Dedication of the Latern Basilica Bl.Elizabeth Datez of the Trinity

நவம்பர் 9

இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா

mary

இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா

நிகழ்வு

ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இந்தியத் திருநாட்டில் (?) நடைபெற்ற நிகழ்வு. சுக்யா என்ற சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவள். ஒருநாள் அவள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையானாள். அந்த நேரத்தில் அவளுடைய அண்டை வீட்டைச் சார்ந்தவர்கள், இந்தக் கொடிய நோய் நீங்குவதற்கு ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்தில் கொடுக்கப்படும் அர்ச்சனை மலரை எடுத்துவந்து இவளுடைய தலையில் வைக்கவேண்டும். அப்போதுதான் இவளுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்கள். அவர்களுடைய பேச்சு சரியெனப்படவே சுக்யாவின் தந்தை ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்திற்குப் புறப்பட்டார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. அது என்னவென்றால், அந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது, அப்படியே நுழைந்தால் அது தீட்டு என்று சொல்லப்பட்டது. சுக்யாயின் தந்தை எப்படியோ தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டார்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்த அவர் அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்தார். பின்னர் ஆலயத்தில் குரு கொடுத்துக்கொண்டிருந்த அர்ச்சனை மலரை வாங்குவதற்காகத் தன்னுடைய கையை நீட்டியபோது, பின்னாலிருந்து ஒரு கை அவரைத் தடுத்தது. அது யார் என்று அவர் திரும்பிப் பார்த்தபோது மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் சுக்யாவின் தந்தையிடம், “என்ன தைரியத்தில் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தாய்?. உன்னால் இந்த ஆலயமே தீட்டுப்பட்டுப் போய்விட்டது” என்று சொல்லி அவரை வெளியே போகச் சொன்னார். பின்னர் அவர் ஊரைக் கூட்டி, சுக்யாவின் தந்தைக்கு ஒருவார காலம் சிறைத்தண்டனையும் வாங்கித்தந்தார். சுக்யாவின் தந்தை ஒருவார காலம் சிறை தண்டனையை முடித்துக்கொண்டு வீட்டுத் திரும்பி வந்தபோது சுக்யா இறந்துபோய் இருந்தார். அப்போது அவர் ஆலயத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார்.
ஆலயம் – இறைவன் வாழும் இல்லம் – எல்லாருக்கும் சொந்தமானது. அதில் வேறுபாடு பார்ப்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்றாகும்.

இன்று நாம் நினைவுகூரும் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவானது ஆலயத்திற்கு உரிய சிறப்புப் பண்புகளை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அதனை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

வரலாற்றுப் பின்னணி
ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு தலைமை ஆலயம் (Cathedral) உண்டு. ஆயர்தான் இதற்குத் தலைவராக இருப்பார். ஆனால் தலைமை ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை ஆலயமாக இருப்பதுதோ இலாத்தரன் பேராலயமாகும். இதற்குத் தலைவராக இருப்பவர் திருத்தந்தை அவர்கள் ஆவார். இவ்வாலமானது 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டி நோபிள் வழங்கியது. தொடக்க திருச்சபையில் ஆலயம் என எதுவும் கிடையாது. மக்கள் இல்லங்களில் கூடி ஜெபித்து வந்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடிக்கடி வேதகலாபனைகள் நடந்ததாலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென ஆலயம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இந்த நேரத்தில்தான் கான்ஸ்டாண்டி நோபிள் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரசாங்கத்தின் அரச மதமாக அறிவித்தான். அதன் நிமித்தமாக 313 ஆம் ஆண்டு அவன் தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றி, அதனை திருச்சபைக்குத் தந்தான். 324 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வஸ்டர் ஆலயத்தை அர்ச்சித்து அதனை உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

சிறுது காலத்திற்கு இந்த ஆலயம் திருமுழுக்கு யோவானின் பாதுகாவலுக்கு வைக்கப்பட்டது, பின்னர் நற்செய்தியாளர் தூய யோவானின் பாதுகாவலில், அவருடைய பெயரில் வைக்கப்பட்டது. அது இன்று வரை அவருடைய பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருத்தந்தை அங்குதான் இருந்தார். பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை அவிஞ்னோன் என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டு, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது இலாத்தரன் பேராலயமானது சிதிலமடைந்தது காணப்பட்டது. எனவே, திருத்தந்தை தங்குவதற்கு அது சரியான இடமில்லை என்று சொல்லி, திருத்தந்தை பதினோராம் கிரகோரி சாந்தா மரியா என்ற இடத்திற்குச் சென்றார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்தூஸ் என்பவரோ தன்னுடைய இடத்தை வத்திக்கானுக்கு மாற்றினார். எனவே, அன்றிலிருந்து இன்று வரை திருத்தந்தையர்கள் வத்திகானிலே தங்கி வருகிறார்கள். இலாத்தரன் பேராலயமோ தற்போது ஓர் அருங்காட்சியம் போன்று இருக்கின்றது.
இந்த பேராயலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. ஆண்டவர் இயேசு இறுதி இராவுணவு உண்ட மேசையும், திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும் இங்குதான் இருக்கின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஆலயம் எல்லா மக்களுக்கான இறைவேண்டலில் வீடு
“ஆலயம் தொழுவது சாலமும் நன்று”, “ஆலயம் இல்லாத ஊரில் குடியிருப்பது நல்லதன்று” போன்ற முதுமொழிகள் ஆலயம் நம்முடைய வாழ்வில் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவன் தங்கும் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கின்றோமா?, அதில் வழிபடும் நாம் தூய்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், “மாசற்றவராய் நடப்போர், உளமார உண்மை பேசுபவர்; தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; அடுத்தவரைப் பழித்துரையார்; நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவோர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர் இவர்களே ஆண்டவரின் திருமலையில் குடியிருக்கத் தகுதிவுடைவர்” என்று. (திபா 15). நாம் இத்தகைய நெறிப்படி வாழ்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேல் சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி நடக்காதபோது இறைவனின் இல்லத்திற்குள் நுழைய தகுதி இல்லாமல் போய்விடுகின்றோம் என்பதுதான் உண்மை.
மேலும் ஆலயம் எல்லா மக்களுடைய வழிபாட்டிற்கும் உரியது (எசாயா 56:7). அதனை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியோ சொந்தம் கொண்டாடுவது கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது என்பதையும் நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

2. தூய ஆவி வாழும் இல்லமாகிய மனிதர்களுக்கும் மதிப்புத் தரவேண்டும்
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?, ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.” (3:16-17). ஆம், ஒவ்வொருவரும் தூய ஆவியார் வாழும் கோவில். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்து வாழவேண்டும். அப்போதுதான் இறைவன் வாழும் இல்லிடமாக நாம் மாறமுடியும். இல்லையென்றால் கடவுளில் சாபத்திற்குத் தான் நாம் உள்ளாகவேண்டி வரும். பல நேரங்களில், மனிதரால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்கும் நாம், இறைவனால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். எல்லாரிலும் எல்லாம் வல்ல இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவன் வாழும் இல்லத்திற்கு உரிய மரியாதை செலுத்துவோம், உயிருள்ள ஆலயங்களாகிய மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image