St.Francis Anthony Fasani St. Virgilius of Salzburg

நவம்பர் 27

சால்ஸ்பெர்க் நகர தூய விர்ஜிலியுஸ்

mary

சால்ஸ்பெர்க் நகர தூய விர்ஜிலியுஸ்

“வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவர் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் நான் மீட்கும்படி எல்லாருக்கும் எல்லாமானேன்” (1 கொரி 9: 22)

வாழ்க்கை வரலாறு

இன்று திரு அவை தூய விர்ஜிலியுசின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் அயர்லாந்தில் உள்ள டப்ளின் என்ற இடத்தில் இருந்த ஒரு துறவுமடத்தில் மடாதிபதியாக பணியாற்றி வந்தார்.

743 ஆம் ஆண்டில் ஒருநாள் இவர், புனித நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்படிப் போகிற வழியில், பிரான்சில் இருந்த பெப்பின் என்ற மன்னனைச் சந்தித்தார். விர்ஜிலியுசின் வருகையால் மிகவும் மகிழ்ந்துபோன பெப்பின், அவரை மடாதிபதியாகவும் ஆயராகவும் நியமித்தார். மன்னரின் இந்த வேண்டுதலுக்கு மறுப்புச் சொல்ல முடியாமல், விர்ஜிலியுஸ் ஒரே நேரத்தில் சால்ஸ்பெர்கின் ஆயராகவும் மடாதிபதியாகவும் செயல்படத் தொடங்கினார்.

இந்நேரத்தில் திருமுழுக்கு தொடர்பாக (தூய) போனிபேஸ் சர்ச்சையான ஒரு கருத்தைத் தெரிவித்தார். அவருடைய கருத்து தவறானது என்று எடுத்துச் சொன்ன விர்ஜிலியுஸ், திருமுழுக்கு குறித்து மிகச் சரியான கருத்தை எடுத்துச் சொன்னார். இது திருத்தந்தைக்கும் பிடித்துப்போக, அதுவே பொதுவானது என உறுதி செய்யப்பட்டது. விர்ஜிலியுஸ் ஒரு மேதையைப் போன்று பலதுறைகளில் புலமை பெற்றிருந்தார். வானவியல், மானுடவியல், பூகோளம் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய தெளிவான சிந்தனைகளை இவர் பெற்றிருந்ததால், அக்காலத்தில் இவர் ஒரு அறிவியல்மேதையாகவே அறியப்பட்டார். இவர் தனது திறமை அனைத்தையும் திருச்சபையின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார்.

விர்ஜிலியுசிஸ் நற்செய்தி அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, அல்பின் ஸ்லாவ்ஸ் என்ற இனமே கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது. மேலும் இவர், இயேசு கிறிஸ்துவைப் போன்று, தான் போகமுடியாத இடங்களுக்கு நற்செய்திப் பணியாளர்களை அனுப்பி, அவர்கள் மூலம் மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். ஹங்கேரி மற்றும் கிறிஸ்துவைப் பற்றி அறியாத இன்னும் பல இடங்களுக்கு இவர் நற்செய்திப் பணியாளர்களை அனுப்பி நற்செய்தி அறிவித்து வந்தார். இதனால் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். 784 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 27 ஆம் நாள், இவர் ஓர் இடத்திற்குச் சென்று, நற்செய்தியை அறிவித்துவிட்டுத் திரும்பும்போது உடல்நலக் குறைவால் இறந்துபோனார்.

இதற்கு பின்பு 1181 ஆம் ஆண்டு, விர்ஜிலியுஸ் சால்ஸ்பெர்க்கில் கட்டிய பேராலயமானது எரிந்து சாம்பலானது. அந்த தீவிபத்தில் எல்லாமே முற்றிலும் எரிந்துபோனாலும் விர்ஜிலியுஸ் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறை மட்டும் அப்படியே இருந்தது. இதைப் பார்த்து மிகவும் வியப்படைந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியார் இவருக்கு 1233 ஆம் அண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய விர்ஜிலியுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

தூய விர்ஜிலியுசிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த நற்செய்தி அறிவிக்கின்ற ஆர்வம்தான். ஓர் ஆயராக இருந்து அவர் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். அது மட்டுமல்லாமல், தான் போக முடியாத இடங்களுக்கெல்லாம் ஏனைய நற்செய்திப் பணியாளர்களை அனுப்பி வைத்து, நற்செய்தியை அறிவித்து வந்தார். இதனால் தன்னால் முடிந்த மட்டும், இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்தார். இவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வத்தோடு இருக்கின்றோமா? அதில் வருகின்ற சவால்களை நாம் சந்திக்கத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு பத்திரிக்கையில் இப்படியோர் அறிவிப்பு வந்தது. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்துப் போராட தைரியம் மிகுந்த போர்வீரர்கள் தேவை. ஊதியம் – மரணம், விலை – உயிர்த்தியாகம், ஓய்வூதியம் – சுதந்திரம், போர்க்களம் – இந்தியா” இப்படிப்பட்ட அறிவிப்பைக் கண்ட பல இளைஞர்கள் நாட்டிற்காக போராட புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடைய போராட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு விடுதலையும் கிடைத்தது.

இந்தியாவின் விடுதலைக்காக எப்படி உயிர்த்தியாகம் செய்யக்கூடிய வீரர்கள் தேவைப்பட்டார்களோ, அதுபோன்று நற்செய்தியை அறிவிக்க உயர்த்தியாகம் செய்யக்கூடிய மனிதர்கள் தேவை. ஏனென்றால் அறுவடையோ மிகுதி வேலையாட்களோ மிக மிகக் குறைவு.

ஆகவே, தூய விர்ஜிலியுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்போம். இயேசுவின் நற்செய்திக்காக உயிர்த்தியாகம் செய்யவும் முன்வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image