St. Jan Beyzyam Holy Guardian Angels

அக்டோபர் 2

தூய காவல் தூதர்கள்

mary

தூய காவல் தூதர்கள் நினைவு

நிகழ்வு
ஒருமுறை சிரியா நாட்டு அரசன் ஆண்டவரின் அடியாரும் இறைவாக்கினருமாகிய எலிசாவை பிடித்துவர அவர் இருந்த இடத்திற்கு தன்னுடைய படைவீரர்களை அனுப்பி வைத்தான். படைவீரர்களும் அவர் இருந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டார்கள். அடுத்தநாள் காலையில் இறைவாக்கினர் எலிசாவின் வேலையாள் படைவீரர்கள் அவர்களைச் சூழ்ந்திருந்திருப்பதைக் கண்டு, பயந்துபோய் எல்லாவற்றையும் எலிசாவிடம் சொன்னார். அதற்கு எலிசா, "அஞ்ச வேண்டாம், அவர்களோடு இருப்பவர்களை விட நம்மோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்" என்றார். பின்னர் எலிசா, "ஆண்டவரே! இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!" என்று வேண்டினார். அப்போது ஆண்டவர் வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். வேலைக்காரன் தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்தபோது, மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.

இதற்கிடையில் சிரியா நாட்டினர் எலியா இறைவாக்கினரைச் சூழ்ந்து வந்த பொழுது எலிசா ஆண்டவரை நோக்கி, "இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே, ஆண்டாவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார். பின்னர் எலிசா அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதரிடம் நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, "ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதைக் அவர்கள் கண்டார்கள். தாங்கள் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள், அதன்பின் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலேடுத்துக் கூட வைக்கவில்லை.

ஆண்டவரின் தூதர்கள் - காவல் தூதர்கள் - எப்படி நம்மைக் காப்பாற்றுகிறார்கள் என்பதற்கு விவிலியத்தில் வரும் இந்த நிகழ்வு ஒரு சான்று.

வரலாற்றுப் பின்னணி
"நம்முடைய ஆன்மா மிகவும் முக்கியமானது என்பதால், அதனைப் பாதுகாக்க இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதரை நியமித்திருக்கிறார்" என்பார் விவிலிய அறிஞரான தூய எரோனிமுஸ். ஆம், நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதர் உண்டு என்பது ஆழமான உண்மை. காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கின்றது.

1582 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வலேன்சியா என்னும் இடத்தில்தான் முதன்முறை காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் வந்தது. 1608 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் இதனை இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார். திருத்தந்தை பத்தாம் கிளமேண்டோ இவ்விழாவை அக்டோபர் 02 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரோ இவ்விழாவை ஒரு பெருவிழாவைக் போன்று கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் காவல்தூதர்களின் விழாவாகும்.

காவல்தூதர்கள் செய்யும் பணிகள்
விவிலிய அறிஞரான ஜேம்ஸ் ஆல்பரியோனே (James Alberione) என்பவர் காவல்தூதர்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்று பின்வருமாறு வரிசைப்படுத்துவார். அவை என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

1. காவல்தூதர்கள் நம்மைக் காக்கின்றார்கள்
காவல்தூதர்கள் செய்யும் முதன்மையான பணி நம் ஒவ்வொருவரையும் தீமைகளிலிருந்தும், பகைவர்களின் பிடியிலிருந்தும் காப்பதாகும். இதனை திருப்பாடல் 91:11 ல் மிகத் தெளிவாக நாம் வாசிக்கின்றோம். "நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று. புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்த தூய பவுலும் காவல்தூதர்களின் பாதுகாப்பை தன்னுடைய வாழ்வில் உணர்ந்தார். அதனைத்தான் "அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும். உம்மோடு கூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகின்றார்" (திப 27:24) என்று வானதூதர் பவுலடியாருக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.


2. காவல்தூதர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள்
காவல்தூதர்கள் நம்மைத் தீமையிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், நல்வழியில் வழிநடத்தவும் செய்கிறார்கள். விடுதலைப் பயண நூல் 32:34 ல் வாசிக்கின்றோம், "இதோ என் தூதர் உம் முன்னே செல்வார்" என்று ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் கூறுகின்றார். ஆகவே, நாம் கடவுளுடைய வழிநடத்துதலை காவல்தூதர்கள் வழியாக உணர்ந்துகொள்வோம்.

3. காவல்தூதர்கள் நமக்காக பரிந்துபேசுகிறார்கள்
காவல்தூதர்கள் நம்மைப் பாதுகாத்து வழி நடத்துவதோடு மட்டுமல்லாமல், நமக்காகப் பரிந்தும் பேசுகிறார்கள். எப்படியென்றால் வானதூதர்கள் இறைவன் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நம்மோடும் உடன் இருக்கிறார்கள். ஆகவே நம்முடைய தேவைகளை அறிந்து, அதனை இறைவன் திருமுன் எடுத்துச் சென்று, அவரிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். யோபு புத்தகத்தில் யோபுவின் நண்பரான எளிகுவின் வார்த்தையான "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்" (யோபு 33: 24-26) என்பதில் இருந்து இதனை அறிந்துகொள்கிறோம்.

ஆகவே, நம்மை வழிநடத்தும், பாதுகாக்கும், நமக்காக பரிந்து பேசும் காவல்தூதர்கள் நம்மோடு இருக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்வதே மிகச் சிறந்த செயலாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
காவல்தூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தித்துப் பார்ப்போம்.

காவல்தூதர்களைத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம்
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் காவல்தூதரைத் தந்திருக்கிறார் என்றால் அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியமாக இருக்கின்றது. எனவே, இவ்விழா நாளில் காவல்தூதர்களை நமக்குத் தந்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் காவல்தூதர்களின் - கடவுளின் - மனம்நோகாதவாறு இருக்க கடவுளுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

�மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image