Bl. Grimoaldo Santamaria Bl. Karolina Kozkowna
Dedication of Peter&Paul Churches St. Odo Of Cluny

நவம்பர் 18

தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு

mary

தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு

“என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” (மாற் 11:17)

வரலாற்றுப் பின்னணி

உரோமையை ஆண்டுவந்த நீரோ மன்னனுடைய காலத்தில், வத்திக்கான் குன்றின் கீழ் கி.பி. 64 ஆம் ஆண்டு, திருத்தூதர்களின் தலைவரும் முதல் திருத்தந்தையுமான பேதுரு கொல்லப்பட்டார் என்பது வரலாறு. இதற்குப் பின்பு அவர் கொல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று வந்த தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்திவந்தார். இவ்வழக்கம் நூற்றாண்டு காலமாகப் போய்க்கொண்டிருந்தது.

இதற்கிடையில் உரோமையை ஆண்டுவந்த கான்ஸ்டான்டைன் என்ற மன்னர் பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினார். இதைத் தொடர்ந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார். திருச்சபையில் நடந்த ஒருசில முக்கியமான நிகழ்வுகளுக்குப் பிறகு, இது முக்கியமான இடமாக மாறிப்போனது. ஆண்டுகள் செல்லச் செல்ல, கான்ஸ்டான்டைன் மன்னர் கட்டிய ஆலயம் பழுதடைந்தது. இதைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ், 1506 ஆம் ஆண்டு, அங்கு புதிதாக ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பத் தொடங்கினார். இந்த ஆலயம் கட்டி எழுப்பப்பட 120 ஆண்டுகள் ஆனது. திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் தொடங்கிய இந்தப் பணியை, திருத்தந்தை எட்டாம் அர்பன் என்பவர்தான் 1626 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நிறைவுசெய்தார். இந்தப் பேராலயத்தில் மைக்கேல் அஞ்சலோவின் வேலைபாடுகள் உட்பட, பல சித்ரவேலைப்பாடுகள் உள்ளடங்கி இருக்கின்றன.

இப்படி பலருடைய உழைப்பில், பல ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட தூய பேதுருவின் பேராலயம் இன்றைக்கும் அதே பொழிவோடும் எழிலோடும் மக்களுக்குக் காட்சி அளிக்கிறது.

அடுத்ததாக, புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற தூய பவுல் ஒஸ்டின் நகர் நோக்கிச் செல்கின்ற சாலையில் உள்ள அகுவா சால்வியே (Aquae Salviae) என்ற இடத்தில் கொல்லப்பட்டார் என்பது யாவரும் அறிந்த செய்தி. இங்கே காண்டாண்ட்ஸ் மன்னர் பவுலுக்கென்று பேராலயம் கட்டத் தொடங்கினார். ஆனால், அது அவரால் முடியாமல் போகவே, திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் அதை நிறைவுசெய்தார்.

இப்பேராலயமோ 1833 ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்தது. எனவே திருத்தந்தை பதினோறாம் பத்திநாதருடைய காலத்தில், உலகெங்கிலும் பரவியிருந்த கிறிஸ்தவர்களிடமிருந்து நீதி திரட்டப்பட்டு, தூய பவுல் பேராலயமானது கட்டி எழுப்பப்பட்டது. இப்பேராலயப் பணிகள் 1854 ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆண்டு நிறைவுபெற்று, அர்ச்சிக்கப்பட்டது. தொடக்கத்தில் இப்பேராலயத்தின் அர்ச்சிப்புப் பெருவிழா டிசம்பர் 10 அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும், பின்னாளில் அது நவம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அதே தேதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

விழா உணர்த்தும் செய்தி

தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தூய பேதுரு, பவுல் பேராலயங்கள் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கின்றபோது, அவை அவ்வளவு எளிதாகக் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இப்பேராலயங்கள் கட்டி எழுப்பப்பட பலர் பல்வேறு தியாகங்களைச் செய்தார்கள். இன்றைக்கும் கூட ஒவ்வொரு ஆலயமும் கட்டியெழுப்பப் படுவதற்குப் பின்னால், பலருடைய தியாகம் அடங்கியிருக்கின்றது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அசிசி நகர தூய பிரான்சிஸ், சான் தமியானோ என்ற பழுதடைந்த ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, “பிரான்சிஸ்! எனக்கொரு ஆலயம் கட்டுவாயா?” என்று பாடுபட்ட சிரூபத்திலிருந்து இயேசுவின் குரல் கேட்டதால், அந்த ஆலயத்தைக் கட்ட. பிரான்சிஸ் தன்னுடைய துணிக்கடையிலிருந்த ஆடைகளை எல்லாம் விற்றதும் அதற்கு அவருடைய தந்தை அவருடைய அவரை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டதுமான செய்தியைக் நாம் கேள்விப்பட்டிருப்போம். இது போன்று எத்தனையோ தியாகச் செயல்கள் ஒவ்வொரு ஆலயமும் கட்டி எழுப்பட்டதற்குப் பின்னால் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு ஆலயத்தையும் கட்டியெழுப்ப எவ்வளவோ தியாகங்களைச் செய்யும் நாம், உயிருள்ள ஆலயங்களாக இருக்கின்ற மனிதர்களை கட்டியெழுப்ப, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த தியாகங்கள், உதவிகள் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கற்களால் கட்டியெழுப்பப்படும் ஆலயங்கள் முக்கியமானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானவர்கள் கடவுளால் கட்டி எழுப்பபட்ட உயிருள்ள ஆலயங்களாகிய நாம். நாம் நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினால், அது இறைவனுக்கு உகந்த உயிருள்ள பலியாக இருக்கும்; நாம் அனைவரும் இறைவன் தங்கும் இல்லிடமாகவும் மாறமுடியும்.

ஆகவே, நம்முடைய வாழ்வை இறைவனுக்கு உகந்ததாக மாற்றி, இறைவன் தங்கும் இல்லிடமாக நாம் மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image