St. Teresa Of Avila

அக்டோபர் 15

தூய அவிலா தெரசா

mary

mary

தூய அவிலா தெரசா (அக்டோபர் 15)

நிகழ்வு

தெரசா குழந்தையாக இருக்கும்போது புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை பெற்றோர் வாசிக்கச் சொல்லிக் கேட்டார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரசாவில் உள்ளத்தில், தானும் ஒரு மறைசாற்றியாக உயிர்துறக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. தெரசாவிற்கு ஏழு வயது நடந்துகொண்டிருந்தபோது அவர் தன்னுடைய சகோதரனோடு சேர்ந்து, மூர் இனத்தவருக்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார். அதுவும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாகப் புறப்பட்டார். ஆனால் தெரசாவின் மாமா ஓரிடத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது தற்செயலாக இவரைப் பார்க்க, அவர் தெரசாவையும் அவருடைய சகோதரரையும் அங்கிருந்து இழுத்துக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தார். இதனால் தெரசாவின் மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்ற கனவு தகர்ந்தது. ஆனாலும் அவர் வீட்டுத் தோட்டத்திலே ஒரு குடிசையைக் கட்டி, அதில் ஒரு துறவியைப் போன்று வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

தெரசா 1515 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள உள்ள அவிலா என்னும் ஊரில் பிறந்தார். பின்னாளில் இவர் அவிலா தெரசா என அழைக்கப்படக் காரணம் அவர் பிறந்த ஊர்தான். தெரசாவின் தந்தை ஆலன்சோ, தாய் பீட்ரிஸ் என்பவர் ஆவார். தெரசாவின் பெற்றோர்கள் இவரை சிறுவயதிலேயே பக்தி நிறைந்தவராக வளர்த்து வந்தார்கள். இவருடைய பெற்றோர் இவருக்குக் கற்றுக்கொடுத்த புனிதர்களின் வாழ்க்கை வரலாறும் ஆன்மீகப் போதனையையும் இவர் பக்தியுள்ள பிள்ளையாக வளர்வதற்கு பேருதவியாக இருந்தது. இந்த நேரத்த்தில் இவர் மூர் இனத்தவருக்கு நற்செய்தி அறிவித்து, மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் அது இயலாமல் போகவே, வீட்டுத் தோட்டத்தில் குடிசை ஒன்று கட்டி, அதில் துறவியைப் போன்று வாழ்ந்து வந்தார்.

இந்நேரத்தில்தான் இவருடைய தாயார் இறந்துபோனார். தாயாரின் இறப்புக்குப் பிறகு இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. ஆம், இவர் எந்தளவுக்கு கடவுளிடம் நெருக்கமாக இருந்தாரோ, அந்தளவுக்கு இவர் கடவுளை விட்டு வெகுதொலைவில் போனார். உலகப் போக்கிலான வாழ்க்கையை வாழத்தொடங்கினார். இயல்பிலேயே பேரழகியாக விளங்கிய தெரசா இந்த உலகம் தரும் இன்பத்திற்குள் தன்னையே மூழ்கடித்துக்கொண்டார். இந்த சமயத்தில்தான் இவர் தூய எரோனிமுசின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க நேர்ந்தது. அவருடைய வாழ்க்கை வரலாறு இவருடைய வாழ்வைத் தொட்டது. அதனால் இவர் மனம்மாறி கார்மேல் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார்.

கார்மேல் மடத்தில் துறவியாகச் சேர்ந்தபிறகு இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. நிறைய நேரத்தை இவர் ஜெபத்திலும் தவத்திலும் தனிமையிலும் செலவழித்தார். அப்போதெல்லாம் இவர் நிறைய காட்சிகளைக் கண்டார். ஒருமுறை இவருடைய உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவது போன்றும் காட்சி கண்டார். இப்படியாக தெரசா இறையன்பில் நாளும் வளர்ந்தார். இவருடைய வாழ்க்கை முறையைப் பார்த்த மேலிடம் இவருக்கு சபைத் தலைவி பொறுப்பு கொடுத்தது. இதனை அவர் இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு சபையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இவர் சபைத் தலைவியாக உயர்ந்தபிறகு துறவியரின் ஆன்மீக வாழ்விலும், ஜெப வாழ்விலும் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக இவர் துறவிகள் நீண்ட நேரம் ஜெபத்திலும் தனிமையிலும் தங்களுடைய நேரத்தை செலவழிக்கக் கேட்டுக்கொண்டார். 1552 ஆம் ஆண்டு அருட்தந்தை பீட்டர் அல்கந்தரா என்பவரின் துணையுடன் பெண்களுக்கான சபையைத் தோற்றுவித்தார். இச்சபையில் இருந்தோர் - Barefooted - காலனி அணியாமலே துறவற வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அதே போன்று ரூபியோ தே ராவேன்னா (Rubeo De Ravenna) என்ற அருட்தந்தையின் உதவியுடன் ஆண்களுக்கான சபையையையும் தோற்றிவித்தார். இவ்வாறு தெரசா மிகக் குறுகிய காலத்திலேயே பெண்களுக்கென்று 17 மடங்களும், ஆண்களுக்கென்று 15 மடங்களையும் உருவாக்கினார்.

தெரசா எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் சிலுவை அருளப்பர் (John of the Cross) ஆன்மீக ஆலோசகராக இருந்து மிகவும் உறுதுணையாக இருந்தார். தெரசாவிற்கு அவருடைய சபையிலிருந்து நிறைய எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் அவர் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார். தெரசா இத்தகைய சீர்திருத்த பணிகளுக்கு மத்தியில் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் எழுதிய The Way of Perfection, The Autobiography, Interior Castle போன்ற புத்தகங்கள் இன்றளவும் வாசிக்கப்பட்டு தியானிக்கப்படுகின்றன. இப்படி ஓர் சமய சீர்திருத்த வாதியாக, ஆன்மீகவாதியாக விளங்கிய தெரசா 1582 ஆம் ஆண்டு இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். இவருக்கு 1622 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் கிரோகோரி அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் இவருக்கு மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அவிலா தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

விமர்சனங்களைத் துணிவோடு எதிர்கொள்ளல்

அவிலா தெரசா துணிச்சல் மிக்க ஒரு பெண்மணியாக இருந்து, கார்மேல் சபையில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அப்போது அவருக்கு நிறைய எதிர்ப்புகள், அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அவற்றையெல்லாம் அவர் துணிவோடு, மனவுறுதியோடு எதிர்கொண்டார். அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நம்மிடத்தில் அவரிடமிருந்த துணிச்சல், விமர்சனங்களைக் கண்டு அச்சாத நிலை இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரிட்டீஸ் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர் வில் க்ரூக் (Will Crooke) என்பவர். இவருடைய குழந்தைப் பருவம் வறுமையாலும் ஏழ்மையாலும் சூழ்ந்திருந்தது. ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் அவர் நிறையவே கஷ்டப்பட்டார். அத்தகைய தருணத்தில் ஒரு மெக்கானிக்காக வேலைபார்த்து வாழ்க்கையை நடத்தி வந்தார். அப்படிப்பட்டவர்தான் கடினமாக உழைத்து, பின்னாளில் பிரிட்டீஸ் தொழிற்சங்க தலைவராக உயர்ந்தார். ஒருநாள் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிகொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து எழுந்த பெண்மணி ஒருத்தி, “வில் க்ரூக் உம்மைப் பற்றி எனக்குத் தெரியாதா?, நீர் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட்டவர்தானே?” என்றார். அதற்கு வில் க்ரூக் மிகவும் பொறுமையாக, “ஆம், என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஒருவேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டவன்தான். ஆனால் இன்றைக்கு எத்தனையோ தொழிலாளர்களுக்கு அன்றாட உணவு கிடைக்க நான் காரணமாக இருக்கின்றேனே” என்றார். இதைக் கேட்ட மக்கள் கரகோசத்தால் ஆர்ப்பரித்தது. வில் க்ரூகை விமர்சித்த பெண்மணி அவமானத்தால் வெட்கித் தலைகுனிந்து நின்றார்.

துணிவோடும் மனவுறுதியோடும் இருக்கும்போது எப்படிப்பட்ட விமர்சனத்தையும் நாம் எதிர்கொள்ள முடியும். அதைதான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அவிலா தெரசாவும் ஏன் நம் ஆண்டவர் இயேசுவும் கூட தங்கள் மீது சுமத்தப்பட்ட விமர்சங்களைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்கள். நாமும் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களைக் கண்டு பயப்படமால் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொள்வோம்.

துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றல்

அவிலா தெரசா தன்னுடைய வாழ்க்கையில் வந்த துன்பங்களை எல்லாம் பொறுமையோடு ஏற்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு முறை அவர் துறவற மடங்களை நிறுவுவதற்காக குதிரையில் பக்கத்துக்கு ஊர்களுக்கு பயணம் சென்றுகொண்டிருந்தபோது குதிரை இடறி விழ, அதன்மேல் இருந்த அவிலா தெரசா கீழே விழுந்தார். இதனால் அவருடைய உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவர் இயேசுவைப் பார்த்து, “இயேசுவே, எனக்கு எதற்கு இவ்வளவு துன்பம்?” என்றார். அதற்கு இயேசு அவரிடம், “இத்தகைய துன்பங்கள் அனைத்தும் நான் உன்னை மிகுதியாக அன்பு செய்கிறேன் என்பதற்கு அடையாளமாகும். என்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவிலா தெரசா மன நிம்மதி அடைந்தார். இது போன்று அவர் தன்னுடைய வாழ்வில் நிறைய துன்பங்களைச் சந்தித்தபோது, இறைவன் தன்னை துன்பங்கள் வழியாக அன்பு செய்கிறார் என உணர்ந்துகொண்டார்.

நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் துன்பங்களை கடவுள் அனுப்பும் தண்டனையாகத் தான் பார்க்கின்றோம். ஆனால், துன்பங்களே நம்மைப் புடமிடுகின்றன, துன்பங்களே நம்மைக் கடவுள் அன்பு செய்வதற்கான அடையாளம்.

ஆகவே, தூய அவிலா தெரசாவின் விழா நாளில் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம், கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image