St. Alphonsus Rodriguez St. Dorothy Of Montau

அக்டோபர் 30

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ்

mary

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் (அக்டோபர் 30)

“புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகிறார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகிறார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின்மேல் அவர் உலகை நிறுவினார்” (1 சாமு 1:8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள செகோவியா என்ற ஊரில் 1533 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே கிறிஸ்தவ விசுவாசத்தில் மேலோங்கி வளர்ந்து வந்தார். தன்னுடைய பிழைப்பிற்காக இவர் துணி வியாபாரம் செய்துவந்தார்.

இவருக்கு 26 வயது நடக்கும்போது திருமணம் நடைபெற்றது. இறைவன் இவருக்கு மூன்று பிள்ளைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இப்படி இவருடைய இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும்போது இவருடைய துணி வியாபாரம் நொடிந்துபோனது, இவருடைய பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக இறக்கத் தொடங்கினார்கள். இதைப் பார்த்து அதிர்ந்து போன அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் செய்வதறியாது திகைத்தார். பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், இறைவன் தன்னை தன்னுடைய பணிக்கென அழைக்கின்றாரோ என உணர்ந்து, துறவற சபையில் சேர முயன்றார். ஆனால் இவருக்கு போதிய கல்வியறிவு இல்லாததால், யாருமே இவரை தங்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ள முன்வரவில்லை. கடைசியில் இவரை சேசு சபையினர் தங்களுடைய சபையில் ஒரு சகோதரராக இருந்து பணிசெய்ய சொல்ல, இவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, அந்த சபையில் இணைந்தார். அப்போது இவருக்கு வயது 50.

இதற்குப் பின்பு அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் ஒருசில பயிற்சிகளுக்குப் பின்பு மஜோர்காவில் உள்ள ஒரு சேசு சபை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இவர் வாயில்காவலராக (Door –Keeper) இருந்து பணிசெய்யத் தொடங்கினார். தனக்குக் கொடுக்கப்பட்டது மிகவும் சாதாரண வேலையாக இருந்தாலும் அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் அதனை மிகவும் தாழ்ச்சியான உள்ளத்தோடு செய்து வந்தார். இதைவிடவும் இவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் இத்தகைய வாழ்வைப் பார்த்துவிட்டு அவருடைய சபைத் தலைவர் அவரை, “அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் ஒரு சாதாரண மனிதர் அல்ல, மனிதர் உலகில் இருக்கின்ற ஒரு வானதூதர்” என்று புகழ்ந்தார். அந்தளவுக்கு அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் வாழ்வு இருந்தது.

இப்படி எளிமைக்கும் தாழ்ச்சிக்கும் பக்திக்கும் இலக்கணமாக விளங்கிய அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் 1617 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறக்கும்போது இயேசுவின் பெயரையும் மரியாவின் பெயரையும் உச்சரித்துக்கொண்டே இறந்தார். இவருக்கு 1888 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு பணிசெய்வோம்.

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கின்றபோது நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய தாழ்ச்சியான வாழ்வுதான். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட மிகச் சாதாரண வேலையைக் கூட தாழ்ச்சியான உள்ளத்தோடுதான் செய்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியான உள்ளத்தோடு பணிசெய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒருசமயம் அவர் தன்னுடைய சீடர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தொன்று ஏற்பாடு செய்தார். விருந்திற்கு அழைக்கப்பட்ட எல்லாருமே வந்திருந்தார்கள். விருந்திற்கு வந்திருந்த அனைவருக்கும் விவேகானந்தர்தான் பணிவிடை செய்தார். இதைப் பார்த்துவிட்டு அவருடைய சீடர்கள் அவரிடம், “ஒரு குரு சீடர்களுக்கு பணிவிடை செய்வதா?” என்று சொல்லி அவரைத் தடுத்தனர். அதற்கு அவர் அவர்களிடம், “இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவர் தன்னுடைய சீடர்களின் பாதங்களையே கழுவினார். அவரைப் போன்று நான் உங்களுடைய பாதங்களையா கழுவினேன். பணிவிடைதானே செய்தேன்” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவர்களிடம், “ஒருவேளை இப்படிப்பட்ட மகானுடைய காலடிகளைக் கழுவ எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தால், நான் என்னுடைய இரத்தத்தால்கூட கழுவுவேன்” என்றார். இதைக் கேட்டு அவருடைய சீடர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

ஆம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு பணி செய்யவேண்டும், அதுதான் உயர்வுக்கான வழி.

ஆகவே, தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

 

image