St. Callistus 1 St. Justus Of Lyons St. Parasceva

அக்டோபர் 14

தூய முதலாம் கலிஸ்துஸ்

mary

mary

தூய முதலாம் கலிஸ்துஸ் (அக்டோபர் 14)

“ஆண்டவர் சாமுவேலிடம், ’அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்றார். பின்னர் ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனை அருட்பொழிவு செய்” என்றார் (1 சாமு 16: 7-12).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கலிஸ்துஸ், மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோமையில் இருந்த கார்போபோருஸ் என்பவரிடத்தில் அடிமையாக வேலை பார்த்துவந்தார். அவர் கலிஸ்துஸிடம் பணத்தைக் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்ல, கலிஸ்துஸோ கவனக்குறைவால் தொலைத்துவிட்டார். இதனால் கலிஸ்துஸ் தன்னுடைய தலைவருக்குப் பயந்துபோய் தப்பியோடினார். ஆனால் தலைவரோ அவருடைய குற்றத்தை மன்னித்து, மீண்டுமாக அவரைத் தன்னுடயை அடிமையாக ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில் கார்போபோருசிடம் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னவர்கள், கலிஸ்துஸ் பணத்தை தவறாகக் கையாண்டுவிட்டார் என்று சொல்லி அவரை சர்டினியா என்ற தீவுக்கு நாடுகடத்தினார்கள்.

சர்டினியா தீவில் இருந்த கலிஸ்துசைப் பார்த்த ஒருசிலர் அவரை விடுதலைசெய்து உரோமையில் இருந்த திருத்தந்தை செபிரினுசிடம் அனுப்பிவைத்தார்கள். திருதந்தையோ கலிஸ்துசை குகைக் கல்லறைகளை பராமரிக்கின்ற பொறுப்பினைக் கொடுத்தார். அவர் அந்தப் பொறுப்பினை மிக நல்லவிதமாய் செய்ததாலும் அவர் ஞானத்தோடும் முன்மதியோடும் செயல்பட்டதாலும் திருத்தந்தை அவரை குருவாகத் திருநிலைப்படுத்தி, தன்னுடைய செயலராக வைத்துக்கொண்டார்.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது திருத்தந்தை செபிரினுஸ் திடிரென இறந்துபோனார். இதனால் திருத்தந்தையின் உதவியாளராகவும் செயலராகவும் இருந்த கலிஸ்துஸ் 217 ஆம் ஆண்டு பதினாறாவது திருத்தந்தையாக உயர்ந்தார். திருதந்தையாக உயர்ந்த கலிஸ்துஸ் சந்தித்த முதல் பிரச்சனை ஹிப்போலிடஸ் என்பவடமிருந்துதான் வந்தது. ஹிப்போலிடஸ் தன்னை திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டு கலிஸ்துசிற்கு தலைவலி கொடுத்து வந்தார். கலிஸ்துஸ் அவரை விவேகத்தோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார். இந்த ஹிப்போலிடஸ் பின்னாளில் மனம்மாறி, திருச்சபையில் இணைந்து புனிதராக மாறினார் என்பது வரலாறு.

இதற்குப் பின்பு திருத்தந்தை கலிஸ்துஸ், தங்களுடைய தவற்றை உணர்ந்து, திருச்சபையிடம் திருந்தி வந்தவர்களை உள்ளன்போடும் இரக்கத்தோடும் வரவேற்றார். 222 ஆம் ஆண்டு உரோமையில் பெரிய கலவரம் வெடித்தது. இதில் திருத்தந்தை அவர்கள் கொல்லப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய முதலாம் கலிஸ்துசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

எளியவரை தன்னுடைய பணிக்கு அழைக்கும் இறைவன்

தூய கலிஸ்துசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரு சிந்தனை ‘இறைவன் எளியவரை தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார்’ என்பதாகும். ஒரு அடிமையாக வாழ்வைத் தொடங்கிய கலிஸ்துஸ் படிப்படியாக உயர்ந்து, திருத்தந்தையாக உயர்ந்தார் எனில், அது இறைவனின் அனுக்கிரகத்தால் அன்றி, வேறு எதனாலும் இல்லை. ஆகையால், இறைவனின் திருவுளம் இப்படி இருப்பதால் யாரையும் குறைவாக எடைபோடக் கூடாது.

இந்த இடத்தில் திரு இருதய ஆண்டவருடைய பக்தி அகிலமெங்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்த மார்கரேட் மரியாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லியாகவேண்டும். மார்கரேட் மரியாவோ ஒரு சாதாரண கன்னியாகத்தான் சபையில் வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு அவருக்குக் காட்சி கொடுத்து, “திரு இருதய பக்திமுயற்சியை உலகமெங்கும் பரப்புவதற்கு உன்னை என்னுடைய கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்” என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மார்கரேட் மரியா, “ஆண்டவரே! நானோ ஒரு சாதாரண, எதற்கும் தகுதியற்ற ஒரு பெண்மணி. என்னைவிட்டு விட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுக்கலாமே” என்றார். அதற்கு இயேசு அவரிடம், “உன்னை விட சாதாரண, தகுதியற்ற ஒருவர் இந்த உலகில் யாரும் இல்லை. அதனால்தான் உன்னை இந்தப் பணிக்காக தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.

மார்கரேட் மரியாவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, இறைவன் தன்னுடைய பணிக்காக சாதாரண, எளிய மனிதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார் என்பது தெளிவாக இருக்கின்றது. ஆகவே, நாம் யாரையும் சாதாரணமானவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கிவிடக்கூடாது. இறைவன் அவர்கள் வழியாகவும் அற்புதங்களைச் செய்வார் என்பதுதான் உண்மை.

ஆகவே, தூய முதலாம் கலிஸ்துசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், ஒருவர் மற்றவரை உளமார நேசிப்போம். யாரையும் குறைத்து எடைபோடாமல் இருப்போம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image