St. Francis Isidore Gagelin St. Ignatius Of Antioch

அக்டோபர் 17

அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார்

mary

mary

அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார் (அக்டோபர் 17)

நிகழ்வு

உரோமையை ஆண்டு வந்த ட்ரேஜன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை நடைபெற்றது. இதில் அந்தியோக்கு நகரில் ஆயராக இருந்த இஞ்ஞாசியார் கைது செய்யப்பட்டு, உரோமை நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர்மீது அக்கறை கொண்டு ஒருசிலர், “எதற்காக உயிரைத் துறக்கவேண்டும், பேசாமல் கிறிஸ்துவை மறுதலித்து விடுங்கள்” என்றார்கள். அதற்கு இஞ்ஞாசியார், “நான் கிறிஸ்துவுக்காக என்னுடைய வாழ்வை கோதுமை மணி எனத் தர இருக்கின்றேன். இதை யார் தடுத்தாலும் முடியாது” என்று சொல்லி கிறிஸ்துவுக்காக தன்னுடைய வாழ்வைத் துறந்தார்.

வாழ்க்கை வரலாறு

இஞ்ஞாசியார் கிபி 50 ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்திருக்கலாம் என்று திருச்சபையின் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். இவர் நற்செய்தியாளரான தூய யோவானால் அந்தியோக்கு நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். ஆயராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அந்தியோக்கு நகரில் ஆயராக இருந்து இறைமக்களைக் கட்டி எழுப்பினார். இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. அத்தகைய தருணத்தில் இஞ்ஞாசியார் கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் திடப்படுத்தி, அவர்களை கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கச் செய்தார். இவர்தான் நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றார் என்று முதன்முதலாக மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார்.

கி.பி.93, 94 ஆம் ஆண்டுகளில் அப்போது உரோமையை ஆண்டு வந்த டொமினிசியன் என்பவன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனையை கட்டவிழ்த்துவிட்டான். அந்தக் காலகட்டத்தில் இஞ்ஞாசியார் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டு, வெளியே அனுப்பப்பட்டார். ஓரிரு ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்தவொரு அடக்குமுறையும் இல்லாமல் அமைதியாய் போனது. ஆனால் 98- 107 ஆம் ஆண்டுகளில் மீண்டுமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தலைத்தோங்கின. அப்போது உரோமையை ட்ரேஜன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் யாராரெல்லாம் கிறிஸ்துவை மறுதலித்து, தன்னுடைய கடவுளை வணங்கவில்லையோ அவர்களையெல்லாம் கைது சிறையில் அடைத்தான். அந்தியோக்கு நகரில் ஆயராக இருந்த இஞ்ஞாசியாரோ எத்தனை துன்பம் வந்தாலும் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன் என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைக் கைதுசெய்து உரோமை நகருக்கு இழுத்துச் சென்றான்.

இஞ்ஞாசியார் கைதுசெய்யப்பட்டு அந்தியோக்கு நகரிலிருந்து உரோமை நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது ஸ்மிர்னா, எபேசு, மக்னசிஸ் போன்ற நகர்களில் இருந்த திருச்சபைக்கு கடிதங்களை எழுதினார் அவையெல்லாம் ‘தொடக்ககால கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இடையில் இஞ்ஞாசியார் அவருடைய நண்பரான போலிகார்பை சந்தித்து, அவரை விசுவாசத்தில் உறுதிபடுத்தினார். அதன்பிறகு அவர் உரோமையை நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். இஞ்ஞாசியார்மீது அக்கறைகொண்ட நிறையபேர் அவருக்கு இப்படிப்பட்ட சாவு வேண்டாம் என்று கெஞ்சிக்கேட்டார்கள். ஆனால் இஞ்ஞாசியாரோ ஆண்டவர் இயேசு சொன்ன ‘வாழ்க்கை இழப்பவர் அதனைக் காத்துக்கொள்வார்’ (மத் 16:25) என்ற வார்த்தையை எடுத்துச் சொல்லி கொலைகளத்தை நோக்கி தொடர்ந்து நடந்தார். உரோமை நகருக்கு இழுத்துச் செல்லப்பட்ட இஞ்ஞாசியார் கொலை பசியில் இருந்த இரண்டு சிங்கங்களுக்கு முன்பாகப் போடப்பட்டு கொல்லப்பட்டார். இஞ்ஞாசியார் தன்னுடைய 62 ஆம் வயதில் கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அந்தியோக்கு நகர இஞ்ஞாசியாசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பாப்போம்.

கிறிஸ்துவுக்காக சாவை ஏற்கத் துணிதல்

இஞ்ஞாசியார் கிறிஸ்துவுக்காக எதையும், ஏன் சாவை ஏற்கவும் துணிந்தார். அந்தளவுக்கு அவர் ஆண்டவர் இயேசுவின்மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் கிறிஸ்துவுக்காக, அவருடைய போதனைக்காக சாவையும் ஏற்கத் துணிகிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தூய தாமஸ் மூர் என்பவர். இவர் இங்கிலாந்து மன்னன் ஹென்றியின் அரசபையில் பணியாற்றி வந்தார். மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லததால், அவன் தன்னுடைய மனைவி கத்தரீனை மணமுறிவு செய்தான். இதனை கடுமையாக எதிர்த்தார் தாமஸ் மூர். ஒரு மனைவி இருக்க இன்னொரு மனைவியை மணந்துகொள்வது பாவம் என்று அவர் அவனிடத்தில் எடுத்துரைத்தார். ஆனால் மன்னனோ தன்னுடைய விரும்பம் நிறைவேறத் தடையாக இருந்த தாமஸ் மூரை 1535 ஆம் ஆண்டு தலைவெட்டிக்கொன்றான். தாமஸ் மூர் தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை ஆண்டவரின் கட்டளைகளை, அவரது வார்த்தைகளை உரக்கச் சொல்வேன் என்று சொல்லி, மன்னனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். அதற்காக தன்னுடைய உயிரையும் துறந்தார்.

நாம் எத்தகைய சூழ்நிலையிலும் ஆண்டவர் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து, அவருடைய போதனையிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதையே தாமஸ் மூரின் வாழ்வும், இன்று நாம் விழாக் கொண்டாடும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியாரின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

ஆகவே, தூய அந்தியோக்கு நகர இஞ்ஞாசியாரைப் போன்று, ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன், அதற்காக நம்முடைய உயிரையும் இழக்கத் துணிவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image