St. Justina St. Osyth
St. Sergius & Bacchus Our Lady of Rosary

அக்டோபர் 7

J}a

mary

தூய ஜெபமாலை அன்னை (அக்டோபர் 07)

நிகழ்வு

1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே லாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறிஸ்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கைகளில் ஜெபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் ஜெபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை அன்னை மரியின் வெற்றியின் விழா என்று கொண்டாடப் பணித்தார்.

வரலாற்றுப் பின்னணி

ஜெபமாலை சொல்லும் வழக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் அல்பிஜீயன்ஸ் என்ற தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு அதிகமாக ஊறுவிளைவித்து வந்தது. இதை எதிர்த்து டொமினிக் எனப்படும் சாமிநாதர் அதிகமாகப் போராடி வந்தார். ஆனாலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே அவர் காட்டிற்குச் சென்று கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தவ முயற்சிகளை மேற்கொண்ட மூன்றாம் நாளில் மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்த ஜெபமாலையை வைத்து நம்பிக்கையோடு ஜெபி, நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். மரியா சொன்னதற்கு ஏற்ப சாமிநாதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் அல்பிஜீனியன்ஸ் என்ற தப்பறைக் கொள்கையை பின்பற்றி வந்த மக்கள் மனம்மாறி இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு ஜெபமாலை சொல்லும் வழக்கம் மக்களிடத்தில் அதிகமாகப் பரவி வந்தது.

ஆலன் ரோச் என்ற புனிதர் ஜெபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தார். ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் படையை செபமாலையின் துணைகொண்டு வெற்றிகொண்டதால் செபமாலையின் மீது மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். 1715 ஆம் ஆண்டு இவ்விழா உரோமைத் திருச்சபையின் விழா அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில் ஜெபமாலை சொல்வது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. ஜெபமாலை சிறியவர்களும் வயதானவர்களும் சொல்லவேண்டியது அது எல்லாருக்கும் உரித்தானது அல்ல என்பது போன்ற விமர்சனங்களும் வந்தன. இந்த நேரத்தில்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 தேதி வரை லூர்து நகரில் மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி கொடுத்ததில் ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் ஜெபமாலை என்பது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் சொல்லவேண்டியது அல்ல, அது எல்லாரும் சொல்லவேண்டியது என்ற வழக்கம் உருவாகியது. 1917 ஆம் ஆண்டு பாத்திமா நகரில் அன்னை மரியா ஜெசிந்தா, லூசியா, பிரான்சிஸ்கா என்ற மூன்று சிறுமிகளுக்குக் காட்சிகொடுத்தபோது தன்னை ஜெபமாலை அன்னை என்றே வெளிப்படுத்தினார். அப்போது அவர் அவர்களிடம் ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார். இவ்வாறு ஜெபமாலை பக்தி திருச்சபையில் படிப்படியாக வளர்ந்தது. 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் இவ்விழாவை திருச்செபமாலையின் அன்னை விழா என அறிவித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.

ஜெபமாலை சொல்வது என்பது, ஏதோ சொன்ன ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்வது கிடையாது. நாம் ஜெபமாலை சொல்கிறது இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, அவருடைய உயிர்ப்பு ஆகியவற்றை மரியாவின் வாழ்வோடு இணைத்து தியானிக்கின்றோம். அது மட்டுமல்லாமல் ஜெபமாலையை நாம் சொல்லி ஜெபிக்கின்றபோது நம்முடைய ஐம்புலன்களும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குகின்றன. அதலால் இதனை ஒரு மிகச் சிறந்த பக்தி முயற்சி என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தூய லூயிஸ் தே மான்போர்ட் என்பவர் செபமாலையைக் குறித்து இவ்வாறு கூறுவார், “ஜெபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலுமாக நீங்கும். இறையருள் நமக்கு மேலும் மேலும் பெருகும்” என்று. திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரோ, “ஜெபமாலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனைச் சொல்லி ஜெபிக்கின்றபோது மீட்பின் வரலாற்றை நினைவுகூறுகின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்த ஜெபத்தினை நினைவுகூறுகின்றோம்; வானதூதர் கபிரியேல் மரியாவிற்குச் சொன்ன மங்கள வார்த்தையை நினைவுகூறுகின்றோம்” என்பார்.

ஆகவே, நாம் அனுதினமும் சொல்லக்கூடிய செபமாலையின் உட்பொருளையும் வல்லமையையும் உணர்ந்தவர்களாய் நம்பிக்கையோடு ஜெபமாலை சொல்லி ஜெபிப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஜெபமாலை சொல்வோம் ஜெயம் பெறுவோம்

“மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்” என்று ஜெபமாலையைக் குறித்து வீரமாமுனிவர் கூறுவார். ஆம், ஜெபமாலையை நாம் இடைவிடாது, நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது அதனால் மீட்புப் பெறுகின்றோம் என்பது உறுதி. ஆகவே, நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில், குடும்ப ஜெபங்களில் ஜெபமாலையை நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அருட்தந்தை பாட்ரீக் பேயீடன் என்பவர். இவர் 1938 ஆம் ஆண்டு காசநோயினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவருடைய நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் இவருடைய சகோதரியின் தூண்டுதலின் பேரில் இவர் அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு ஜெபமாலை செபிக்கத் தொடங்கினார். அதற்கான பலனை அவர் விரைவிலே கண்டுகொண்டார். ஆம், அவருடைய உடலில் இருந்த நோய் முற்றிலுமாக நீங்கியது. அவரது உடல் நலனை பார்த்த மருத்துவர்கள் வியந்துபோய் நின்றார்கள்.

நாம் அனுதினமும் சொல்லக்கூடிய ஜெபமாலைக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

அன்னை மரியா தூய ஆலன் ரோச் என்பவருக்குக் கொடுத்த காட்சியில் ஜெபமாலையை அனுதினமும் ஜெபித்து வருவோர் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைக் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த நன்மைகள் பின்வருபவை ஆகும்:
ஜெபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர். ஜெபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். ஜெபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
ஜெபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.

மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் ஜெபமாலை செபிப்பவன் அகாலமரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன் அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான். ஜெபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். ஜெபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.

ஜெபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன். ஜெபமாலை நரகத்திற்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.ஜெபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன் திருச்சபையின் திருவருட்சாதனங்களை பெறாமல் சாகான்.

ஜெபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உதவி பெறுவர். ஜெபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.

ஜெபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில சிறப்பான வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஜெபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள். என் ஜெபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.

என் ஜெபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும். (Courtesy: ‘செபமாலையின் ரகசியம்’ - தூய லூயிஸ் மரிய மான்போர்ட்).

ஆகவே, இத்தகைய வல்லமை நிறைந்த ஜெபமாலையை நாம் அனுதினமும் நம்பிக்கையோடு ஜெபிப்போம், அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image