St. Abbo Of Fleugy Bl. Callistus Caravario Bl. Luii Versiglia St. Francis Xavier Cabrini
St. Brice St. Homobonus St. Nicholas1 St. Stanislaus Kostka

நவம்பர் 13

J}a

mary

தூய பிரான்ஸ் சேவியர் காப்ரினி

“இனி வாழ்பவன் நானல்ல; கிறிஸ்துவே என்னும் வாழ்கிறார்” (கலா 2:20)

வாழ்க்கை வரலாறு

இன்று திரு அவையானது தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினியின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றது. காப்ரினி 1850 ஆம் அண்டு இத்தாலியில் உள்ள சான்ட் அஞ்சேலோ லொடிகியானோ என்ற இடத்தில் பிறந்தார்.

தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவருடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இவரை துறவுமடத்திற்குள் எடுக்க மறுத்துவிட்டார்கள். மேலும் ஒருசில துறவுமடங்களுக்குச் சென்றுபோதும் காப்ரினிக்கு அதுதான் நடந்தது. அப்படியிருந்தாலும் அவர் மனந்தரளாமல் ஒவ்வொரு துறவுமடத்திற்காகப் போய்க்கொண்டே இருந்தார்.

இந்நிலையில்தான் 1874 ஆம் அண்டு, பேரருட்தந்தை சேராட்டி என்பவர், காப்ரினியை கோடோக்னோ என்ற இடத்தில் இருந்த ஒரு அனாதை இல்லத்தை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தனக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்பினை காப்ரினி மிகச் சிறப்பாகச் செய்ததால், அவருடைய பேரும் புகழும் ஆயர் டோடி வரைக்கும் சென்றது. அவர் காப்ரினியைக் கூப்பிட்டு, பாராட்டி, அனாதை இல்லத்தைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆயரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத காப்ரினி, தன்னோடு மேலும் ஆறு சகோதரிகளை சேர்த்துக்கொண்டு, திரு இருதய அருட்சகோதரிகள் (Missionary Sisters of the Sacred Heart) என்றொரு சபையைத் தொடங்கி, தன்னுடைய பணியை இன்னும் துரிதப்படுத்தினார்.

காப்ரினி செய்துவந்த இந்தப் பணிகளையெல்லாம் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் சபையில் வந்து சேர்ந்தார்கள். இதனால் மிகக் குறுகிய காலகட்டத்திலே திரு இருதய அருட்சகோதரிகள் சபை பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.

அனாதைக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதும் என்று காப்ரினியின் பணி மிகத் தீவிரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அவருடைய உள்ளத்தில் சீனாவிற்குச் சென்று மறைப்பணி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இது குறித்து அவர், அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயரிடம் கேட்டபோது, ‘கிழக்கில் வேண்டாம், மேற்கிலே பணிசெய்’ என்று சொல்லி அனுப்பினார். இதனால் காப்ரினி நியூயார்க்கிற்குச் சென்று அங்கு தன்னுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்.

நியூயார்க்கின் கடற்கரை ஓரங்கில் இவர் பணிசெய்யத் தொடங்கிய காலகட்டத்தில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அவற்றை எல்லாம் இவர் பொருட்படுத்தாமல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதும், மருத்துவச் சேவை செய்வதும், புலம்பெயர்ந்தோருடைய நலனில் அக்கறை செலுத்துவதும் என்று தன்னுடைய வாழ்நாளைச் செலவழித்தார். இவர் செய்துவந்த பணி பலரையும் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து சேர்த்தது.

இப்படி அயராது பாடுபட்ட காப்ரினியின் உடல்நலம் மெதுவாகக் குன்றத் தொடங்கியது. அதனால் இவர் 1917 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1946 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய காப்ரினியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மனந்தளராது உழைப்போம்

தூய காப்ரினியின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்ற மிக முக்கியமான பாடம், நாம் ஒவ்வொருவரும் மனந்தளராது உழைக்கவேண்டும் என்பதுதான். தூய காப்ரினி, துறவியாக மாறுவதற்காக முன்னர், துறவுமடத்தில் சேர்வதற்காகப் பல இடங்களில் ஏறி இறங்கினார். அப்போதெல்லாம் அவர், ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தார். அப்படி அனுப்பப்பட்டதற்காக அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து போராடினார். கடைசியில் வெற்றியும் பெற்றார்.
நாமும் கூட, பல நேரங்களில் எடுக்கும் முயற்சியில் தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால், மனந்தளராது போராடுகின்றபோதுதான் நம்மால் வெற்றிக் கனியை சுவைக்க முடியும் என்பது உறுதி.

கிரஹாம்பெல், தொலைப்பேசியைக் கண்டுபிடித்ததும், அதை மக்கள் பார்வைக்கு வைத்தபோது, ஒருசிலர், “இது என்ன? விளையாட்டுப் பொருளா?” என்று கேட்டனர். கிரஹாம்பெல்லோ, “இது விளையாட்டுப் பொருள் இல்லை, இதை வைத்து இங்கிருந்து நாம் பேசினால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு கேட்கும்” என்றார். அதற்கு அவர்கள், “இதனால் எந்தப் பயனும் இல்லை” என்று சொல்லி கடந்த போனார்கள். இதற்குப் பின்பு கிரஹாம்பெல் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை, அப்போது அமெரிக்க அதிபர் ரூதர் போர்டிடமும் கொண்டுசென்று காண்பித்தார். அவரும் இதே பதிலைத்தான் சொன்னார்.

இதற்காக கிரஹாம்பெல் மனமுடைந்து போகவில்லை, மாறாக, தன்னுடைய கண்டுபிடிப்பை எல்லா மக்களிடத்திலும் கொண்டு சென்று விளக்கினார். இறுதியில் வெற்றியும் கண்டார். அவர் மட்டும் மனம் சோர்ந்துபோய் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டிருந்தால் தொலைப்பேசியும் அதனுடைய அடுத்த வடிவமான அலைப்பேசியும் வந்திருக்குமா? என்பது சந்தேகமே.

ஆகவே, தூய காப்ரினியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, கிரஹாம்பெல்லைப் போன்று மனந்தளராது உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image