St. Agricola & Vitalis St. Charles Borromeo

நவம்பர் 4

சார்லஸ் பொரோமேயு

mary

சார்லஸ் பொரோமேயு (நவம்பர் 04)

நிகழ்வு

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த திரிதெந்திய பொதுசங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த சார்லஸ் பொரோமேயு மிகவும் கடினமாக உழைத்து வந்தார். அப்போது அவருக்கு பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவரை அதிகமாக எதிர்த்தவர்கள் ஹுமிலியாடி சபையைச் (Congregation Of Humiliati) சார்ந்தவர்கள்தான். அவர்கள் ஆடம்பரமாகவும், மிகவும் பகட்டான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். சார்லஸ் பொரோமேவோ துறவிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழவேண்டும் என்று சொல்லிவந்தார். இது பிடிக்காமல்தான் அந்த சபையைச் சேர்ந்தவர்கள் சார்லஸ் பொரோமேவைக் கொல்லப் பார்த்தார்கள். ஒருநாள் சார்லஸ் பொரோமேயு ஆலயத்தில் மக்களோடு ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஹுமிலியாடி சபையைச் சேர்ந்தவர்கள் கூலியாட்களை வைத்து, துப்பாக்கியினால் சுட்டு அவரை வீழ்த்தப் பார்த்தார்கள். ஆனால் குறி தவறி சார்லஸ் பொரோமேயு உயிர்பிழைத்தார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் எல்லாரும் திரும்பிப் பார்த்தபோது சார்லஸ் பொரோமேயு மிகவும் பொறுமையாக அவர்களிடம், “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, என்னைச் சுட நினைத்தவர்களையும் நான் மன்னித்துவிட்டேன். நாம் தொடர்ந்து இறைவனைத் தொழுவோம்” என்று சொல்லிவிட்டு, மக்களோடு ஜெபிக்கத் தொடங்கினார்.
தன்னைக் கொல்ல நினைத்தவர்களையும் மன்னிக்கும் குணம் உடையவராக விளங்கினார் தூய சார்லஸ் பொரோமேயு விளங்கினார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

வாழ்க்கை வரலாறு

சார்லஸ் பொரோமேயு பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள அரோனா என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தை கில்பர்ட் பொரோமேயு, தாய் மார்கரெட் தே மெடிசி என்பவர் ஆவார். சார்லஸ் பொரோமேவின் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். அதனால் இவருடைய தந்தை இவர் கல்வி கற்க மிலன் நகருக்கு அனுப்பி வைத்தார். சார்லஸ் பொரோமேவோ கல்வியில் சிறந்து விளங்கினார். எந்தளவுக்கு என்றால் இவர் தன்னுடைய 21 ஆம் வயதிலேயே சிவில் சட்டத்திலும், திருச்சபை சட்டத்திலும் (Canon Law) முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருடைய திறமையைப் பார்த்த அப்போது இருந்த திருத்தந்தை நான்காம் பவுல் இவரை மிலன் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். (திருத்தந்தை நான்காம் பவுல் சார்லஸ் பொரோமேயுவின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்). சார்லஸ் பொரோமேயு சிறு வயதினராகவும் குருவாக அருட்பொழிவு செய்யப்படாத நிலையிலும் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டாலும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே செய்தார். குறிப்பாக 1562 ஆம் ஆண்டில் நடைபெற்ற திரிதெந்திய சங்கத்தில் இவர் திருத்தந்தைக்குப் பக்கபலமாக இருந்தார்.

இதற்கிடையில் சார்லஸ் பொரோமேயுவின் சகோதரர் இறந்துபோனார். இதனால் மக்கள் அனைவரும் சார்லஸ் பொரோமேயு குடும்பப் பொறுப்புகளைப் பார்க்கப் போய்விடுவார், இனிமேல் அவர் ஆயராக பணிசெய்ய மாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ குடும்பத்தை கடவுள் பார்த்துக்கொள்வார், நான் இறைப்பணி செய்யப்போகிறேன் என்று தன்னுடைய தந்தையிடம் சொல்லிவிட்டு இறைப்பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இதைப் பார்த்து மக்கள் அனைவரும் வியந்து போய் நின்றார்கள். சகோதரரின் பிரிவிலிருந்து மீண்டுவந்த சார்லஸ் பொரோமேயு குருத்துவத்திற்காக தன்னையே முழுவதும் தயாரித்து 1563 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாகிய மாறிய பிறகு அவர் ஏற்கனவே செய்துவந்த மிலன் நகரின் ஆயர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சார்லஸ் பொரோமேயு இரக்கமும் அன்பும் உதவி செய்வதில் வல்லவராகவும் விளங்கினார். 1576 – 78 ஆம் ஆண்டுகளில் மிலன் நகரில் கடுமையான கொள்ளை நோய் ஏற்பட்டது, அதனால் மக்களில் பெரும்பாலனவர்கள் இறந்துபோனார்கள். எஞ்சியிருந்தவர்கள்கூட தங்களுடைய சொந்த பந்தங்களை இழந்து உணவிற்கு பெரிதும் கஷ்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சார்லஸ் பொரோமேயு தன்னிடம் இருந்த பணம் பொருள், ‘Neapolitan Pricedom Of Dric எனப்படும் பட்டத்தையும் கூட மக்களுக்காகத் துறந்து அவர்களுக்கு உதவிசெய்தார். அது மட்டுமல்லாமல் நோயினால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு மருத்தவ உதவிகள் செய்வதிலும் பெரும்பங்காற்றினார்.

சார்லஸ் பொரோமேயு சமூகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல் ஆன்மீகப் பணிகளையும் செய்துவந்தார். திரிதெந்திய பொதுச் சங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த பெரிதும் உழைத்தார், அதற்காக அவர் நிறையபேரிடமிருந்து எதிர்ப்புகளை சந்தித்தார். ஆனாலும் அவர் மனந்தளராமல் திருச்சபை கற்பித்தவற்றை தான் கடைபிடித்ததோடு மட்டுமல்லாமல், அதனை எல்லாரும் கடைபிடிக்க பெரிதும் பாடுபட்டார். குருமடங்களை நிறுவி, குருக்களின் ஆன்மீகப் பயிற்சிக்காக பெரிதும் உழைத்தார். இவருடைய பணிகளைப் பார்த்த, இவருடைய சம காலத்தவரும் புனிதருமான பிலிப் நேரி இவரை இரும்பு மனிதர் என அன்போடு அழைத்தார். சார்லஸ் பொரோமேயு எத்தனையோ பணிகளைச் செய்தாலும் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதில்லை. அவர் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த ஜெப வாழ்வே அவருக்கு எல்லாப் பணிகளையும் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இப்படி இறைப்பணிக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட சார்லஸ் பொரோமேயு தன்னுடைய நாற்பத்தி ஆறாம் வயதில் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். 1616 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சார்லஸ் பொரோமேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தாழ்ச்சி

தூய சார்லஸ் பொரோமேயு தாச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் மிலன் நகரில் பேராயராக இருந்தாலும் அதை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் எல்லாரிடத்திலும் தரைமட்டும் இறங்கி வந்து, மிகவும் தாழ்ச்சியோடு பழகினார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் தாழ்ச்சி என்ன பண்பு இருக்கின்றதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” (லூக் 14:11) என்று. நாம் தாழ்ச்சியோடு வாழும்போது தூய சார்லஸ் பொரோமேயு போன்று இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

2. தேவையில் இருப்போருக்கு உதவி

சார்லஸ் பொரோமேயு தேவையில் இருப்போருக்கு உதவிடும் நல்ல மனத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரின் இத்தகைய பண்பிற்கு 1576- 78 ஆம் ஆண்டுகளில் மிலன் நகரில் ஏற்பட்ட கொள்ளைநோயின் போது அவர் ஆற்றிய அரும்பணிகளே சான்றாக இருக்கின்றது. சார்லஸ் பொரோமேயு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தார். இன்று அவரிடம் இருந்த இரக்க குணம், உதவிடும் பண்பு நம்மிடம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

2010 ஆம் ஆண்டு ஹைதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில் 1,50,000 மக்களுக்கும் மேல் இறந்துபோனார்கள். நிறையபேர் தங்களுடைய வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்துபோய் நின்றார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதையாக நின்றார்கள். இவர்களையெல்லாம் எப்படி பராமரிப்பது என்று அரசாங்கம் குழம்பிப்போய் நின்றது. அப்போதுதான் உலக நாடுகளில் சில, குறிப்பாக அமெரிக்காவில் இருந்த நிறைய நல்ல உள்ளங்கள், தங்களுடைய பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை தங்களுடைய இல்லங்களில் ஏற்று, அவர்களைத் தங்களுடைய குழந்தைப் போன்று வளர்ப்பதற்கு முன்வந்தார்கள். அவர்கள் செய்த இந்த நல்ல காரியத்தைப் பார்த்து உலகமே வியந்துபோய் நின்றது.

தேவையில் இருக்கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. விலிலியமும் தேவையில் உள்ள மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதைத் தான் போதிக்கின்றது (எசா 58:5-10). ஆகவே, தூய சார்லஸ் பொரோமேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று இறைப்பணிக்காக நம்மை முழுதாய் அர்ப்பணிப்போம், தாழ்ச்சியோடும் தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவிடும் நல்ல பண்போடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image