St. Ansanus The Baptizer St. Edmund Campion St. Eligius St. Tudwal

டிசம்பர் 1

தூய எட்மன்ட் காம்பியன்

mary

தூய எட்மன்ட் காம்பியன்

“அடிபட்டதால் இறக்கும் தருவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, “நான் காவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்” என்றார். இவ்வாறு எலயாசர் உயிர்துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்பிற்கு அடையாளமாகவும் விளங்கியது” (2 மக் 6: 30-31)

வாழ்க்கை வரலாறு

இன்று அன்னையாம் திரு அவை தூய எட்மன்ட் காம்பியனின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் இங்கிலாந்தில் உள்ள லண்டலில் 1540 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 25 ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு புத்தக விற்பனையாளர். இதனால் இவருக்கு நிறைய புத்தகங்களை வாசிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதுவே இவர் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கவும், பின்னாளில் தூய யோவான் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைப் படிக்கும்போது முதல் மாணவனாக வரவும் பெரிதும் உதவியது.

இவரிடத்தில் இருந்த திறமை எட்டுத்திக்கும் பரவியது. எந்தளவுக்கு என்றால், இது அப்போது இங்கிலாந்தை ஆண்டுவந்த முதலாம் எலிசபெத்தின் செவிகளை எட்டியது. இதனால் எலிசபெத் அரசி எட்மன்ட்டைக் கூப்பிட்டு, தன்னுடைய அரசபையில் வைத்து கெளரவப்படுத்தினார். இதனால் புளகாங்கிதம் அடைந்த எட்மன்ட், திருத்தந்தையை திருச்சபையின் தலைவராக ஏற்கக்கூடிய கத்தோலிக்க விசுவாசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இங்கிலாந்து அரசியை திருச்சபையின் தலைவராக / தலைவியாக ஏற்கக்கூடிய சீர்திருத்த சபையில் (Protestantism) உறுப்பினராகச் சேர்ந்தார்.

இப்படிப்பட்ட ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருந்த எட்மன்ட், சில காலத்திற்கு அயர்லாந்தில் தங்கநேர்ந்தது. அப்போது அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்தார். இந்நேரத்தில் இங்கிலாந்து மண்ணில் மறைப்பணி செய்துவந்த ஜான் ஸ்டோரே என்பவருடைய படுகொலையும் நிகழ்ந்து. இது எட்மன்ட்டின் உள்ளத்தில் தானும் ஒரு நற்செய்திப் பணியாளராக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்காக உயிர்துறக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. உடனே அவர் பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்த டுவை என்ற சேசுசபை குருமடத்தில் சேர்ந்து 1578 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இவர் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டிருந்த தருணத்தில், அன்னை மரியா இவருக்குக் காட்சி கொடுத்து, இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கச் சொன்னார். உடனே என்மன்ட் தன்னோடு அருட்தந்தை ராபர்ட் பர்சொன்ஸ் என்பவரைச் சேர்த்துகொண்டு, இங்கிலாந்திற்கு நற்செய்தி அறிவிக்க புறப்பட்டுச் சென்றார். அந்நாட்களில் இங்கிலாந்து நாட்டு ஆட்சியாளர்களிடத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரான ஒருவித வெறுப்புணர்வு காணப்பட்டது. இதனால் எட்மன்ட்டும் அவரோடு சென்ற ராபர்ட் பர்சொன்ஸ் என்பவரும் நகை வியாபாரியைப் போன்று வேடம் தரித்து, இங்கிலாந்து நாட்டில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்கள்.

இவர்கள் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்ற நேரம், கத்தோலிக்கர்களாக இருந்த பலருடைய கத்தோலிக்க விசுவாசம் ஊசலாடிக்கொண்டிருந்தது. எட்மன்ட் அவர்களை எல்லாம் சந்தித்து, அவர்களைக் கத்தோலிக்க விசுவாசத்தில், நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். இச்செய்தி எப்படியோ எலிசபெத் அரசியினுடைய செவிகளை எட்டியது. உடனே அவர் எட்மன்ட்டை இழுத்துக்கொண்டு வருமாறு ஆணையிட்டார். படைவீரர்களும் அவரை இழுத்துக்கொண்டு போனார்கள். இதற்குப் பின்பு 1581 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 1 ஆம் நாள் எட்மன்ட் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எட்மன்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. குன்றின்மீது ஏற்றப்பட்ட விளக்காவோம்

தூய எட்மன்ட்டின் வாழ்க்கை வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கின்ற மேலான சிந்தனை, நாம் ஒவ்வொருவரும் குன்றின்மீது ஏற்றப்பட்ட விளக்குகளாவோம் என்பதுதான். இயேசு சொல்வது போல, ஒரு விளக்கை மரக்காலுக்குள் ஒழித்து வைத்திருப்பதால் யாருக்கும் எந்தவொரு பயனுமில்லை. அது எல்லாருக்கும் ஒளிதரக்கூடிய வகையில் குன்றின்மீது ஏற்றப்பட்ட விளக்காக இருக்கவேண்டும். அதுபோன்றுதான் தூய எட்மன்ட்டின் சாட்சிய வாழ்வு பலரும் கிறிஸ்துவுக்குள் வருவதற்குக் காரணமாக இருந்தது.

எட்மன்ட் கொல்லப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து வெளிவந்த இரத்தம் அங்கு நின்றுகொண்டிருந்த ஹென்றி வால்போல் என்பவர்மீது பட்டது. இது அவருடைய உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. தானும் ஒரு குருவாக மாறி, ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது. பின்னாளில் அவர் சேசு சபையில் சேர்ந்து ஒரு குருவானார் ஆனார் என்பது வரலாறு. இப்படிப் பலரும் எட்மன்ட்டினால் தொடப்பட்டு கத்தோலிக்க திருச்சபைக்குள் வந்தார்கள்.

தூய எட்மன்ட்டைப் போன்று, நம்மால் சாட்சிய வாழ்வு வாழ முடிகின்றதா? என்று சிந்தித்துப் பாப்போம். சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான அருளை இறைவனிடத்தில் இரஞ்சுவோம். இறைவழியில் தொடர்ந்து நடப்போம், குன்றின்மீது ஏற்றப்பட்ட விளக்குகள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image