்ட அலகைதான் இங்கே மிக்கேலுக்கும் அதன் தூதர்களுக்கும் எதிராக நின்றது. இரு தரப்புக்கும் இடையே கடுமையாக நடைபெற்ற அந்தப் போரில் இறுதியில் மிக்கேலும் அதன் தூதர்களுமே வென்றார்கள். இதனால் அலகையும் அதன் தூதர்களும் விண்ணகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். அவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லாது போனது (திவெ 12: 7-9)

மிக்கேல் அதிதூதருக்கு விழா எடுத்தும் கொண்டாடும் வழக்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. 404 ஆம் ஆண்டில் சிபான்றோ என்ற இடத்தில் அதிதூதர் மிக்கேல் காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் மக்கள் ஒரு கெபி கட்டி வழிபட்டு வந்தார்கள். இந்த நேரத்தில் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஆயர் அதிதூதர் மிக்கேலிடம் மன்றாட, மிக்கேல் அதிதூதர் அவரிடம், “நீங்கள் எதைக் குறித்தும் கவலைகொள்ளவேண்டாம், நாளைய நாளில் எதிரி நாட்டினர் இங்கு வரும்போது அவர்கள் திக்குத் தெரியாமல் ஓடுவார்கள்” என்று வாக்குறுதி கொடுத்தார். அதேபோன்று அடுத்த நாள் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது படையெடுத்து வந்தபோது பெரும் காற்றும் இடியும் மின்னலும் வெட்டி, அவர்கள் திசை தெரியாமல் ஓடிப்போனார்கள். அன்றிலிருந்தே மக்கள் மிக்கேல் அதிதூதரை தங்களுடைய பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள்.

மிக்கேல் அதிதூதர் தொடக்கத்திலிருந்தே திருச்சபையின் பாதுகாவலராக இருந்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் அவர் சாத்தானை எதிர்த்து போரிடுபவராகவும், சாவிலிருந்து ஆன்மாக்களை விடுவிப்பவராகவும், வெற்றிவீரராகவும், இறுதித்தீர்ப்பின்போது மானிட மகனோடு உடன் வருபவராகவும் இருக்கின்றார்.

கபிரியேல்

அதிதூதர்களில் இரண்டாம் ஆளாகிய கபிரியேல் என்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் என்பது அர்த்தமாகும். கபிரியேல் தூதரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் லூக்கா நற்செய்தியிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் கபிரியேல் தூதர் தானியேலுக்குத் தோன்றி அவர் கண்ட காட்சியின் உட்பொருளை விளக்கிக்கூறுகின்றார் (தானி 9:21). லூக்கா நற்செய்தியில் சக்கரியாவிற்கும், மரியாவிற்கும் தோன்றி முறையே திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் இயேசுவின் பிறப்பையும் குறித்து எடுத்துச் சொல்கிறார். கபிரியல் தூதர் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செய்வதால், அவர் தொலை தொடர்புச் சாதனங்களுக்குப் பாதுகாவலராக இருக்கின்றார்.

ரபேல்

மூன்றாம் அதிதூதரான ரபேல் என்பதற்கு ‘ஆண்டவர் குணப்படுத்துகிறார்’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து நாம் தோபித்து புத்தகம் முழுவதும் வாசிக்கின்றோம். மிதியா நோக்கிய பயணத்தில் தோபித்தோடு ஒரு வழிபோக்கரைப் போன்று பயணித்து, கொடிய மீனிடமிருந்து அவரைக் காப்பாற்றி, தோபித்து மணந்துகொள்ள இருந்த சாராவிடமிருந்து தீய ஆவியை விரட்டி, இறுதியாக தோபித்துவின் தந்தை தொபியாசுகு பார்வை கொடுக்கிறார் இந்த ரபேல் அதிதூதர். தனக்குப் பணிக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, ரபேல் அதிதூதர் அவர்களிடம், “நான் இரபேல்!, ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வான தூதர்களுள் ஒருவர்” என்று தன்னை வெளிப்படுத்துகிறார் (தோபி 12:15)

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தீமைக்கெதிரான போராட்டம்

தென்காசியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நடைபெற்றதாக பாரம்பரியாகச் சொல்லப்படும் நிகழ்வு. ஒரு சமயம் தூய மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனியின்போது நாத்திகர் பலர் இழிவான காரியங்களைச் செய்தார்கள். அன்றிரவே அவர்கள் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள். அதனால் நிறையப் பெண்கள் தங்களுடைய தாலிகளை இழந்து கைம்பெண்கள் ஆனார்கள். அப்பெண்களின் தாலி ஒரு நாழி அளவு பிடித்தது. இதைப் பார்த்து பயந்துபோன நாத்திகர்கள் தூய மிக்கேல் அதிதூதரிடம் மன்னிப்புக் கோரி, ஆத்திகர்கள் ஆனார்கள். இப்படி நிறையப் பெண்களின் தாலி அறுத்ததால் தூய மிக்கேல் அதிதூதரை நாழி அளவு தாலி அறுத்த தூய மிக்கேல் அதிதூதரே எனவும், நாத்தினரும் ஆத்திகராக மாறி, கடவுளை வழிபட்டதால் தூய அதிதூதர் கோவில் சர்வேசுவரன் கோவில்’ என இன்றளவும் அழைக்கப்படுகின்றது.

அதிதூதர்(கள்) எப்போதும் தீமைக்கெதிரான போராட்டத்தில் நமக்கு முன்னின்று போராடுபவராக (களாக) இருக்கின்றார்(கள்) என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. அவர்களது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவர்களைப் போன்று தீமையை எதிர்த்து போரிடுபவர்களாக இருக்கவேண்டும் என்பது இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கின்றது.

நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எத்தனையோ தீமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. லஞ்சம், ஊழல், சாதி, வன்முறை, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு போன்றே பல்வேறு தீமைகளை நாம் துணிவோடு எதிர்த்துப் போராடி, நாம் வாழும் இந்த பூமியில் இறைவனின் ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்யும்போது உண்மையிலே இவ்விழாவைக் கொண்டாடுவதில் முழுமையான அர்த்தம் இருக்கின்றது. ஆகவே, அதிதூதர்களின் விழா நாளில் அவர்களைப் போன்று கடவுளுக்குத் தொண்டு செய்து வாழ்வோம், தீமைக்கெதிரான போராடத்தில் எப்போப்தும் நாம் இறைவன் பக்கம் நின்று போராடி வெற்றிகொள்வோம்; இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

 

image