St. Demetrius St. Thais St. Pelagia

அக்டோபர் 8

தூய பெலகியா

mary

தூய பெலகியா (அக்டோபர் 08)

யோவான் கைதுசெய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார் (மாற் 1: 14,15)


பிறப்பு 14 ஆம் நூற்றாண்டு(?)

இறப்பு 14 ஆம் நூற்றாண்டு,
அந்தியோக்கியா

இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழந்தார். இவர் அந்தியோக்கியாவில் சிறந்த நடிகையாக இருந்தார். அப்போது பெலாகியா தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தார். அச்சமயத்தில் ஒருநாள் அந்தியோக்கியாவில் நடித்துகொண்டிருக்கும்போது குருவாக இருந்த புனித நானூஸ் (St. Nannus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாகியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது. உடனே நடிக்கும் பணியை விட்டு விட்டு , நானூஸ் போதித்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று, அவரின் மறையுரையை கேட்டார்.

அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது. அவர் மனமுடைந்து, நானூஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். பின்னர் மனமாற்றம் பெற்று, திருமுழுக்குப் பெற்று, தனது நடிகைப் பணியை விட்டு விட்டு, கடவுளுக்காக வாழ முடிவெடுத்தார். தன்னிடமிருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். அந்தியோக்கியாவிலிருந்து வெளியேறி, ஆண்கள் உடுத்தும் துறவற உடையை அணிந்து வாழ்ந்தார்.

பின்னர் எருசலேமிலிருந்த ஒலிவியட் (Olivette) என்றழைக்கப்பட்ட மலையில் குகையில் வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, தானும் ஓர் துறவியாக வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் " தாடியில்லா துறவி" (Beardless Monk) என்றழைக்கப்பட்டார். இவர் தன்னுடன், தன்னைப் போன்று வாழ்ந்த, சில இளம்பெண்களின் வாழ்வையும் மாற்றி, அவர்களையும் துறவற வாழ்வை வாழ அழைத்தார். இறுதியில் ஏறக்குறைய 15 இளம் பெண்களும் இவருடன் சேர்ந்து, துறவிகளாக வாழ்ந்து, தங்களின் வாழ்வின் இறுதிவரை, கடவுளுக்காக வாழ்ந்தார். தங்களின் பேச்சிலும், செயல்களிலும் இறைவனை மட்டுமே முன்வைத்து வாழ்ந்தனர்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெலகியாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பாவத்தை உணர்ந்து, மனமாற்றம் அடையவேண்டும்

தூய பெலகியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றத்தை, பாவத்தை உணர்ந்து மனமாறவேண்டும் என்ற சிந்தனைதான் நமக்கு வருகின்றது. பெலகியா ஒருகாலத்தில் மிகப்பெரிய பாவியாக இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்ததும் புதுவாழ்க்கை வாழத் தொடங்கினார். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறி இறைவனுக்கு உகந்த புதுவாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

இந்த இடத்த்தில் 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மறைபோதகராக விளங்கிய ஜான் நியூட்டன் என்பவரைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். 1805 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்தது. அந்தப் போரில் ஏராளமான பேர் அனாதைகள் ஆனார்கள், நிறையப் பெண்கள் கைம்பெண்கள் ஆனார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்பதற்காக நிதிதிரட்டும் பணியில் ஜான் நியூட்டன் இறங்கினார். அதற்காக அவர் எப்படியெல்லாம் மக்களிடம் பேசவேண்டும் என்று அற்புதமாகத் தயாரித்திருந்தார். ஆனால் அவர் மக்களிடம் பேச முற்பட்டபோது எல்லாமே மறந்துபோனது கடைசியில் ஒருவழியாக பேசி சமாளித்தார். அவர் தன்னுடைய உரையின் முடிவில் இவ்வாறு சொன்னார், “நான் எல்லாவற்றையும் மறந்தாலும் இரண்டு காரியங்களை மறக்கவே மாட்டேன். ஒன்று, நான் ஒரு பாவி. இரண்டு, ஆண்டவர் என்னை மீட்டுக்கொண்டார்”.

“நான் பாவி, ஆண்டவர் என்னை மீட்டுக்கொண்டார்” என்று உணர்வதே மனமாற்றத்திற்கான முதல் அடி. பெலகியா தன்னுடைய குற்றங்களை உணர்ந்தார், புது மனுஷியாக மாறினார். நாமும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனம்திருந்தி நடந்தால் இறையருளைப் பெறுவது உறுதி.

ஆகவே, தூய பெலகியாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மனம்திரும்பிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

செபம்:
வாழ்வை மாற்றுபவரே எம் இறைவா! தன்னுடைய அழகு, பணம், பொருள் அனைத்தையும் குப்பையென கருதி உம்மை பற்றிக்கொண்டு, மனமாற்றம் பெற்று, வாழ்ந்த, புனித பெலாகியாவைப்போல, நாங்களும் எங்களின் தீயச் செயல்களிலிருந்து மனமாற்றம் பெற்று, எம்மால் இயன்றவரை, மற்றவர்களுக்காக நாங்கள் வாழ, எம்மை மாற்றியருளும்.

 

image