St. Evaristus Pope

அக்டோபர் 26

தூய எவரிஸ்டுஸ்

mary

தூய எவரிஸ்டுஸ் (அக்டோபர் 26)

“மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்” (மத் 10: 32, 33)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் எவரிஸ்டுஸ் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் எருசலேமிலிருந்து கிரீஸில் குடியேறிய ஒரு யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர்.

தொடக்கத்தில் இவரும் இவருடைய பெற்றோரைப் போன்று யூத மதத்தைத் தழுவியவர்தான். ஆனால் கிறிஸ்துவின்மீது கொண்ட பற்றினால் இவர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவினார். அது மட்டுமல்லாமல் உரோமை நகருக்குச் சென்று குருவாகவும் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இவர் உரோமைக்குச் சென்று, குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட காலத்தில், அங்கு திருத்ததந்தையாக இருந்த திருத்தந்தை கிளமென்ட் உரோமையர்களால் கொல்லப்பட்டார். இதனால் மக்கள் எல்லாரும் எவரிஸ்டுஸ்தான் அடுத்த திருத்தந்தையாக வேண்டும் கேட்டார்கள். மக்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க எவரிஸ்டுசும் கி.பி.98 ஆம் ஆண்டு வாக்கில் திருத்தந்தையாக உயர்ந்தார்.

திருதந்தையாக உயர்ந்த எவரிஸ்டுஸ் எட்டு ஆண்டுகள் இறைமக்களை விசுவாசத்தில் மேலும் மேலும் உறுதிப்படுத்தினார். அந்த காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடந்தன. எவரிஸ்டுஸ் கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதும் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருப்பதைக் கேள்விப்பட்ட உரோமையர்கள் அவரைப் பிடித்து, கடுமையாகச் சித்ரவதை செய்து, கடைசியில் 107 ஆம் ஆண்டு கொன்றுபோட்டார். இவ்வாறு திருத்தந்தை எவரிஸ்டுஸ் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி, தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எவரிஸ்டுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இன்னும் முன்னேறு

திருத்தந்தை தூய எவரிஸ்டுஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவரிடம் வெளிப்பட்ட ‘இன்னும் முன்னேறு’ என்ற பண்புதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பண்பாக, பாடமாக இருக்கின்றது. எவரிஸ்டுஸ் ஒருகாலத்தில் யூதராக இருந்தார், அந்தபின்னர் கிறிஸ்தவரானார். கிறிஸ்தவரான பின்புகூட சாதாரண கிறிஸ்தவராக இருக்கவில்லை, ஒரு குருவாகி, அதன்பின் திருத்தந்தை ஆகி, கடைசியில் ஒரு மறைசாட்சியாகி, புனிதராகவும் மாறினார். இப்படி அவருடைய வாழ்வில் தொடர் முன்னேற்றமாகத்தான் இருந்தது.

தூய எவரிஸ்டுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நாம் நம்முடைய வாழ்வில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கின்றோமா? அல்லது எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையில், தேக்க நிலையில் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மனித வாழ்க்கை என்பது ஓர் தொடர் ஓட்டம், என்றைக்கு நாம் நம்முடைய ஓட்டத்தை நிறுத்திக் கொள்கின்றோமோ? அல்லது முன்னேறாமல் இருக்கின்றோமோ? அன்றைக்கே நாம் இறந்தவர்களுக்குச் சமமாகிவிடுகின்றோம் என்பதுதான் அர்த்தம்.

ஓர் ஊரில் விறகு வெட்டும் தொழிலாளி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஒரு துறவியைச் சந்தித்தார். “சுவாமி! நான் சிறுவயது முதலே விறகு வெட்டுகிறேன். சிறுவயதில் நான் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இருக்கின்றேன், என்னுடைய குடும்பமும் அப்படித்தான் இருக்கின்றது. என்னுடைய வாழ்வில் ஏதாவது மாற்றம் ஏற்பாடாதா?” என்று கேட்டார். அதற்கு துறவி அவரிடம், “இன்னும் முன்னேறு! என்று சொல்லிவிட்டு அமைதியானார். வேறெதுவும் அவருடைய வாயிலிருந்து வெளிவரவில்லை.

துறவி சொன்னதை விறகுவெட்டி தீவிரமாக யோசித்துப் பார்த்தார். அவருடைய வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்தவராய், மறுநாள் வழக்கமாக வெட்டும் இடத்தை விட்டு, காட்டிற்குள் அதிகதூரம் சென்றார். அங்கு சந்தன மரங்களைக் கண்டார். அதை வெட்டி விற்று பணக்காரர் ஆனார். சிலநாட்களுக்குப் பிறகு இன்னும் முன்னேறிச் சென்றார். ஒரு நதிக்கரையில் வெள்ளிச் சுரங்கம் இருப்பதைக் கண்டார். தன் பக்கம் அதிர்ஷ்டம் வந்ததை என்னை மகிழ்ந்தார். இன்னும் ஒருசில மாதங்கள் கழித்து, இன்னும் முன்னேறிச் சென்றார். அங்கு தங்கச் சுரங்கம் இருந்தது. அதிலிருந்து தங்கத்தை அள்ளியெடுத்து பெரிய நகைக்கடை வைத்து பெரும் பணக்காரர் ஆனார்.

இது கற்பனைக் கதையாக இருந்தாலும் கதையில் வரும் விறகு வெட்டி, தொடர்ந்து முன்னேறிச் சென்றதால், அவருடைய வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். நம்முடைய விசுவாச வாழ்விலும் தொடர்ந்து முன்னேறிச் சென்றால், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி.

ஆகவே, தூய எவரிஸ்டுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று விசுவாச வாழ்வில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image