St. Francis Xavier

டிசம்பர் 3

புனித பிரான்சிஸ் சேவியர்

mary

புனித பிரான்சிஸ் சவேரியார் (டிசம்பர் 03)

நிகழ்வு :

போர்ச்சுக்கல் நாட்டு அரசன் மூன்றாம் யோவானின் வேண்டுகோளின் பேரில் கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக சவேரியார் புறப்பட்டுக்கொண்டிருந்த தருணம். அப்போது சவேரியாரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம், “கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் உங்களுடைய அன்னையை ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாமே, உங்களுடைய இல்லம் மிக அருகிலேயேதான் இருக்கின்றது, மேலும் நீங்கள் அங்கு போய்விட்டால், இங்கே திரும்பி வருவது மிகக்கடினம்” என்றார். அதற்கு சவேரியார் அவரிடம், “நான் இறந்து விண்ணகத்திற்கு போவேன் அல்லவா, அப்போது என்னுடைய அன்னையை அங்கு பார்த்துக்கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டு அவருடைய நண்பர் எதுவும் பேசாது அமைதியானார். சவேரியார் நற்செய்தி அறிவிப்பின்மீது தணியாத தாகம் கொண்டிருந்தார்; அதற்காக அவர் தன்னுடைய குடும்பம், படிப்பு, வாய்ப்பு வசதி எல்லாவற்றையும் துறந்துவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு இறை மனிதரின் விழாவைத் தான் இன்று கொண்டாடுகின்றோம்.

வாழ்க்கை வரலாறு :

‘இரண்டாம் பவுலடியார்’ என அன்போடு அழைக்கப்படும் பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள சேவியர் கோட்டையில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 நாள் பிறந்தார். இவருடைய தந்தை ஜான் தி ஜாசு, தாய் டோனா மரியா என்பவர் ஆவார். சவேரியாரின் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். ஆகையால் இவர் எல்லா வசதிகளையும் பெற்று வளமோடு வாழ்ந்து வந்தார். சவேரியாருக்கு 18 வயது நடந்துகொண்டிருந்த போது அவர் பாரிஸ் நகருக்குச் சென்று அங்கே இருந்த பார்பரா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் படித்து வந்தார். அப்போதெல்லாம் சவேரியாருக்கு ஒரு மிகச் சிறந்த பேராசியராக மாறவேண்டும், பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் எண்ணமாக இருந்தது. இந்த நேரத்தில்தான் சவேரியாரின் அறையில் வசித்து வந்த இஞ்ஞாசியார், “மனிதன் உலகமெல்லாம் தமதாக்கிகொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன” (மத் 16:26) என்று அடிக்கடி சொல்லி வந்தார். தொடக்கத்தில் இவ்வார்த்தைகளைக் கண்டுகொள்ளாது இருந்த சவேரியார், பின்னர் அதனை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது உலக வாழ்வின் நிலையாத் தன்மையை உணர்ந்துகொண்டு, ஆண்டவருக்குப் பணி செய்ய தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

1534 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இஞ்ஞாசியார், சவேரியாரோடு சேர்த்து ஆறுபேர் கொண்ட குழு சிறு மந்தை எனப்படும் ‘இயேசு சபை’ என்ற பெயரில் இணைந்தது. பின்னர் அவர்கள் புனித நாடுகளில் மறைபரப்புப் பணியைச் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் அங்கு முகமதியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அங்கு சென்று மறைபரப்புப் பணிசெய்யும் திட்டத்தை ஒத்தி வைத்தனர். இதற்கிடையில் 1537 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவரால் சவேரியார் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1538 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டு அரசன் மூன்றாம் யோவான், கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க இயேசு சபையார் செல்லலாம் என்று சொன்னபோது, இஞ்ஞாசியார் ரொட்ரிகுஸ், நிக்கோலாஸ் என்ற இருவரது பெயரையும் முன்மொழிந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் நோய்வாய்ப்படவே, இறுதியில்தான் சவரியார்தான் அங்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சவேரியார் முழுமனதோடு அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். இதனால் 1541 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 நாள் இந்தியாவை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 13 மாதங்கள் நீடித்த இந்த கப்பல் பயணத்தில் சவேரியார் கப்பலில் இருந்த மக்களுக்கு சிறப்பான ஓர் ஆன்மீகப் பணியைச் செய்தார். அங்கு இருந்த நோயாளிகளுக்காக ஜெபித்தார், அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துச்சொன்னார். இப்படி நீண்ட பயணமானது 1542 ஆம் ஆண்டு மே 6 நாள் நிறைவுபெற்றது. ஆம், அன்றுதான் சவேரியார் கோவாவில் தரை இறங்கினார். கோவாவில் தரையிறங்கிய சவேரியார், அங்கிருந்த ஆயரைச் சந்தித்து, திருத்தந்தையிடமிருந்து அவர் பெற்றுவந்த ஒப்புதல் கடித்ததை அவரிடம் கொடுத்துவிட்டு, அவருடைய ஆசியுடன் தன்னுடைய பணியைத் தொடங்கினார்.

சவேரியார் கோவாவில் தன்னுடைய நற்செய்திப் பணியைத் தொடங்கியபோது, அங்கு நிறையக் கிறிஸ்தவர்கள் இருப்பதைக் கண்டார். ஆனால் அவர்கள் அடிப்படை ஜெபம்கூடத் தெரியாமலும் ஆன்மீக வாழ்வில் மிகவும் பின்தங்கியவர்களாகவும் இருந்தார்கள். இதனால் முழுமூச்சாக சவேரியார் அம்மக்களுக்கு மத்தியில் பணிசெய்தார். அக்காலத்தில் கோவாவில் வெறும் நான்கு குருக்கள்தான் இருந்தார்கள், அவர்களுடைய உதவியையும் பயன்படுத்திக்கொண்டு சவேரியார் நோயாளிகளைச் சந்திப்பது, அவர்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுப்பது என்று அவர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தினார். இதனால் குறுகிய காலத்திலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமானது.

சவேரியார் கோவாவில் நற்செய்திப் பணியை ஆற்றிவிட்டு தென் தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்களில் நற்செய்திப் பணி செய்யத் தொடங்கினார். மணப்பாடு என்ற இடத்தைத் தலைமை இடமாக வைத்துக்கொண்டு சவேரியார் அங்கு இருந்த மக்களுக்கு சிறப்பான ஒரு நற்செய்திப் பணியை ஆற்றினார். அக்காலத்தில் கடற்கரைக் கிராமங்களில் முகமதியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவர், சவேரியார் தனக்கு எப்போதும் பேருதவியாக இருந்த போர்ச்சுக்கல் படையை வைத்துக்கொண்டு அவர்களது ஆதிக்கத்தை முறியடித்தார். இதனாலும் நிறையப் பேர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். சவேரியார் தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டு மக்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்தார்; கையில் ஒரு மணியை வைத்துகொண்டு, அதில் சத்தம் எழுப்பிக்கொண்டு மக்களை கூட்டிச் சேர்த்து, அவர்களுக்கு ஞான காரியங்களைச் சொல்லிக்கொடுத்து, மக்களை விசுவாசத்தில் வளர்த்தெடுத்தார்.

இங்கிருந்தபோது சவேரியார் இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுவார், “இந்த மக்களுக்கு திருமுழுக்குக் கொடுத்துக் கொடுத்து என்னுடைய கை மரத்துப் போய்விட்டது, இவர்கள் சொல்லக்கூடிய விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லி சொல்லி என்னுடைய நா வறண்டுபோய்விட்டது”. அந்தளவுக்கு சவேரியார் தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து இங்கே நற்செய்திப் பணிசெய்தார். இரண்டு ஆண்டுகள் கடற்கரை கிராமங்களில் பணிசெய்த சவேரியார் திருவிதாங்கூர் மன்னனையும் சந்தித்து, அவருக்கு நற்செய்தி அறிவித்து அவரையும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.


இதற்குப் பிறகு சவேரியார் இலங்கைக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். அங்கிருந்து அவர் ஜப்பான் நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். ஜப்பானில் புத்த மதம் ஆழமாக வேறொன்றி இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சவேரியார் காசோஷிமா, மியாக்கா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவின் மீது நம்பிக்கைகொள்ளச் செய்தார். அங்கு ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகளின் காரணமாக சவேரியார் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். சீனாவில் கிறிஸ்தவ மறைபோதகர்கள் வேதம் போதிப்பதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படியிருந்தாலும் 1552 ஆம் ஆண்டு சவேரியார் அங்கு சென்று நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார். அவர் சான்சியான் தீவில் இறங்கியபோது அவருடைய உடல் வலுவிழந்தது. இதனால் 1552 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் சவேரியார் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். சவேரியார் இறக்கும்போது அவருக்கு வயது வெறும் 46 தான். அப்போது சவேரியாரோடு உடன் இருந்தவர் அந்தோனி என்பவர் ஆவார். அவர் சவேரியாரின் உடலை அவருடைய சொந்த மண்ணுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, அவருடைய உடலில் சுண்ணாம்பைத் தடவி புதைத்துவிட்டுவந்தார்.

1553 ஆம் ஆண்டு பெப்ருவரி 17 ஆம் நாள் அவரும் அவரோடு சேர்ந்து இன்னும் ஒருசிலரும் சவேரியாரின் உடலை எடுத்து வரச் சென்றனர். ஆனால் அவர்கள் சவேரியாருடைய கல்லறையைத் திறந்து பார்த்த போது அவருடைய உடல் அழியாமல் இருப்பது கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். பின்னர் அவர்கள் சவேரியாருடைய உடலை கோவாவில் இருக்கும் போம் ஜீசஸ் என்ற ஆலயத்தில் வைத்தனர். அது இன்று வரையும் அங்கு அழியாமல் இருக்கின்றது. சவேரியார் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பு கொண்டு, அவருடைய பணியைச் செய்திருந்தால், அவர் சவேரியாரின் உடலை இப்படி அழியாமல் பாதுகாத்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் தாகம்
ஆண்டவர் இயேசு விண்ணகம் செல்வதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களிடம் சொல்வார், “நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று (மாற் 16:15). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் தூய சவேரியார் என்று சொன்னால் அது மிகையாகாது. சவேரியார் நற்செய்தி அறிவிப்பிற்காக பயணித்த தூரம் ஏறலாம். அது இன்றைக்கு எவராலும் பயணப்பட முடியாத தூரம். சவேரியார் இங்கு வந்து பணியாற்றிய 10 ஆண்டுகளில் எவ்வளவோ பணிகளைச் செய்தார். மொழி தெரியாத இடத்தில் வந்து மொழியைக் கற்றுக்கொண்டு, மக்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம், ஏராளம். அவற்றை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது.
வரலாற்று ஆசிரியரான மார்கோ போலோ சவேரியார் இந்திய மண்ணில் ஆற்றிய பணிகளைக் குறித்து வியந்து பாராட்டுவார். சவேரியார்தான் மறைக்கல்வி அறிவிப்பிற்கான முன்னோடி என்று அவர் சுட்டிக்காட்டுவார். அந்தளவுக்கு சவேரியார் இந்த மண்ணில் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆகவே, தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று நற்செய்தியை அறிவிப்பதில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம், எதிர்வரும் துன்பங்களைத் துணிவோடு எதிர்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image