St. Bertilla St. Elizabeth St. Zechariah

நவம்பர் 5

✠ புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின் ✠ (St. Maria Bertilla Boscardin)

mary

✠ புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின் ✠ (St. Maria Bertilla Boscardin)

அருட்சகோதரி மற்றும் செவிலியர்: (Nun and Nurse)
பிறப்பு: அக்டோபர் 6, 1888 பிரெண்டோலா, வெனேடோ, இத்தாலி (Brendola, Veneto, Italy)
இறப்பு: அக்டோபர் 20, 1922 (வயது 34) ட்ரெவிஸோ, இத்தாலி (Treviso, Italy)
முக்திபேறு பட்டம்: ஜூன் 8, 1952 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)
புனிதர் பட்டம்: மே 11, 1961 திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் (Pope John XXIII)
முக்கிய திருத்தலம்: விசென்ஸா, வெனடொ, இத்தாலி (Vicenza, Veneto, Italy)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 20

புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின், முதலாம் உலகப் போரின்போது, விமானப்படை தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோயுற்ற சிறார்களுக்கும் தன்னலமற்ற சேவையாற்றுவதில் உன்னத முத்திரை பொறித்த இத்தாலி நாட்டு கத்தோலிக்க அருட்சகோதரியும் செவிலியருமாவார். பின்னாளில், இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை:
“அன்னா ஃபிரான்செஸ்கா போஸ்கார்டின்” (Anna Francesca Boscardin) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலி நாட்டின் “வெனேடோ” (Veneto) பிராந்தியத்தின் “பிரெண்டோலா” (Brendola) எனும் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தையான “ஆன்ஜெலோ போஸ்கார்டின்” (Angelo Boscardin), பின்னாளில் தமது மகள் மரியா பெர்டில்லா’வின் முக்திபேறு பட்டமளிக்கும் முன்னேற்பாட்டு செயல்முறை நடவடிக்கைகளின்போது, தாம் ஒரு பொறாமை குணமுள்ளவரென்றும், அடிக்கடி மது அருந்திவிட்டு, மகளை அடிக்கும் வன்முறையாளரென்றும் சாட்சியமளித்தார்.

குழந்தைப் பருவத்திலேயே குடும்பத்திற்காக வயல்வெளிகளில் வேலை செய்ய வேண்டியிருந்த காரணத்தால், தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலாதவராய் இருந்தார். பள்ளிக்கு சென்ற காலத்தில் கூட, அருகாமையிலுள்ள ஒரு வீட்டின் பணிப்பெண்ணாக பணி புரிந்தார். அவரால் குறிப்பிட்ட அளவு திறமைகளை காட்ட இயலவில்லை. குறிப்பாக, அவர் ஒரு புத்திசாலி பெண் இல்லை என்று கருதப்பட்டார். மேலும், பெரும்பாலும் அவர் பிறரின் நகைச்சுவையின் இலக்காக இருந்தார். இவையுள்ளிட்ட இவரது மந்தமான தன்மைக்காக, உள்ளூர் மதகுரு, இவரை வாத்து என்று கிண்டல் வார்த்தைகளால் அழைப்பார்.

அக்காலத்தில், பொதுவாக புதுநன்மை அருட்சாதனம் வாங்குவதற்கான வயது பன்னிரெண்டாகும். ஆனா இவர் தமது எட்டு வயதிலேயே புதுநன்மை அருட்சாதனம் வாங்க அனுமதிக்கப்பட்டார். இவர் தமது பங்கு மக்களின் “மரியாளின் குழந்தைகள் சங்கம்” என்னும் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். மரியா பெர்டில்லாவின் பங்குத்தந்தை இவருக்கு மறைக்கல்வி புத்தகமொன்றினை (Catechism) பரிசாக இவருக்கு அளித்திருந்தார். இவர் மரித்தபோது, அவர் அணிந்திருந்த துறவற சீருடைப் பையில் அப்புத்தகம் இருந்தது.

விசென்ஸா (Vicenza):
இவரது வழக்கமான மந்தத் தன்மை காரணமாக இவர் சேருவதற்காக விண்ணப்பித்திருந்த துறவற சபை ஒன்று இவரை நிராகரித்தது. பின்னர், 1904ம் ஆண்டு, விசென்ஸா நகரின் “தூய இருதயத்தின் மகள்கள்” (Daughters of the Sacred Heart) அமைப்பின் “புனித டோரதி’யின் ஆசிரியைகளின்” (Teachers of Saint Dorothy) உறுப்பினராக மரியா பெர்டில்லா ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கே வைத்துதான் “மரியா பெர்டில்லா” எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். தம்மைப்பற்றிய முந்தைய விமர்சனங்களை ஏற்கனவே மனதிற்குள் உள்வாங்கியிருந்த பெர்டில்லா, “புகுநிலை துறவியரின் தலைவியிடம்” (Novice-mistress), “என்னால் எதையும் செய்ய முடியாது; நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்; நான் ஒரு வாத்து; எனக்கு கற்பியுங்கள்; நான் ஒரு புனிதையாக வேண்டும்.” என்று அடிக்கடி சொல்வார். பெர்டில்லா, அந்த துறவு மடத்தில், ஒரு சமையலறை பணிப்பெண்ணாகவும், துணி துவைக்கும் பணிப்பெண்ணாகவும் மூன்று வருடங்கள் பணியாற்றினார்.

ட்ரெவிஸோ (Treviso) :
பின்னர், ட்ரெவிஸோ நகரிலுள்ள, அவர்களது சபையின் கீழுள்ள நகரசபை மருத்துவமனையில் செவிலியர் கல்வி கற்பதற்காக பெர்டில்லா அனுப்பப்பட்டார். பயிற்சிக் காலத்திலேயே ஒருமுறை இவர் சமையலறை பணிக்கு அனுப்பப்பட்டார். எப்படியும் பயிற்சியை முடித்த பெர்டில்லா, மருத்துவமனையின் சிறுவர்கள் வார்டில், “டிப்தீரியா” (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோய் பாதித்த நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். “கேபர்ட்டோ” போரின் (Battle of Caporetto) பேரழிவினைத் தொடர்ந்து, ட்ரெவிஸோ (Treviso) நகரம் விமான தாக்குதலுக்கு உள்ளானபோது, அம்மருத்துவமனை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே வந்தது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பெர்டில்லா ஆற்றிய நிகரற்ற சேவை இராணுவத்தால் கவனிக்கப்பட்டு வந்தது.

பெர்டில்லாவின் இத்தகைய அர்ப்பணிப்புமிக்க சேவைகள், உள்ளூரிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. எப்படியும் அருட்சகோதரி பெர்டில்லாவின் சேவையை பாராட்ட மனமில்லாத அவருக்கு மேலுள்ள அருட்சகோதரியர், அவரை மீண்டும் சலவைப் பணிக்கு அனுப்பினார்கள். தொடர்ந்து நான்கு மாதங்கள் அதே சலவைப் பணியில் இருந்த பெர்டில்லா, அவரது தலைமை சகோதரியால் அங்கிருந்து மாற்றப்பட்டு, மருத்துவமனையின் குழந்தைகள் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர், விரைவிலேயே அவரது ஏற்கனவே நலிவடைந்திருந்த உடல் நலம், மேலும் மோசமானது. ஏற்கனவே பல ஆண்டுகளாக அவரது உடலிலிருந்த ஒரு கட்டியானது, மேலும் முற்றி, அறுவை சிகிச்சை வரை கொண்டுபோனது. நடந்த அறுவை சிகிச்சையில் அவர் பிழைக்கவில்லை. 1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இருபதாம் தேதி, 34 வயதான அருட்சகோதரி மரியா பெர்டில்லா போஸ்கார்டின் மரித்தார்.

image