St. Cecilia

நவம்பர் 22

தூய செசிலியா

mary

தூய செசிலியா (நவம்பர் 22)

நிகழ்வு :

மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, மறைசாட்சியாக உயிர்நீத்த செசிலியாவின் உடல் ஸ்ரஸ்ட்டேவர் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய கல்லறை 1599 ஆம் ஆண்டு ஒரு சில காரணங்களுக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சைப்ரஸ் என்னும் மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அவருடைய உடல் அழியாமல், அப்போதுதான் இறந்ததுபோன்று இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். ‘செசிலியா தன்னுடைய பாக்களால் இறைவனுக்கு மகிமை செலுத்தினாள், இறைவனும் செசிலியாவின் உடலை அழியாமல் காத்து மகிமைப்படுத்தினார்” என்று அனைவரும் அவரை வாயாரப் புகழ்ந்துகொண்டே சென்றார்கள்.

வாழ்க்கை வரலாறு
செசிலியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் ‘தூய செசிலியாவின் திருப்பாடுகள்’ என்ற புத்தகம்தான். இதில் செசிலியா மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் உரோமையை ஆண்ட அலெக்ஸாண்டர் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

செசிலியா குழந்தைப் பருவத்திலிருந்தே தூய, மாசற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். தன்னுடைய கன்னிமை முழுவதையும் ஆண்டவருக்காக ஒப்புக் கொடுத்து வந்தார். இத்தகைய தருணத்தில்தான் இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பம் இல்லாமலே இவரை வலேரியான் என்ற இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். செசிலியாவோ வலேரியாரிடம், “நான் என்னுடைய உடலை எனது மணவாளனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையால் எந்தவிதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தரமாட்டேன்; என்னுடைய கற்பை எப்போதும் வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகின்றார்” என்றார். இதைக் கேட்ட வலேரியான், “உன்னுடைய கற்பை வானதூதர் காவல்காத்து வருகின்றாரா?, என்னால் நம்பமுடியவில்லையே” என்றான். அதற்கு செசிலியா, “இதெல்லாம் திருமுழுக்குப் பெற்றோரின் கண்களுக்கு மட்டுமே தெரியும், வேறு எவரது கண்களுக்கும் தெரியாது” என்றார்.
உடனே வலேரியான் அர்பன் (Urban) என்ற திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்குப் பெற்று வந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது செசிலியா தன்னுடைய அறையில் ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. செசிலியா சொன்னதுபோன்றே, அவருக்குப் பக்கத்தில் வானதூதர் நின்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வலேரியான் இறைவன்மீது முழுமையாக நம்பிக்கைகொண்டு வாழத்தொடங்கினான். அவனுடைய சகோதரனாகிய திபெர்தியுஸ் என்பவனும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினான்.

இச்செய்தி எப்படியோ உரோமை ஆளுநராகிய அல்மாக்கியுஸ் என்பவனுக்குத் தெரிந்தது. அவன் மாக்சிமஸ் என்ற தன்னுடைய படைத்தளபதியிடம் சொல்லி வலேரியானையும் திபெர்தியுசையும் கைதுசெய்து கொலை செய்யச் சொன்னான். அதன்படியே அவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு அல்மாகியுஸ் என்ற அந்த ஆளுநன் செசிலியாவிடம் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான். ஆனால் செசிலியாவோ, “நான் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்” என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதைப் பார்த்து சினம்கொண்ட ஆளுநன் தன்னுடைய படைவீரர் ஒருவனை அழைத்து, அவரைக் கொன்றுபோடச் சொன்னான். படைவீரனோ செசிலியாவின் கழுத்தில் வாளை இறக்கினான். அப்போது செசிலியாவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறியதே ஒழிய, அவருடைய உயிர் அவரை விட்டுப் போகவில்லை. அந்நேரத்திலும் அவர் தன்னுடைய இனிமை மிகு பாக்களால் இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார். ஏறக்குறைய மூன்று நாட்களுக்குப் பின்தான் அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டு நீங்கியது. செசிலியா தன்னுடைய மறைசாட்சிய வாழ்வால், இனிமைமிகு பாக்களால் இறைவனுக்கு மகிமையும் புகழும் செலுத்தியவளாய் மாறினாள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
திரு இசையின் பாதுகாவலியான தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் அவரைப் புகழ்வோம்
செசிலியா தன்னுடைய வாழ்வு முழுவதும் கடவுள் தனக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார், அதன்வழியாக அவருக்குப் பெருமை சேர்த்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் கடவுளைப் புகழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் 9:11 ல் வாசிக்கின்றோம், “சீயோனில் தங்கியிருக்கும் அனைவரும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்!” என்று. நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் புகழ்ந்துபாடவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படும் வேண்டுகோளாக இருக்கின்றது. முன்பொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் விறகுவெட்டி வெட்டி ஒருவன் இருந்தான். அவன் தான் வெட்டிய விறகை விற்று, அதிலிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்தான். ஆனாலும் அவன் அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப் புகழ்ந்துகொண்டே வந்தான். இறைவன் தனக்கு அன்றாடம் தரும் உணவிற்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக, மக்களுக்காகவும் அவன் இறைவனைப்புகழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது, மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. அவன் ஏறெடுத்துப்பார்த்தான். அப்போது ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள். உடனே அவன் அவர்களிடம் “நீங்கள் எல்லாம் யார்?” என்று கேட்டான். அதற்கு விறகு வெட்டி. “நாங்கள் கடவுளுடைய தூதர்கள்.” என்றார்கள். அவன் மீண்டுமாக அவர்களிடம், “என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்?, நான் அப்படி ஒன்றும் கடவுளிடம் கேட்கவில்லையே” என்றான். “அதற்காகத் தான் கடவுள் உன்மீது மலர்களை தூவச்சொன்னார். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் மட்டும்தான் எதையும் கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. மாறாக இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றாய். எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப் பெருமைப்படுத்தினார்” என்றார்கள்.

நாம் இறைவனைப் புகழும்போது இறைவன் நமக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டே இருப்பார். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவனை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்போம் என்ற உறுதி எடுப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image