St. Gaspar Del Bufalo St. Hilarion
St. John Of Bridlington St. Ursula

அக்டோபர் 21

தூய ஹிலரியன்

mary

mary

தூய ஹிலரியன் (அக்டோபர் 21)

“அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைகலன்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள்நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியில் தூய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம் (எபே 6:1-2)

வாழ்க்கை வரலாறு

ஹிலரியன், 291 ஆம் ஆண்டு, பாலஸ்தீனாவில் உள்ள தபதாவில், ஒரு புறவினத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். ஹிலரியன் தன்னுடைய தொடக்கக்கல்வியை அலெக்ஸாண்ட்ரியாவில் பெற்றார். அங்கு இவர் படித்துக்கொண்டிருக்கும்போதே கிறிஸ்துவின் போதனையால் ஈர்க்கப்பட்டு, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவரானார்.

இதகுப் பின்பு ஹிலரியன் எகிப்து நாட்டிற்குச் சென்று, அங்கிருந்த தூய வனத்து அந்தோனியாரிடம் சேர்ந்து, ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டுவந்தார். ஆனால் அங்கு மக்கள் அதிகமாகப் வருவதும் போவதுமாக இருந்ததால், அது தனக்குத் தொந்தரவாக இருப்பதை உணர்ந்த இவர், தன்னுடைய சொந்த ஊருக்குத் திருப்பிவந்து, தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, சில காலம் நாடோடியாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார். பின்னர் பாலஸ்தீனில் இருந்த மஜுமா என்ற இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு குடிசை அமைந்து ஜெப தவ வாழ்விலும் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

அந்நாட்களில் ஹிலரியன் பலவிதமான சோதனைகளுக்கு உள்ளானார். சாத்தான் அவரைப் பலவிதங்களில் சோதித்துப் பார்த்தது. ஆனால் அவர் அந்தத் சோதனைகளில் விழுந்து விடாமல், எல்லாவற்றையும் இறைவனின் வல்லமையாலும் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளாலும் விவிலியம் வாசித்தும் வெற்றிகொண்டார்.

ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஹிலரியன் அந்த இடத்திலே இருந்து ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்ததால், நிறையப் புதுமைகள் நடக்கத் தொடங்கின. இதனால் நிறைய மக்கள் அவருடைய இருப்பிடம் நோக்கி வரத்தொடங்கினார்கள். இது தனக்குத் தொந்தரவாக இருக்கின்றது என்று உணர்ந்த ஹிலரியன் மீண்டுமாக நாடோடியாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கடைசில் சைபிரசில் போய் குடிபுகுந்தார். அங்கு சில காலம் வாழ்ந்த இவர், நோயுற்று 371 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலரியனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சோதனையில் விழுந்திடாது இருக்க இடைவிடாது ஜெபிப்போம்

தூய ஹிலரியனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், ‘சோதனையில் விழுந்திடாது இருக்க, விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்’ என்பதாகும். ஹிலரியனுக்கு ஏராளமான சோதனைகள் வந்தன. அந்த சோதனைகளில் அவர் விழுந்துவிடவில்லை, மாறாக கடுமையான ஒறுத்தல் முயற்சியினாலும் இடைவிடாத ஜெபத்தினாலும் அந்த சோதனைகளை வெற்றிகொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளாக இருக்கட்டும், இன்ன பிற சவால்களாக இருக்கட்டும், அவற்றை நாம் வெற்றிகொள்வதற்கு நமக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் ஜெபம்தான். இடைவிடாத ஜெபத்தினால் எத்துணை பெரிய வல்ல செயல்களையும் செய்ய முடியும்.

பேராயர் புல்டன் சின். பேராயராக மாறுவதற்கு முன்பாக நியூயார்க் நகரில் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய பங்கில் இருந்த ஒரு குடிகாரன் ஒவ்வொருநாளும் குடித்துவிட்டு அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டுவிடுவதும் தொல்லை கொடுத்தும் வந்தான். புல்டன் சின் அந்தக் குடிகாரனிடத்தில் எவ்வளவோ புத்திமதி சொன்னபோதும்கூட அவன் திருந்தவே இல்லை.

ஒருநாள் காலையில் அந்தக் குடிகாரன் இப்படித்தான் குடித்துவிட்டுவந்து, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினான். புல்டன் சின் நேராக ஆலயத்திற்குச் சென்று முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். “இயேசுவே! அந்தக் குடிக்காரனுடைய மனதை மாற்றி, அவனை நீர் நல்லவனாக மாற்றும்வரை நான் இங்கிருந்து போகமாட்டேன்” என்று கண்ணீர் விட்டுச் ஜெபித்தார். இப்படி அவர் தொடர்ந்து 3 மணிநேரம் ஜெபித்ததால், அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார். அவர் எழுந்து பார்க்கும்போது, குடிகாரன் அவருடைய காலில் விழுந்து, “இனிமேலும் நான் குடிக்கமாட்டேன், இதுபோன்ற தவற்றினைச் செய்யமாட்டேன்” என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தான்.

புல்டன் சினின் ஜெபம் குடிக்காரனை மனமாறச் செய்தது. நாம் இடைவிடாது செய்யக்கூடிய ஜெபம் நமக்கு எத்துணை நன்மையையும் பெற்றுத்தரும்.

ஆகவே, தூய ஹிலரியன் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், சோதனையில் விழுந்திடாமல் இருக்கவும், வாழ்வில் பல சாதனைகள் செய்யவும் இடைவிடாது ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image