Bl. Raphael Melchior Chylinski St. Babiyana

brk;gh; 2

J}a

mary

தூய பிபியானா

“கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையவராக்கினார்; நாங்கள் மரணதண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன். நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள்” (1 கொரி 4:9-10).

வாழ்க்கை வரலாறு

கிறிஸ்துவுக்காக ஒரு குடும்பமே உயிரைத் தியாகம் செய்தது என்றால், அது பிபியானாவின் குடும்பம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம் இன்று அன்னையாம் திரு அவை கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைசாட்சியான தூய பிபியானாவின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது.

இவருடைய தந்தை ப்ளாவியன், தாய் டாப்ரோசா என்பவர் ஆவார். பிபியானாவின் தந்தை ப்ளாவியன் உரோமை அரசாங்கத்தில் படைவீரராக பணிசெய்து வந்தார். அக்காலத்தில் உரோமையை ஜூலியன் என்பவன் ஆண்டுவந்தான். அவனிடத்தில் அப்ரோனியானுஸ் என்பவன் ஆளுநனாகப் பணிசெய்து வந்தான். மன்னன் ஜூலியனோ கிறிஸ்தவர்களை அறவே வெறுத்து வந்தான். இந்நிலையில் அவன், தனக்குக் கீழ் ஆளுநனாகப் பணியாற்றி வந்த அப்ரோனியானுசைக் கூப்பிட்டு, கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்க ஆணையிட்டான்.

இதன் தொடக்கமாக அப்ரோனியானுஸ், பிபியானாவின் தந்தையான ப்ளாவினைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்து, கடுமையாகச் சித்ரவதை செய்தான். பின்னர் ஒரு பழுக்கக் காய்ச்சிய கம்பியை எடுத்து, அவர்மேல் அடித்து அவரைக் கொன்றுபோட்டான். அதற்குப் பின், பிபியானாவின் தாயாரான டாப்ரோசைப் பிடித்து வீட்டுச் சிறையில் அடைத்துவைத்து, அவரைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான்.

இவையெல்லாம் ஒருபக்கம் அரங்கேறிக்கொண்டிருந்தாலும் பிபியானானும் அவருடைய சகோதரியான டெமெற்றியாவும் கிறிஸ்துவின்மீது கொண்டிருந்த நம்பிக்கையில் சிறிதளவுகூட பின்வாங்காமல், மனவுறுதியோடு இருந்தார்கள். அவர்களுடைய மனவுறுதியைச் சிதைத்து, அவர்களை எப்படியாவது தங்களுக்கு அடிபணிய வைக்கவேண்டும் என்பதற்காக ஆளுநன், முதலில் அவர்களுக்கு அன்னம் தண்ணீர் கொடுப்பதைத் தவிர்த்து, அவர்களுடைய சொத்துகளை எல்லாம் எடுத்துக்கொண்டான். அப்போதும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்கள். இதைக் கண்டு திகைத்துப் போன ஆளுநன் டெமெற்றியாவை கொலைசெய்தான். அப்படியாவது பிபியானா தனக்கு அடி பணிவாள் என்று. ஆனால் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது.

கடைசியில் அவன் பிபியானாவை ரூபினா என்ற அரக்கியிடம் ஒப்படைத்தான். அவளோ பிபியானாவிடம் நயவஞ்சக வார்த்தைகளைப் பேசி, அவரைத் தன் பக்கம் ஈர்க்க நினைத்தாள். அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. இதனால் பொறுமை இழந்த ஆளுநன் பிபியானாவை ஒரு தூணில் கட்டிவைத்து, இரும்புக் குண்டுகள் இருந்த சாட்டையால் பிபியானா அடித்துத் துவைத்தான். இதனால் பிபியானா இறந்துபோனார். பின்னர் அவருடைய உடலை நாய்களுக்குப் போடுமாறு ஆணையிட்டான். ஆனால் இரண்டு நாட்கள் ஆனபோதும் அவை அவருடைய உடலை தீண்டாமல் இருக்கவே, ஜான் என்ற குருவானவர் அவருடைய உடலை எடுத்து நல்லடக்கம் செய்தார்.

கிறிஸ்துவுக்காக உயிர்நீத்த பிபியானாவுக்கு ஐந்தாம் நூற்றாண்டில் உரோமை நகரில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயம் இன்றுவரைக்கும் பொழிவோடு இருக்கின்றது என்பது எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கின்ற ஒரு செய்தியாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிபியானாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. துணிவோடு இருப்போம்!

தூய பிபியானாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், எதைக் கண்டும் அஞ்சாமல் துணிவோடு இருந்து, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்பதுதான். எதிரிகள் பிபியானாவின் பெற்றோர்களை முதலில் கொன்றார்கள். அப்போதும் அவர் பயப்படவில்லை, அதற்குப் பின்பு அவருடைய சகோதரியைக் கொன்றார்கள், அப்போதும் அவர் தன்னுடைய நம்பிக்கையிலிருந்து பிறழவில்லை. கடைசியில் அவரை என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். அப்போதும்கூட அவர் அஞ்சாமல், மிகத் துணிச்சலோடு இருந்து, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார். தூய பிபியானாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று துணிவோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பேரரசர் ஜூலியஸ் சீசரைக் கொல்வதற்கான சதி வேலைகள் நடைபெற்றன. இதைக் கேள்விப்பட்ட அவருடைய நண்பர்கள் அவரிடம், “அரசே! நீர் உமக்குக் கீழ் பணிசெய்யும் எல்லாரிடத்திலும் மிகக் கவனமாக இருக்கவேண்டும். வெளியே செல்கிறபோதுகூட பார்த்துப் போகவேண்டும். ஏனெனில் உம்மைக் கொல்வதற்கான சதிவேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “பயந்தவனுக்கு நிதம் நிதம் சாவு. சாவுக்குத் துணிந்தவனுக்கோ ஒருமுறைதான் சாவு. நான் சாவுக்குப் பயந்தவன் இல்லை” என்று மிக தைரியமாகவும் துணிச்சலாகவும் சொன்னார். இதைக் கேட்ட அவருடைய நண்பர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம், துணிந்தவனுக்கு அதுவும் இயேசுவுக்காக உயிர்துறக்கத் துணிந்தவனுக்கு ஒருமுறைதான் சாவு. அந்தச் சாவு வீரமுள்ள சாவு.

ஆகவே, தூய பிபியானாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்கு மிகத் துணிச்சலோடு சான்று பகர்ந்து வாழ்வோம். எதிர்வரும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image