St. Luke the Evangelist

அக்டோபர் 18

நற்செய்தியாளரான தூய லூக்கா

mary

mary

நற்செய்தியாளரான தூய லூக்கா

நிகழ்வு

லூக்கா நற்செய்தியாளர் நற்செய்தி நூலை எழுத நினைத்தபோது அவருக்கு இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த போதிய தகவல்கள் தெரியவில்லை. எனவே அவர் எருசலேமில் வாழ்ந்துவந்த இயேசுவின் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனத் தீர்மானித்தார். அதன்படியே அவர் அன்னை மரியாவைச் சந்தித்து வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்னது, அதன்பிறகு மரியா கடவுளைப் போற்றிப் புகழ்ந்தது, இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது, சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற தரவுகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை தான் எழுதிய நற்செய்தி நூலில் எழுதி வைத்தார். அது எக்காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

லூக்கா அந்தியோக்கு நகரில் பிறந்தவர். இவர் யூதரல்லாத ஒரு புறவினத்தார்; கிரேக்க மொழியை நன்றாகக் கற்றுத் தெரிந்தவர். ஒருசிலர் இவரை ஆண்டவர் இயேசுவை தன்னுடைய வாழ்நாளில் சந்திக்காதவர் என்று கூறுவார். இன்னும் ஒருசிலர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும் கூறுவார். இவர் ஒரு மருத்துவர் (கொலோ 4:14), கைதேர்ந்த ஓவியர்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு இவர் பவுலோடு உடன் சென்று நற்செய்திப் பணி ஆற்றி வந்தார். பவுல் செசரியா மற்றும் உரோமை நகரில் சிறையில் அடைக்கப்பட்ட போது லூக்காதான் அவரோடு இருந்து, பவுலுக்கு பேருதவியாக இருந்து வந்தார். பவுலும் லூக்காவைக் குறித்து பெருமிதம் கொள்வதை அவருடைய திருமுகங்களிலிருந்து படித்தறிகின்றோம். லூக்கா மட்டுமே தன்னோடு இருந்து தனக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என்பதை பவுல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றார் ( 2 திமோ 4:11). பவுலின் மறைவிற்குப் பிறகு லூக்கா போயேதியா (Boetia) என்னும் இடத்திற்குச் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து, அங்கே கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார் என்று இவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். ஆண்டவர் இயேசு தனக்குக் கொடுத்த தாலந்தை – திறமையை – ஆண்டவரின் மகிமையும் பெருமையும் விளங்க செய்த லூக்கா நற்செய்தியாளர் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.

மூன்றாம் நற்செய்தி நூல் எனப்படும் லூக்கா நற்செய்தி

லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலை கி. பி 65 ஆம் ஆண்டிலிருந்து 85 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்கலாம் எனச் சொல்வார்கள். இரக்கத்தின் நற்செய்தி என அழைக்கப்படும் இந்நற்செய்தி நூலில் இன்னும் ஒருசில உண்மைகள் மேலோங்கி இருப்பதை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலாவதாக லூக்கா நற்செய்தி எல்லாருக்கும் பொதுவான நற்செய்தி என அழைக்கப்படுகின்றது. எப்படியென்றால் லூக்கா நற்செய்தி நூலை நாம் படித்துப் பார்க்கும்போது ஆண்டவராகிய மெசியா யூதர்களுக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளலாம். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி கொடுக்கின்றபோது, “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று கூறுகின்றார். இவ்வார்த்தையை நாம் கூர்ந்து நோக்கும்போது லூக்கா நற்செய்தி எல்லா மக்களுக்கும் எழுதப்பட்டிருகின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தரும் நற்செய்தி எனவும் அழைக்கப்படுகின்றது. வானதூதர் சக்கரியாவிற்கு தோன்றினார் என்றால், அதற்கு அடுத்து, அவர் மரியாவிற்கு தோன்றுவதாக லூக்கா நற்செய்தியாளர் எழுதுகின்றார். அதைப் போன்று குழந்தையை சிமியோன் கண்டுகொண்டார் என்று படிக்கின்ற நாம், அதற்கு அடுத்து அன்னா என்ற பெண்மணி குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டார் என்று படிக்கின்றோம். உதாரி மகனின் உவமையை வாசிக்கின்ற அதே வேளையில் பெண் ஒருவர் தான் தொலைத்த நாணயத்தைத் தேடிக் கண்டுகொள்வதையும் படிக்கின்றோம். இவ்வாறு லூக்கா நற்செய்தி பெண்களுக்கு அதிக முன்னுரிமை தருகின்ற ஒரு நற்செய்தியாகவும் நாம் பார்க்கலாம்.

மூன்றாவதாக லூக்கா நற்செய்தி ஜெபத்திற்கு அதிக முக்கியத்தும் தருகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் விளங்குகின்றது. அதே போன்று தூய ஆவியைக் குறித்து அதிகம் பேசுகின்ற ஒரு நற்செய்தி நூலாகவும் மகிழ்ச்சியின் நற்செய்தியாகவும் லூக்கா நற்செய்தி விளங்குகின்றது. திருத்தூதர் பணிகள் நூலும் லூக்காவால்தான் எழுதப்பட்டது என்பதையும் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூக்காவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தியின் தூதுவர்களாவோம்
நற்செய்தியாளர் லூக்கா கடவுள் தனக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி, ஆண்டவர் இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவித்தார்; நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நற்செய்தி அறிவிப்பதில் தாகம் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பழங்குடி மக்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணியாற்றிய ஒரு மறைபோதகர், அங்கிருந்த ஆதிக்க வர்க்கத்திடமிருந்து நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். இதனால் அவர் மனம் உடைந்துபோய், தான் செய்துவரும் நற்செய்திப் பணியை அத்தோடு விட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பலாம் என யோசித்து வந்தார். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது. ஒருநாள் காலை வேளையில் அவர் வயல்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது ஓரிடத்தில் தொழுநோயாளர்கள் சிலர் வேலைபார்த்து வந்தார்கள். அதில் இரண்டு தொழுநோயாளர்கள் செய்துவந்த செயல்தான் அவரை இன்னும் வியப்புக்குள்ளாக்கியது. அந்த இருவரில் ஒருவருக்கு கால் இல்லை, இன்னொருவருக்கோ கையில்லை. காலில்லாத தொழுநோயாளியோ கையில்லாத தொழுநோயாளியின் தோள்மேல் ஏறியமர்ந்து விதை விதைத்துக்கொண்டிருந்தார்.

இக்காட்சியைக் கண்டதும் அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்தது. உடல் ஊனமுற்ற, பலவீனமான மனிதர்களே, தங்களுக்கு ஏற்பட்ட குறைகளை ஒரு பொருட்டாகக் கருதாது வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடல் நலத்தோடு இருக்கும் நாம் ஏன் எனக்கு ஏற்படும் இந்த எதிர்ப்புகளுக்காக நான் செய்துவரும் பணியிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று யோசித்தார். அதன்பிறகு எத்தனை இழப்புகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து நற்செய்திப் பணியாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, தொடர்ந்து நற்செய்திப் பணி செய்துவந்தார்.

நம்முடைய நற்செய்திப் அறிவிப்புப் பணியில் எத்தனை இடர்கள் வந்தாலும் தொடர்ந்து நற்செய்திப் பணி செய்யவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.

‘ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க’ ஆண்டவர் இயேசு வந்ததாக லூக்கா நற்செய்தியாளர் கூறுவார் (லூக் 4:18). நாம் ஆண்டவர் இயேசுவைப் போன்று லூக்காவைப் போன்று ஏழைகளுக்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து வாழ்வோம், எதிர்வரும் இன்னங்களை துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image