St. Martin Of Tours St. Mennas St. Theodore The Studite

நவம்பர் 11

தூர்ஸ் நகர தூய மார்டின்

mary

தூர்ஸ் நகர தூய மார்டின் (நவம்பர் 11)

நிகழ்வு
மார்டினுடைய எளிமைக் கோலத்தையும் தூய வாழ்வையும் பார்த்துவிட்டு, அவரை எப்படியாவது தூர்ஸ் நகர ஆயராக மாற்றிவிடவேண்டும் என்று நிறையப் பேர் முயன்றார்கள். ஆனால் மார்டினோ தனக்கு ஆயர் பதவியே வேண்டாம் என்று மறுத்து வந்தார்.

இதற்கிடையில் ஒருநாள், புதியவர் ஒருவர் மார்டினைச் சந்திக்க வந்தார். அவர் அவரிடம், “நோய்வாய்ப்பட்டு இருக்கும் என்னுடைய சகோதருக்கு அவரசரமாக மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன, நீங்கள் உடனடியாக வந்து, அவருக்கு உதவ முடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டார். மார்டின் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர் பின்னாலேயே சென்றார். அம்மனிதரோ மார்டினை பேராலயத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே துறவிகள், மக்கள் என்று ஏராளமான பேர் கூடி இருந்தார்கள். மார்டினுக்கு ஒன்றும் புரியவில்லை, நோய்வாய்ப்பட்டிருக்கும் சகோதருக்கு மருத்துவ உதவிகள் செய்ய வாருங்கள் என்று சொல்லிவிட்டு, இப்படி தன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கின்றாரே என்று யோசித்தார். அதற்குள் அங்கே திரண்டிருந்த துறவிகள் கூட்டம் அவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தது. நடந்ததை நினைத்து முதலில் அதிர்ச்சி அடைந்த மார்டின், பின்னாளில் அதை இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு, மிகவும் தாழ்ச்சியோடும் எளிமையோடும் ஆயர் பணியைச் செய்து வந்தார்.

தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு, இறுதிவரைக்கும் இறைத்திருவுளத்தின் படி வாழ்ந்த மார்டின் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.

வாழ்க்கை வரலாறு
மார்டின் கி.பி.316 ஆம் ஆண்டு, இப்போதைய ஹங்கேரி நாட்டில் ஒரு இராணுவ அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய பெற்றோர் கிறிஸ்தவை அறியாதவர்கள். ஆனால் மார்டின் அப்படியில்லை, சிறுவயது முதலே கிறிஸ்துவின் மீது ஆழமான பக்தியும் அன்பும் கொள்ளத் தொடங்கினார். சிறிதுகாலத்திற்கு ஹங்கேரியில் இருந்த மார்டின் குடும்பம், பணி நிமித்தமாக இத்தாலியில் உள்ள பாவியா என்னும் இடத்திற்குக் குடிபெயர்ந்தது. அக்காலத்தில் 14 வயது நிரம்பிய ஒவ்வொரு ஆண் குழந்தையும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதன்பேரில் மார்டின் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். மார்டின் இராணுவத்தில் பணிபுரிந்தது என்னவோ உண்மையாக இருந்தாலும் அவருடைய கனவெல்லாம் கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

ஒருநாள் அதிகாலை வேளையில், எமியன்ஸ் நகரை நோக்கி மார்டின் போய்க்கொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். ஏனெனில், அது கடுங்குளிர் காலம். இதைப் பார்த்து மனம் பதைபதைத்துப் போன மார்டின் தன்னுடைய இரானுடைய உடையை இரண்டாகக் கிழித்து, ஒரு பகுதியை அந்த தெருவோரப் பிச்சைக்காரருக்குப் போர்த்திவிட்டு, இன்னொரு பகுதியை தான் அணிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றார். அன்றிரவு ஆண்டவர் இயேசு மார்டினுடைய கனவில் தோன்றி, மார்டின்! இன்று காலை நீ போர்த்திய போர்வையால் என்னுடைய குளிர் போனது” என்றார். இவ்வாறு ஒவ்வொருநாளும் தான் செய்து வந்த இரக்கச் செயல்கின் வழியாக அவர் இயேசுவின் அன்பிற்குப் பாத்திரமானார்.

மார்டினுக்கு 18 வயது நடக்கும்போது இராணுவத்தை விட்டு விலகி, திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவ மறையை முறையாகத் தழுவினார். அதன்பிறகு பாய்ஸ்டர் நகரில் இருந்த ஹிலாரியாரிடம் சென்று, சீடராக இருந்து பயிற்சிகள் பல பெற்று தன்னை முழுமையாகத் தயாரித்துகொண்டார். இன்னும் சிறிதுகாலத்திற்குப் பிறகு லிகுக் என்னும் பகுதிக்குச் சென்று, அங்கு துறவற மடத்தை நிறுவினார். அதில் ஏராளமான இளைஞர்கள் வந்து ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்று துறவிகளாக மாறினார்கள். மார்டின் வாழ்ந்த காலத்தில் ஆரிய பதம் தலைவிரித்தாடியது. மார்டின் தன்னுடைய வல்லமைமிக்க போதனையால் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பியோரை முறியடித்தார். இத்தகைய சமயத்தில்தான் மார்டின் எதிர்பாராத விதமாக தூர்ஸ் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்த பின்னர் மார்டின் இன்னும் சிறப்பாக இறைப்பணியைச் செய்தார். குறிப்பாக அவர் கிராமப்புறங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்தார், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்தார், நோயாளிகளுக்கு தன்னுடைய இயன்ற மருத்துவ உதவிகளைச் செய்தார். இப்படி இறைவனின் திருக்கரத்தில் ஒரு வல்லமை மிக்கக் கருவியாய் இருந்து செயல்பட்ட மார்டின் கி.பி.397 ஆம் ஆண்டு இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். தொடக்க திருச்சபையில் மறைசாட்சியாக மரிக்காமல் மக்களால் அதிகமாக நினைவுகூரப்பட்ட ஒரு புனிதர் தூய மார்டின் என்பது குறிப்பிடத் தக்கது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மார்டினின் விழாவைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. இறைப்பணி செய்(திடல்)துகிடத்தல்
தூய மார்டினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவர் இறைப்பணியைச் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருந்தார் என்பதுதான்.

மார்டின் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரைச் சூழ்ந்துநின்ற அவருடைய அன்பர்கள், “அன்பு ஆயர் அவர்களே! நீங்கள் எப்போதும் எங்களோடு இருங்கள், எங்களைப் விட்டுப் போய்விடாதீர்கள்” என்று சொல்லி கதறி அழுதார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மார்டின் இறைவனிடம், “அன்பான இறைவா! உமது மக்கள் நான் மண்ணுலகில் இருந்து உமது பணியைச் செய்ய யாசிக்கின்றார்கள். உனக்குத் திருவுளமானால் நான் எப்போதும் உம்முடைய பணியைச் செய்யத் தயாராக இருக்கின்றேன்” என்றார்.

இந்த நிகழ்வினைப் படிக்கின்றபோது கடைசி நேரத்திலும் இறைப்பணியை செய்யவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்ததுதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

தூய மார்டினின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம் இறைப்பணி செய்ய முழுவதும் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். “இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற என் கட்டளையைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால், தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியையும் பின் மாரியையும் தருவார்” என்று இணைச்சட்ட நூலில் வாசிகின்றோம் (11: 13,14). ஆம், இறைப்பணியைச் செய்கின்றபோது இறைவன் நமக்கு ஏராளமான ஆசிர்வாதங்களைத் தருவார் என்பதைத் தான் மேலே உள்ள இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கின்றது

ஆகவே, தூய மார்டினின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணி செய்ய எப்போதும் தயாராக இருப்போம், உள்ளத்தில் தாழ்ச்சி நிறைந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்..

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image