St. Francis of Assisi Bl. Francis Xavier Seelos St. Gaius

அக்டோபர் 4

தூய பிரான்சிஸ் அசிசியார்

mary

தூய பிரான்சிஸ் அசிசியார் (அக்டோபர் 04)

நிகழ்வு

பிரான்சிஸ் அசிசியார் இஸ்லாமிய மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காக அவர் பல முறை முயற்சி எடுத்தார். 1212 ஆம் ஆண்டு அவர் சிரியா நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது நோயினால் பாதிக்கப்பட்டு திரும்பி வந்துவிட்டார். 1214 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. 1218 ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது, அங்கிருந்த படைவீரர்கள் அவரை ஒற்றர் என நினைத்து, அந்நாட்டு மன்னர் மாலிக் எல் கமில் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

மன்னர் பிரான்சிஸ் அசிசியாரைப் பார்த்த மறுகணமே அவர் ஒற்றர் அல்ல, மாறாக அவர் ஓர் இறையடியார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். பின்னர் மன்னர் அசிசியாரிடம் வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்டு அறிந்துகொண்டார். அசிசியார் அவரிடம், “நான் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வந்திருக்கிறேன்” என்று எடுத்துச் சொன்னார். அதன்பிறகு அசிசியார் அவரிடம், தான் வணங்கும் கடவுள் சாதாரணமானவர் அல்ல, அவர் எல்லாம் வல்ல கடவுள் என்று எடுத்துச் சொன்னார். மன்னருக்கு அசிசியாரின் பேச்சு பிடித்துப் போகவே, அசிசியாரை மன்னர் தன்னுடைய நண்பராகவே பார்க்கத் தொடங்கினார். மன்னர் அசிசியாருக்கு தன்னுடைய நாட்டியல் நற்செய்தி அறிவிக்கும் அங்கீகாரமும் கொடுத்தார். அசிசியார் சிறுது காலம் எகிப்தில் நற்செய்தி அறிவித்துவிட்டு தன்னுடைய சொந்த மண்ணுக்குத் திரும்பினார்.

வாழ்க்கை வரலாறு

பிரான்சிஸ் 1182 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள அசிசி நகரில் பிறந்தார். இவருடைய தந்தை பெர்னார்தோனே, தாய் பிகா என்பவர் ஆவார். பிரான்சிசின் தந்தை துணி வியாபாரம் செய்யும் ஒரு வணிகர். ஆகையால், பிரான்சிஸ் செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்தார். பிரான்சிசுக்கு சிறு வயதில் ஒரு போர் வீரனாக மாறவேண்டும் என்ற ஆசை. அதனால் அவர் பெருசியாவுக்கு எதிரான போரில் ஆயுதம் ஏந்திப் போரிட்டார். ஆனால் அவர் துரதிஸ்ட வசமாக கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைதண்டனையை அனுபவித்தார். ஓராண்டுக்குப் பிறகு அவர் எதிரி நாட்டவரிடமிருந்து விடுதலை ஆகி தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

ஒருநாள் அவர் குதிரையில் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் குளிரில் நடுங்கிகொண்டிருந்த ஒரு தொழுநோயாளரைக் கண்டு மனமிரங்கினார். உடனே அவர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அந்தத் தொழுநோயாளியைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். அதுமட்டுமல்லாமல் தான் உடுத்தியிருந்த விலையுயர்ந்த ஆடையையும் கழட்டிக்கொடுத்து விட்டு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிற்கு வந்த அசிசியார் அங்கிருந்த விலையுயர்ந்த ஆடைகள், துணிமணிகள் எல்லாவற்றையும் எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கத் தொடங்கினார். இதைக் கேள்விப்பட்ட பிரான்சிசின் தந்தை அவரை, “நீ என்னுடைய மகன் என்று அழைக்கப்படக் கூட தகுதியற்றவன்” என்று சொல்லி அவரைக் கடுமையான வார்த்தைகளினால் திட்டினார். அதற்கு பிரான்சிசோ தான் உடுத்தியிருந்த ஆடையையும் அவரிடம் கழற்றிக்கொடுத்துவிட்டு, நிர்வாணமாக வீதிகளில் நடந்துசென்றார். இதைக் கண்ட அந்நகரில் இருந்த ஆயர் அவரிடம் இருந்த போர்வையை எடுத்து, அவருக்குப் போர்த்தி அனுப்பினார்.

தன்னுடைய வீடு, பெற்றோர் உடைமைகள் அனைத்தையும் துறந்த பிரான்சிஸ் எளிமை கோலம் பூண்டு, நகரில் இருந்தவர்களிடம் பிச்சை எடுத்து, அதனை உண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் அசிசி நகரில் இருந்தவர் அனைவர்க்கும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இந்த நேரத்தில் அதாவது 1206 ஆம் ஆண்டு அவர் தமியானோ ஆலயத்தில் வேண்டிக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இயேசு அவரிடத்தில் பேசத் தொடங்கினார். “பிரான்சிஸ் என்னுடைய ஆலயம் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை நீ சரிசெய்வாயா?”. ஆண்டவரின் இக்குரலைக் கேட்ட பிரான்சிஸ் தமியானோ ஆலயத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்காக அவர் மக்களிடம் இருந்து நிதி திரட்டி அந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார். அசிசியார் வானதூதர்களின் அரசி ஆலயத்தையும் இன்னும் ஒரு சில ஆலயத்தையும் கட்டி முடித்தார்.

பிரான்சிசின் வாழ்க்கை முறையைப் பார்த்த நிறைய இளைஞர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஒரு சமயம் அவர் ஓர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியை பங்கேற்றிருந்தார். அப்போது குருவானவர், “பொன் வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” (மத் 10: 9-10) என்ற இறைவார்த்தையை வைத்து மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். இவ்வார்த்தைகள் பிரான்சிசின் உள்ளத்தைத் தைத்தது. உடனே அவர் இதைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். பின்னர் ஆண்டவர் இயேசு சொன்னதுபோன்று தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல், எளிமையான வாழ்க்கை வாழத் தொடங்கினார். பிரான்சிஸ் தன்னை பின்பற்றி வந்தவர்களை வைத்து ‘சிறிய சகோதரர்கள்’ என்னும் சபையைத் தொடங்கினார். இதற்கான ஒப்புதலை முறைப்படி பெற அவர் 1208 ஆம் ஆண்டு, உரோமை நகருக்குச் சென்று, திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்டை சந்தித்து ஒப்புதல் பெற்று வந்தார்.

அசிசியார் சபையில் பெண்களும் சேரத் தொடங்கினார்கள். கிளாரா என்ற பெண்மணிதான் முதன்முறையாகச் சேர்ந்தார். எனவே பிரான்சிஸ் பெண்களுக்கு என்று ‘ஏழைப் பெண்கள் சபை’யைத் தோற்றுவித்தார். பொதுநிலையினருக்கு எனவும் ஒரு சபையைத் தோற்றுவித்தார். அது இன்றைக்கு பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என அழைக்கப்படுகின்றது. தூய பிரான்சிசும் அவருடைய சபையைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். அதனால் அவருடைய சபையில் சேர்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே வந்தது.

பிரான்சிஸ் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தின் முன்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து ஜெபிப்பார்; அவருடைய பாடுகளை நினைத்து கண்ணீர் விட்டு அழுவார். சில நேரங்களில் இயேசுவின் மீது கொண்ட அன்பினால், பாடுபட்டு சிரூபத்திற்கு முன்பாகச் சென்று, அவரை சிலுவையிலிருந்து கீழே இறக்குவதுபோல் காட்சி காண்பார். இன்னொரு சமயம் அவர் லா வேர்னாவில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஐந்து காய வரங்களைப் பெற்றார். அக்காயங்களால் அவர் பெரிதும் வேதனை அடைந்தார். இறந்தாலும் இயேசுவின் பாடுகளில் தானும் கலந்துகொள்கிறேன் என்று மகிழ்ச்சி அடைந்தார். பிரான்சிஸ்க்கு முகமதியர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அதற்காக அவர் சிரியா, மொரோக்கோ, எகிப்து போன்ற நாடுகளுக்கும் சென்று, நற்செய்தி அறிவித்து வந்தார்.

1223 ஆம் ஆண்டு புதிய முயற்சியாக பிரான்சிஸ் கிறிஸ்மஸ் குடிலை அமைத்தார். அதில் இயேசு, மரியா, யோசேப்பு அவர்களோடு சேர்த்து கழுதை, ஆடு மாடுகள் போன்றவற்றையும் வைத்து கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினார். அவர் இயற்கையின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் சூரியனை சகோதரன் எனவும், நிலவைச் சகோதரி எனவும், யூமியைத் தாய் எனவும் அழைத்து வந்தார். அவர் இயற்கையின் மீது அன்பு கொண்டிருந்ததனால்தான் என்னவோ பறவைகள் கூட அவருடைய தோளில் தங்கின, காட்டில் அவர் நடந்து சென்றபோது கொடிய விலங்குகளும் அவருக்கு வழிவிட்டன.

இப்படி இயற்கையை நேசிப்பவராய், ஏழைகளை அன்பு செய்பவராய் வாழ்ந்து வந்த பிரான்சிஸ் தன்னுடைய நாற்பத்தி நான்காம் வயதில் 1226 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்தார். அவர் இறந்த அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அசிசியாரை மறு கிறிஸ்து என அன்போடு அழைப்பார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்சிஸ் அசிசியாருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழைகளிடத்தில் அன்பு

பிரான்சிஸ் அசிசியார் ஏழைகளிடத்தில் அதிகமான அன்பு கொண்டிருந்தார். எந்தளவுக்கு என்றால், ஒரு சமயம் அவர் சியென்னாவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது பாதையில் பிச்சைக்காரர் ஒருவரைக் கண்டார். அவர் மிகவும் கிழிந்த ஆடையோடு இருந்தார். அதைக் கண்ட பிரான்சிஸ் அசிசியார் தன்னிடம் இருந்த கொஞ்சம் கிழிந்த ஆடையை அவருக்கு உடுத்தக் கொடுத்து, அவருடைய மிகவும் கிழிந்த ஆடையை எடுத்துப் போர்த்திக்கொண்டார். இதைக் கண்ட ஒருவர் அசிசியாரிடம் எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு அவர், “நம்மை விட வறியவர் ஒருவரைக் கண்டால், அவருக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் அது மிகப் பெரிய பாவம்” என்றார். பிரான்சிஸ் அசிசியார் எப்போதும் ஏழை எளியவரிடத்தில் அதிக அன்பு கொண்டு வாழ்ந்து வந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. நாம் ஏழை எளிய மக்களிடத்தில் உண்மையான அன்போடு இருக்கின்றோமா? அவர்களுக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் யாரைப்பற்றியும் அக்கறையில்லாது வாழ்ந்து வந்த பையனுக்கு, அவனுடைய தந்தை பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே வந்தார். ஆனால் அவனோ தந்தையின் அறிவுரைக்கு செவிகொடுக்காமல், அவருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். ஒருநாள் அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து, அதில் கொஞ்சம் பாலை ஊற்றி, “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை. இதில் நான் யாரைக்குறித்து அக்கறை கொள்ளவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு தந்தை சிறிது சக்கரையை எடுத்து அதில் கலந்தார். பின்னர் அவர் அவனிடம், “சமூக அக்கறை என்னும் சக்கரை இல்லாமல் பால் எனப்படும் வாழ்க்கை இனிக்காது” என்றார். தந்தையின் அறிவுரையைக் கேட்டு மனம்மாறிய மகன் அதன் பிறகு சமூக அக்கறையோடு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினான்.

நாம் அடுத்தவர் மட்டில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கிறபோது நம்முடைய வாழக்கை இனிக்கும் என்கிற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் கூட ஆண்டவர் இயேசு, “நீங்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருகிறீர்கள்?” (மத் 5:13,14) என்று சொல்வார். ஆகவே தூய பிரான்சிஸ் அசிசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று எளிய வாழக்கை வாழ்வோம். ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், இந்த உலகிற்கு ஒளியாக உப்பாக மாறுவோம், இயற்கையை நேசிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


பிரான்சிஸ் அசிசியாரின் ஜெபம்

இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;

எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்

எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்

எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்

எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையையும்

எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்

எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்

விதைத்திட அருள்புரியும்.

என் இறைவா, ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும்

புரிந்து கொள்ளப்படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்

அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்.

ஏனெனில், கொடுப்பதில் யாம் பெறுவோம்;

மன்னிப்பதில் மன்னிக்கப்பெறுவோம்;

இறப்பதில் நித்திய வாழ்வடைவோம். ஆமென்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image