St. Antony Mary Claret

அக்டோபர் 24

தூய அந்தோனி மரிய கிளாரட்

mary

mary

தூய அந்தோனி மரிய கிளாரட் (அக்டோபர் 24)

நிகழ்வு

ஒரு முறை அந்தோனி மரிய கிளாரட் பக்கத்து பங்கிற்கு போதிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தார். அது இரவு நேரம் வேறு. அப்போது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவர் அவரை இடைமறித்து, “கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிடு, இல்லையென்றால் உன்னுடைய உயிர் உன்னிடத்தில் இருக்காது” என்று மிரட்டினார்கள். அதற்கு அவர், “என்னிடத்தில் கொஞ்சம்கூட பணம் கிடையாது. நான் இப்போது போதிப்பதற்காக பக்கத்து பங்கிற்குப் போகிறேன். போதிக்கின்ற இடத்தில் ஏதாவது பணம் தருவார்கள். அதை வேண்டுமானால் உங்களிடத்தில் அப்படியே தந்துவிடுகிறேன்” என்றார். அப்போது கொள்ளையர்களில் ஒருவன், “நாங்கள் உன்னை அப்படியே விட்டுவிட நீ போய் காவல்துறையிடம் சொல்லிவிட்டால், பிறகு நாங்கள் கம்பி எண்ணவேண்டிய சூழ்நிலைதான் வரும். ஆதலால் நாங்கள் உன்னை விடமாட்டோம்” என்றான். அந்தோனி மரிய கிளாரடோ, “தயவு செய்து என்னை நம்புங்கள், நான் நிச்சயமாக காவல்துறையிடம் எல்லாம் செல்லமாட்டேன். என்னுடைய போதனை முடிந்தவுடன் சாப்பிடாமல் கூட உங்களிடத்தில் வந்துவிடுகிறேன்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு, அவர்கள் அவரை போதிக்க வழிவிட்டார்கள்.

அந்தோனி மரிய கிளாரட் தன்னுடைய போதனையை முடித்தவுடன், பங்கிலிருந்தவர்கள் பரிசாகக் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, அந்த கொள்ளையர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் மூவரும் அங்கேயே இருந்தார்கள். அந்தோனி மரிய கிளாரட் திரும்பி வருவதைப் பார்த்துவிட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர்கள் அவரிடமிருந்த நேர்மையைக் கண்டு வியந்து, இப்படிப்பட்ட மனிதரிடமா நாம் கொள்ளையடிக்க நினைத்தோம் என்று தங்களுடைய தவற்றை உணர்ந்து அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் அந்தோனி மரிய கிளாரட்டிடம் “இனிமேலும் இப்படித் திருட்டுத் தொழிலில் ஈடுபடமாட்டோம்” என்று சொல்லி திருந்தி நல்ல மனிதர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

வாழ்க்கை வரலாறு

அந்தோனி மரிய கிளாரட் 1807 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் காடலோனியா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை துணிகளை நெய்து விற்பனை செய்யும் ஒரு வியாபாரி. ஆதலால் இவரும் தந்தையின் தொழிலையே செய்துவந்தார். சிறுது காலத்திற்குப் பிறகு அந்தோனி மரிய கிளாரட்டின் தந்தை அவரை பார்சிலோனா என்ற இடத்திற்கு கல்வி கற்க அனுப்பிவைத்தார். அங்கே அவர் சிறந்த முறையில் கல்வி கற்று வந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் போதே குருவாக மாறி, நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அவர் சேசு சபையில் சேர்ந்து குருத்துவப் படிப்பு படித்து வந்தார். அப்போது அவருக்கு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும் என எண்ணம் அடிக்கடி வந்தது. ஆனால் அவருடைய உடல் நலம் அதற்கு ஒத்துழைக்காததால் அவர் குருவாக மாறி சொந்த நாட்டிலே நற்செய்திப் பணி செய்துவந்தார்.

அந்தோனி மரிய கிளாரட் நற்கருணையின் மீதும், அன்னை மரியாவின் மீதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார்; அன்னை மரியாவைப் பற்றி நிறைய எழுதினார். ஒரு பதிப்பகம் ஏற்படுத்தி, அதன்மூலமாக நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு நற்செய்தி அறிவித்து வந்தார். அந்தோனி மரிய கிளாரட் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுதிய புத்தகங்கள் 150 க்கும் மேல் இருக்கும். 1849 ஆம் ஆண்டு கிளரிசியன் என்ற சபையை ஏற்படுத்தி, அச்சபையின் வழியாக நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்னும் துரிதப்படுத்தினார். இவர் ஆற்றிவந்த பணிகளைப் பார்த்து திருச்சபை அவரை கியூபா நாட்டின் தலைநகரான சந்தியாகு என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தியது. அப்பொறுப்பை இவர் மிகவும் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்.

அந்தோனி மரிய கிளாரட் ஆயராக உயர்ந்த பிறகு இறைமக்களின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்வில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக ஒழுங்கு படுத்தப்படாத 8000 க்கும் மேற்பட்ட திருமணங்களை முறைப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் ஆயராக பணியாற்றிய இடத்தில் மக்கள் அனைவரும் ஏழைகளாக இருந்தார்கள். எனவே, இவர் கல்விக்கூடங்களை நிறுவி அவர்களுக்கு கல்வியறிவு புகட்டினார்; வியசாயிகள் வாழ்வுபெற புதிய புதிய விவசாய உக்திகளைப் பயன்படுத்தி அவர்களுடைய வாழ்விலும் ஒளியேற்றி வைத்தார். இப்படிப்பட்ட தருணத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்த இரண்டாம் இசபெல்லா தன்னுடைய அரண்மனையில் ஆன்மீக ஆலோசக இருக்கவேண்டும் என்று கிளாரட்டைக் கேட்டுக்கொண்டார். அவருடைய அழைப்புக்கு இணங்கி, அந்தோனி மரிய கிளாரட் அங்கு சென்று பணிசெய்தார். 1870 ஆம் ஆண்டு முதலாம் வத்திக்கான் சங்கம் கூடியபோது இவர் திருத்தந்தையின் வலுவாவரத்தைக் குறித்துப் பேசி திருச்சபைக்கு பக்கபலமாக இருந்தார். இப்படி பல்வேறு பணிகளைச் செய்துவந்த அந்தோனி மரிய கிளாரட் 1870 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவர் அடிக்கடி சொல்கின்ற வசனம், “நான் போய் நற்செய்தி அறிவிக்காத இடத்தில் என்னுடைய புத்தகம் சென்று நற்செய்திப் பணியை அறிவிக்கும்” என்பதாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அந்தோனி மரிய கிளாரட்டின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அன்னை மரியாவிடம் பக்தி

அந்தோனி மரிய கிளாரட் அன்னை மரியாவிடம் ஆழமான, அசைக்க முடியாத பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த பக்தி அவரை பல்வேறு இடர்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றியது.

இவர் குருமானவராகப் படித்துக்கொண்டிருக்கும்போது தெரியாமல் கிணற்றுக்குள் விழுந்து, மூழ்கத் தொடங்கினார். அப்போது இவர் ‘மரியே என்னைக் காப்பாற்றும் என்று கத்தத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு அவ்வழியாக வந்த வழிபோக்கர் ஒருவர் கிணற்றுக்குள்ளே விழுந்து, இவரைக் காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றிய வழிபோக்கர் அன்னை மரியா அனுப்பி வைத்த மனிதர் என்றே அவர் நம்பினார்.

அந்தோனி மரிய கிளாரட்டைப் போன்று நாம் அன்னை மரியாவிடம் ஆழமான விசுவாசம், பக்தி கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். ‘மாதாவின் பிள்ளை அவலமாய் சாவதில்லை’ என்பார்கள். நாம் அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு வாழும்போது அவர் நம்மை எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றுவார் என்பது உறுதி.

எனவே, அந்தோனி மரிய கிளாரட்டின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று அன்னையிடம் பக்தி கொண்டுவாழ்வோம், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image