BlVincent Eugene Bossilkov St. Cunibert St. Didacus St. Josaphat Kuncevyc

நவம்பர் 12

தூய ஜோசபாத்

mary

தூய ஜோசபாத்

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” (யோவா 10:10)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஜோசபாத், 1580 ஆம் ஆண்டு, போலந்து நாட்டில் உள்ள வில்னா என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். அதனால் இவருடைய பெற்றோர் இவரைப் படிக்க அனுப்பாமல், போபோவிக் என்ற ஒரு வணிகரித்தில் வேலைக்கு அனுப்பிவைத்தார்கள். ஜோசபாத்தும் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து, வேலை பார்த்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்திற்கு ஒத்தாசை புரிந்துவந்தார்.

இதற்கிடையில் ஜோசபாத்தின் முதலாளி, அவருடைய நன்னடத்தைக் கண்டு, அவரிடத்திலே எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய ஒரே மகளையும் அவருக்கு மணமுடித்துக் கொடுக்க முடிவுசெய்தார். ஆனால் ஜோசபாத்திற்கோ குருவாக மாறவேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், தன்னுடைய முதலாளி சொன்ன வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்லிவிட்டு, தன்னுடைய 24 வயதில் பசிலியாருடைய மடத்தில் சேர்ந்து, குருத்துவ வாழ்விற்கு தன்னுடைய அர்ப்பணித்து, 1609 ஆம் ஆண்டு குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

ஜோசபாத், அற்புதமாகப் போதிக்கும் திறனைப் பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வல்லமையோடு எடுத்துரைத்து வந்தார். இரு குழுக்களிடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவதில் இவர் வல்லவராக விளங்கினார். மேலும் புதிதாக பல துறவுமடங்களை உருவாக்கி, இறைப்பணி செய்வோருடைய எண்ணிக்கை பெறுவதற்கும் காரணமாக இருந்தார். இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. இவர் செய்துவந்த பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட திருத்தந்தை 1617 ஆம் அண்டு, இவரை இரஷ்யாவில் உள்ள விடேப்ஸ்க் என்ற இடத்தின் ஆயரராகவும், அதன்பின்னர் போலட்ஸ்கி நகரின் பேராயராகவும் உயர்த்தினார். இந்தப் பொறுப்புகளை எல்லாம் மிகவும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட ஜோசபாத், இறைமக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்ப மிகவும் பாடுபட்டார்.

இவருடைய காலத்தில் மேற்கத்திய திருஅவைக்கும் கிழக்கத்திய திருஅவைக்கும் இடையே கருத்து வேறுபாடும் பிரிவும் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கு ஒரு சுமூகமான தீர்வினைக் கொண்டுவர நினைத்த ஜோசபாத், இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். இவர் எடுத்த இந்த முயற்சிக்கு நிறைய பலன் கிடைத்தது. ஆனாலும் ஒருசிலர், திருத்தந்தையின் கைக்கூலியாக இருந்து செயல்படுகிறார் என்று இவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். இதனால் பிரச்னை பெரிதானது. 1623 ஆம் ஆண்டில் ஒருநாள், கலகக்காரர்கள் இவரைப் பிடித்துக் கொன்று போட்டார்கள். பின்னர் இவருடைய உடலை டிவினா என்ற ஆற்றில் வீசி எறிந்தார்கள். இவருக்கு 1867 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜோசபாத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆயனாக இருந்து அன்புப்பணி செய்வோம்

தூய ஜோசபாத்தின் வாழ்வு நமக்குக் கற்றுத் தருகின்ற மிக முக்கியமான பாடம், நாம் ஒவ்வொருவரும் ஆயனாக, அதுவும் நல்லாயனாக இருந்து, இறைமக்களுக்கு அன்புப் பணி செய்யவேண்டும் என்பதுதான். தூய ஜோசபாத் ஒரு நல்ல ஆயனைப் போன்று இருந்து இறைமக்களை வழிநடத்தினார். பிளவுபட்டக் கிடந்த மக்களை ஒன்றாகச் சேர்க்க எவ்வளவோ பாடுபட்டார். அதற்காக தன்னுடைய இன்னுயிரையும் ஈந்தார். இவரைப் போன்று நாம், நாம் இருக்கக்கூடிய பகுதியில் ஒரு நல்ல ஆயனாக இருந்து பணிசெய்வதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படுகின்ற அழைப்பாக இருக்கின்றது.

சீனாவில் லீ என்று ஒருவர் இருந்தார். மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்துவந்த அவர் ஓர் ஆடு வளர்த்து வந்தார். ஒருநாள் நண்பகல் வேளையில், லீ தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, திடிரென்று அவருடைய ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்தார். ஆட்டிற்கு என்னவாயிற்று என்று அவர் வெளியே சென்று பார்த்தபோது, ஆட்டை ஒரு பெரிய கரடியானது கடித்துக் கொண்டிருந்தது. உடனே அவர் ஒரு கம்பை எடுத்து, கரடியை விரட்டத் தொடங்கினார். ஆனால், துரதிஸ்டவசமாக கரடி அவரைத் தாக்கத் தொடங்கியது. இதற்கிடையில் லீயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டார் ஓடிவந்து அவரைக் காப்பாற்றினர்.
லீயின் உடலெங்கும் ஒரே கீறல்களாக இருந்தன. அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வர, அவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.
தன்னுடைய ஆட்டிற்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக தன்னுடைய உடலில் துன்பங்களை வாங்கிக்கொண்ட லீ, நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். நாமும் நாம் இருக்கின்ற பகுதிகளில் நல்ல ஆயனாக இருந்து பணிசெய்கின்ற போது துன்பங்கள் வரலாம். அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு இறைப்பணியைச் செய்வதே சிறந்தது.

ஆகவே, தூய ஜோசபாத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நல்ல ஆயனாக இருந்து பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image