St. Simon & St. Jude

அக்டோபர் 28

திருத்தூதர்களான தூய சீமோன், யூதா ததேயு

marymary

திருத்தூதர்களான தூய சீமோன், யூதா ததேயு

நிகழ்வு

திருத்தூதர் யூதா ததேயுவைக் குறித்து பாரம்பரியமாகச் சொல்லப்படக்கூடிய ஒரு செய்தி.

மெசபடோமியாவுக்கு அருகில் இருந்த எடேசா என்னும் இடத்தில் அப்காரஸ் என்ற மன்னன் இருந்தான். அவன் இயேசுவைக் குறித்தும் அவர் ஆற்றி வந்த புதுமைகளைக் குறித்தும் கேள்விப்பட்டான். அவன் தனக்கு இருக்கும் தொழுநோயை இயேசு வந்து குணப்படுத்தும்படி கடிதத்தின் வழியாகக் கேட்டுகொண்டான். ஆனால் இயேசுவோ, பணி நிமித்தமாக அங்கு வர இயலாது, தன்னுடைய சீடர்களில் ஒருவரை அங்கு அனுப்பி வைப்பதாகச் செய்தியை அனுப்பிவைத்தார். இதற்கிடையில் அந்த மன்னன் தன்னுடைய அரசவை ஓவியனை அழைத்து, இயேசுவின் முகத்தை ஒரு துணியில் வரைந்துகொண்டு வருமாறும், அந்தத் துணியில் பதியும் முகத்தைதான் பார்த்தாலே போதும் குனமடைவேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க அரசவை ஓவியன் இயேசுவின் முகத்தை வரைந்துகொண்டு வருவதற்காக இயேசு இருக்கும் இடத்திற்கு வந்தான். ஆனால் அந்த அரசபை ஓவியனால் இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசத்தினால் அவருடைய முகத்தை துணியில் வடிக்க முடியவில்லை. அப்போது அங்கு இருந்த யூதா ததேயுதான் இயேசுவின் முகத்தை துணியில் வடித்து, அதனை அந்த அரசபை ஓவியனிடத்தில் கொடுத்து அனுப்பினார். துணியில் பதிந்திருந்த இயேசுவின் முகத்தைப் பார்த்த மன்னன் தன்னுடைய தொழுநோயிளிலிருந்து குணம் பெற்றான்.

இன்று திருச்சபையானது தூய சீமோன், தூய யூதா ததேயுவின் விழாவினைக் கொண்டாடுகின்றது. அவர்களுடைய வாழ்வும், அவர்கள் ஆற்றிய பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்க்கை வரலாறு

தூய சீமோன்

திருத்தூதரான சீமோனைக் குறித்து, திருத்தூதர்களின் அட்டவணையைக் தவிர்த்து வேறு எங்கும் காணக் கிடைக்கவில்லை. ஒருசில அறிஞர்கள் இவர் கானாவூரில் நடைபெற்ற திருமணவிழாவில் மணமகனாக இருந்தவர் என்றும், இயேசு செய்த புதுமையைக் கண்டு, அவரைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார் என்றும் கூறுவார். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் கிடையாது. தீவிரவாதி எனப்பட்ட சீமோன் என அழைக்கப்படுவதால் இவர் யூதர்களை ஆட்சிசெய்து வந்த உரோமையர்களின் கொட்டத்தை அடக்கி, தங்களுடைய ஆட்சியை நிறுவ முயன்றோர் குழுவில் இருந்திருக்கலாம் என நம்பலாம். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு இவர் முதலில் எகிப்த்திற்கும் அதன்பிறகு தெற்கு ஆப்ரிக்காவிற்கும் பின்னர் பிரிட்டனுக்கும் சென்று நற்செய்தி அறிவித்ததாகும், இறுதியில் பெர்சியாவிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கும்போது எதிரிகளால் இரம்பத்தால் உடல் இரண்டாக அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

யூதா ததேயு

இவரைக் குறித்தும் விவிலியத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கவில்லை. திருத்தூதர்கள் அட்டவணையில் இவர் சிமோனோடு இணைந்து வருகின்றார் (லூக் 6:16). இவர் இயேசுவின் நெருங்கிய உறவினர்; இயேசுவைப் போன்று இருந்ததால் பலருக்கு இயேசுவையும் இவரையும் வித்தியாசப்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.

நற்செய்தியில் இவர் பேசிய ஒரு வசனம், “ஆண்டவரே நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் செல்கிறேரே, ஏன்?” என்பதுதான் (யோவா 14:22). யூதா கேட்ட கேள்விக்கு ஆண்டவர் இயேசு சொல்கின்ற பதில் நம்மை சிந்திக்க வைக்கின்றது, “என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்புகொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” என்பதுதான் யூதாவின் கேள்விக்கு இயேசுவின் பதிலாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு இவர் எடேசாவிற்கு சென்று நற்செய்தி அறிவித்ததாகும், அங்கிருந்த மன்னனின் நோயை நீக்க, அவர் கிறிஸ்தவத்தைத் தழுவினார் என்று சொல்லப்படுகின்றது.

எடேசாவில் நற்செய்திப் பணியை ஆற்றிய பிறகு யூதா பெர்சியா நாட்டிற்குச் சென்று நற்செய்திப் பணிசெய்ததாகச் சொல்லப்படுகின்றது. இவர் பெர்சியாவில் நற்செய்திப் பணி செய்துகொண்டிருக்கிறபோதுதான் அங்கிருந்த எதிரிகள் இவரை அம்புகளால் எய்து கொன்றுபோட்டார்கள். யூதா தான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்ற நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவித்து நற்செய்தியின் தூதுவராய் விளங்கினார்.

இவர் கைவிடப்பட்டோர், அனாதைகள், முதியோர் போன்றோருக்குப் பாதுகாவலராக விளங்குகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருதூதர்களான தூய சீமோன், யூதா ததேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழை எளியவர்களுக்கு உதவி

தூய யூதா ததேயு கைவிடப்பட்டோர், அனாதைகளுக்குப் பாதுகாவலராக விளங்குகின்றார். அப்படியானால் அவர் இத்தகைய மக்களுக்கு மத்தியில் பணி செய்திருக்கவேண்டும், அவர்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கவேண்டும் அதனால்தான் இவர் இத்தகையதோருக்குப் பாதுகாவலராக விளங்குகின்றார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்மோடு வாழும் ஏழை எளியவர் கைவிடப்பட்டோருக்கு உதவி செய்து வாழுகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்”. அப்போது நேர்மையாளர்கள் அவரிடம் அது எப்படி என்று கேட்பார்கள். அதற்கு இயேசு, “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்குள் ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்பார் (மத் 25: 35- 40). நாம் சாதராண மக்களுக்கு நற்காரியங்களைக் செய்யும்போது அது சர்வேசுவரனுக்கே செய்வதாக இயேசுவால் பார்க்கப்படுகின்றது. எனவே, நாம் நம்மோடு வாழும் ஏழை எளிய மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும்.

2010 ஆம் ஆண்டு சி.என்.என் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியால் உலகின் தலைசிறந்த 10 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதுரையைச் சேர்ந்த நாராயண கிருஷ்ணன் என்னும் இளைஞர். எதற்காக அவர் உலகின் தலைசிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பார்க்கும்போது, நாராயண கிருஷ்ணன் 2002 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை இரயில் நிலையம் வந்தபோது, அங்கே முதியவர் ஒருவர் உணவுக்குப் போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே, அவர் வெளிநாட்டு வேலையை துறந்துவிட்டு மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை அவர் 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி இருக்கிறார், இன்னும் வழங்கிகொண்டிருக்கிறார். இதற்காக அவர் “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பை நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருவதே இவருடைய பணியாகும். இவர் ஆற்றிவரும் இத்தகைய பணியைப் பார்த்துதான் சி.என்.என் என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி அவருக்கு உலகின் தலைசிறந்த மனிதர் என்ற விருதை வழங்கி கவுரவித்தது.

நம்மோடு வாழும் கைவிடப்பட்டோர், அனாதைகள் போன்றோருக்கு உதவிகளைச் செய்யவேண்டும் என்பதைத்தான் இவருடைய வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, திருத்தூதர்களான தூய சீமோன், யூதா ததேயுவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவர்களைப் போன்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்போம், நம்மோடு வாழும் கைவிடப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வோம், அவர்களில் இயேசுவைக் காண்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image