St. Gall St. Gerard Majella
St. Hedwig St. Margaret Mary Alacoque

அக்டோபர் 16

மார்கரேட் மரியா

mary

mary

மார்கரேட் மரியா (அக்டோபர் 16)

“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது” (மத் 11: 29-30)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட் மரியா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பர்கண்டி என்ற இடத்தில் 1647 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் பக்தி நெறியிலும் புண்ணிய வாழ்விலும் சிறந்துவிளங்கியவர்கள். அதனால் இவரும் சிறு வயது முதலே பக்தி நெறியில் சிறந்து விளங்கத் தொடங்கினார்.

மார்கரேட்டிற்கு எட்டு வயது நடக்கும்போது திடிரென இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் இவரும் இவருடைய பெற்றோரும் மரியன்னையை வேண்டிக்கொள்ள, மார்கரேட்டிற்கு ஏற்பட்ட முடக்கவாத நோய் குணமாக முற்றிலுமாகக் குணமானது. அதற்கு நன்றிக் கடனாக மார்கரேட் சந்திப்பு துறவறசபையில் சேர்ந்து துறவியாக வாழத் தொடங்கினார்.

இவர் சிறுவதிலேயே நற்கருணை ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்ததால், துறவற சபையில் சேர்ந்ததும் அது இன்னும் அதிகமானது. தனிமையில் நற்கருணை ஆண்டவரிடம் பேசத் தொடங்கினார். அவரைக் குறித்த காட்சிகளையும் காணத் தொடங்கினார். 1673 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் ஆண்டு, மார்கரேட் மரியா நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றினார். அந்தக் காட்சியில் இயேசுவின் உடல் முழுவதும் காயங்கள் அதிகமாகக் காணப்பட்டன. இயேசு மார்கரேட் மரியாவிடம், “உன்னை நான் என்னுடைய திரு இருதய பக்தியை உலகமெங்கும் பரப்புவதற்கு ஒரு கருவியாக ஏற்படுத்தியிருக்கின்றேன்” என்றார். அவரும் இதனை ஆண்டவரின் திருவுளமென ஏற்றுக்கொண்டார்.

இதற்குப் பின்பு மார்கரேட் மரியா திரு இருதய ஆண்டவரைக் குறித்து பதினெட்டு மாதங்கள் நிறைய காட்சிகளைக் கண்டார். அந்தக் காட்சிகளை எல்லாம் அவர் அவருடைய சபைத் தலைவியிடமும் ஏனைய அருட்சகோதரிகளிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் இவரை “ஏமாற்றுப் பேர்வழி, பொய்யானவள்’ என்று விமர்சிக்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சபைக்கு ஆன்ம ஆலோசகராக இருந்த அருட்தந்தை கிளாட் லா கொலம்பியர் என்பவர், மார்கரேட் மரியா கூறுவதில் இருக்கின்ற உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். அன்று முதல் மார்கரேட் மரியா சொன்னதை சபையில் இருந்த அனைவரும் நம்பத் தொடங்கினார்கள். திரு இருதய ஆண்டவர் மார்கரேட் மரியாவிடம் சொன்னவாறே ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளியன்று நற்கருணை ஆராதனையும் ஒவ்வொரு வியாழன்று திருமணி ஆராதனையும் செய்யத் தொடங்கினார்கள். அதே போன்று இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற வெள்ளிகிழமை அன்று திரு இருதய ஆண்டவருக்கு விழாவும் எடுக்கத் தொடங்கினார்கள். இப்படி திரு இருதய ஆண்டவருக்கான பக்தி முயற்சி படிப்படியாகப் பரவத் தொடங்கியது.

இதன்பிறகு மார்கரேட் மரியா சபையின் துணைத் தலைவியாகவும் நவ கன்னிகைகளுக்கு பயிற்றுவிப்பவராகவும் உயர்ந்தார். இப்படி அவருடைய நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க அவர் 1690 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1920 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் இறந்து எழுபது ஆண்டுகள் கழித்து திரு இருதய ஆண்டவருக்கான பக்தி முயற்சி திருத்தந்தை எட்டாம் கிளமெண்டால் அங்கீகரிக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்கரேட் மரியாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தீர்ப்பிடாது வாழ்வோம்

தூய மார்கரேட் மரியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரை அவருடைய சபை அருட்சகோதரிகள் உண்மை தெரியாமேலே பொய்யானவள், ஏமாற்றுக்காரி என்றெல்லாம் தீர்ப்பிட்டார்கள். பின்னர் உண்மையை உணர்ந்ததும் தங்களுடைய தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டார்கள். நாமும் கூட பல நேரங்களில் மார்கரேட் மரியாவின் சபை அருட்சகோதரிகள் போன்று ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல், இவர், இவள் இப்படித்தான் என்று தீர்ப்பிடுக்கின்றோம். இத்தகைய தவற்றினை நாம் செய்யாமல் இருப்பது நல்லது.

சிறுவன் ஒருவன் தேனிக்கள் தன்னை கொட்டிவிட்டது என்று தேனிக்கூட்டதையே அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தான். இப்படிப்பட்ட நிலையில் தேனீக்களால் அருமையான தேன் கிடைக்கின்றது என்று அவனுடைய தாய் அவனிடத்தில் எடுத்துச் சொன்னபோது, தன்னுடைய தவற்றை நினைத்து வருந்தினான். நாமும் கூட இந்த சிறுவனைப் போன்று. உண்மையை உணராமல் அல்லது ஒன்றைப் பற்றி பகுதியாகத் தெரிந்துகொண்டு தீர்ப்பிடுகின்றோம். இந்நிலையையை நம்முடைய வாழ்வில் மாற்றிக்கொண்டு தீர்ப்பிடாமல் இருப்பது நல்லது.

ஆகவே, தூய மார்கரேட் மரியாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், தீர்ப்பிடாது வாழ்வோம், திரு இருதய ஆண்டவரிடத்தில் பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image