St. Didier Of Cahors St. Joseph Pignatelli
St. Leopold Of Austria St. Albert the Great

நவம்பர் 15

தூய பெரிய ஆல்பர்ட்

mary

தூய பெரிய ஆல்பர்ட் (நவம்பர் 15)

நிகழ்வு

ஆல்பர்ட், பதுவாவில் இருந்த பல்கலைக்கழகத்தில் மேற்படிபைப் படித்துக்கொண்டிருந்தபோது, அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்கள் அவருக்குப் புரியவே இல்லை. இதனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், பல்கலைக்கழகக் கோட்டையைத் தாண்டிக் குதித்து ஓடிவிடலாம் எனத் திட்டம் போட்டார். அதன்படி, ஒருநாள் இரவில் அவர் பல்கலைக்கழக கோட்டைச் சுவரைத் தாண்டிக் குதிக்க முயன்றபோது பெண் ஒருவரின் குரல் கேட்டது. அக்குரல் மரியன்னையின் குரல்தான் என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு வெகு நேரம் ஆகவில்லை. மரியன்னை அவரிடம், “மகனே ஆல்பர்ட்! என்னால் உனக்கு அனைத்து வரங்களையும் பெற்றுத் தரமுடியும் என்பது உனக்குத் தெரியாதா... தயவுசெய்து உன் அறைக்குப் போ, எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். மரியன்னையின் வார்த்தைகளை நம்பி, ஆல்பர்ட் தன்னுடைய அறைக்குச் சென்றார். அதன்பிறகு நடந்தது எல்லாம் வரலாறாக மாறியது.

வாழ்க்கை வரலாறு

ஆல்பர்ட் ஜெர்மனியில் உள்ள லவிங்கன் என்னும் இடத்தில் 1193 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் இவருக்கு நல்ல கல்வியைக் கொடுக்க நினைத்தார்கள். எனவே இவரை பதுவா, பாரிஸ் போன்ற இடங்களில் இருந்த பல்கலைக்கழங்களில் சேர்த்து படிக்கவைத்தார்கள். தன் மகன் பெரிய ஆளாய் வருவான் என்று அவர்கள் கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில் ஆல்பர்ட் டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியாக வாழத்தொடங்கினார். இது அவருடைய பெற்றோருக்கு சுத்தமாகப் பிடிக்கவேயில்லை. இருந்தாலும் மகனுடைய விருப்பம், அவனுடைய போக்கிலே போகட்டும் என்று சொல்லி விட்டுவிட்டார்கள். துறவற வாழ்விற்குப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்திலும், துறவியாக மாறிய பின்பும் ஆல்பர்ட் அறிவிலும் ஞானத்திலும் தலைசிறந்தவராய் விளங்கினார். இதனால் பாரிஸ், கோலோக்னே போன்ற இடங்களில் பேராசிரியராகப் பணியாற்றும் பேறுபெற்றார்.

பேராசிரியராகப் பணியாற்றிய காலகட்டங்களில் ஆல்பர்ட் பல்வேறு துறைகளில் வல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய திறமையைப் பார்த்துவிட்டு 1254 ஆம் ஆண்டு இவரை டொமினிக்கன் சபையின் மாநிலத் தலைவராக உயர்த்தினர். கற்றுத் தருவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஆல்பர்ட் அப்பொறுப்பினை சிறுது காலத்திலேயே இராஜினாமா செய்துவிட்டு, மீண்டுமாக பல்கலைக்கழங்களில் பேராசியராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் ‘இறையியலாளர்களின் இளவரசர்’ என அழைக்கப்படுகின்ற தாமஸ் அக்வினாஸ் இவருடைய மாணவராகச் சேர்ந்து கல்வி கற்றார்.

1260 ஆம் ஆண்டு, ஆல்பர்ட் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ரீகன்ஸ்பர்க் ஆயராக வேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. அதை அவர் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அவரை ஆயராகத் திருநிலைப் படுத்தினார்கள். ஆயர் பொறுப்பில் சிறுது காலம்தான் அவர் இருந்தார். ஏனென்றால், அவருடைய ஈடுபாடு அனைத்தும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதிலேயே இருந்தது.

ஆல்பர்ட் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வந்தார். ஒருசமயம் தன்னுடைய மாணவர் தாமஸ் ஆக்வினாசின் எழுத்துகள் தவறானவை என்று ஆயர் ஸ்டீபன் சொல்லி வந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆல்பர்ட், ஆயர் ஸ்டீபனிடம் சென்று, “தாமஸ் அக்வினாசின் எழுத்துகளின் என்ன தவறு இருக்கின்றது?. ஆதாரோடு நிருபியுங்கள்” என்று சொன்னார். அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. இது நடந்தது தாமஸ் அக்வினாசின் இறப்புக்குப் பின்னர். இது போன்ற காரியங்களால் ஆல்பர்ட் எப்போதும் தன்னுடைய மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார்.
இவர் செய்த இன்னொரு சிறப்பான காரியம் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை கிறிஸ்தவ ஒளியில் வைத்து சிந்தித்துதான். அதுவரைக்கும் இது போன்ற செயலை யாரும் செய்ததில்லை.

இவ்வாறு வாழ்நாள் முழுக்க ஓர் ஆசிரியராக இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவொளி ஊட்டிய ஆல்பர்ட் 1280 ஆம் ஆண்டு இம்மண்ணை விட்டுப் பிரிந்தார். இவருக்கு 1931 ஆம் ஆண்டு மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
பெரிய ஆல்பர்ட் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூய ஆல்பர்டின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கற்றுக்கொடுப்பதில் ஆர்வம்
தன்னுடைய வாழ்நாள் முழுக்க ஓர் ஆசிரியராக - பேராசிரியராக – இருந்து தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் அறிவொளி ஊட்டினார் என்பதை தூய ஆல்பர்டின் வாழ்க்கையை படிக்கின்றபோது நாம் அறிந்துகொள்ளலாம். அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் நமக்குத் தெரிந்ததை தெரியாதவர்களுக்குக் கற்றுத் தருகின்றோமா?” என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஒரு போதகராய் இருந்து இறைவனின் அன்பை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லி இறையரசை இம்மண்ணில் நிறுவினர் என்றுதான் வாசிக்கின்றோம். இயேசுவின் வழியில், தூய ஆல்பர்ட்டின் வழியில் நடக்கும் நாம் நல்லவற்றை பிறருக்குக் கற்றுத் தருவதே நம்முன் இருக்கும் சவாலாக இருக்கின்றது.

இந்த இடத்தில் 90 வயதுக்கும் மேல் ஆசிரியப் பணியைச் செய்துகொண்டிருக்கும் ரோஸ் கில்பர்ட் என்பவரைக் குறித்துச் சொல்லவேண்டும். இவர் தன்னுடைய 90 வயதிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். பணி ஓய்வு பெற்றபின்பும் ஆங்கில இலக்கியம் கற்ப்பிக்கும் ஆசையை விடவில்லை. ஆகவே, சிறப்பு அனுமதி பெற்று ஒரு பள்ளியில் அவர் ஆசிரியராகப் பணி செய்து வருகின்றார். கோடிக்கணக்கில் அவரது கணவர் பணம் சம்பாதித்துள்ள போதும் ‘கற்றுத் தருவது மட்டுமே தன்னை ஆனந்தப்படுத்துகின்றது” என்கிறார் ரோஸ் கில்பர்ட் என்ற அந்த உலகின் மிக ஆசிரியை. கற்றுத் தருவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவரே நல்ல உதாரணம்.

ஆகவே, தூய ஆல்பர்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நல்லவற்றை, ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை பிறருக்குக் கற்பிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image