Bl. Philip Rinaldi St. Christina Of Markyate St. John Sabas

டிசம்பர் 5

தூய சபாஸ

mary

தூய சபாஸ்

“உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சபாஸ், 439 ஆம் ஆண்டு, கப்படோசியாவில் (தற்போதைய துருக்கி) உள்ள முடலஸ்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓர் இராணுவ அதிகாரி. வேலை விசயமாக சபாஸின் தந்தை அலெக்ஸ்சாந்திரியாவிற்கு மாற்றப்பட்டதால், சபாஸ் அவருடைய மாமாவின் கண்காணிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரோ சபாசை கொடுமைப்படுத்தத் தொடங்கினார். இதனால் அவர் வீட்டை விட்டு ஓடிப்போய், ஊருக்கு வெளியே இருந்த ஒரு துறவற மடத்தில் தஞ்சமடைந்து, அங்கேயே சில ஆண்டுகாலம் வாழ்ந்துவந்தார்.

சபாஸிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது புனித பயணமாக எருசலேமிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் தூய தியோக்திஸ்துஸ் என்பவரைச் சந்தார். அவரோ வனத்தில் துறவியாக இருந்து ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அவர்பால் ஈர்க்கப்பட்ட சபாஸ், அடுத்த பத்தாண்டுகளுக்கு அவரோடு ஒரு சீடரைப் போன்று இருந்து, பயிற்சிகள் பல பெற்றார். இதற்குப் பின்பு சபாஸ், தியோக்திஸ்துஸ் என்பவரிடமிருந்து விடைபெற்று தூய யுதிமியுஸ் என்பவருடைய வழிகாட்டுதலில் தனியாகச் சென்று துறவற வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

சபாஸ் தன்னுடைய துறவற வாழ்க்கையில் ஜெபத்திற்கும் தவத்திற்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார், அமைதியில் நீண்ட நேரம் செலவழித்தார். இவருடைய துறவற வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, பலர் இவரிடத்தில் சீடர்களாக வந்துசேர்ந்தார்கள். சபாஸ் தன்னிடத்தில் சீடராகச் சேர்ந்த அனைவருக்கும் நல்லவிதமாய் பயிற்சிகள் கொடுத்து, அவர்களைக் கடவுளுக்கு உகந்தவர்களாக மாற்றினார்.

ஒருசமயம் இவர் அலெக்ஸ்சாந்திரியாவிற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது தற்செயலாக இவருடைய பெற்றோரை இவர் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தங்களுடைய மகன் இப்படி துறவியாக மாறியிருப்பதைக் கண்டு, அதிர்ந்து போனார்கள். “மகனே! தயவுசெய்து நீ இந்த துறவுகோலத்தைக் களைந்துவிட்டு, எங்களோடு வந்துவிடு” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். ஆனால் சபாஸ் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே இருந்தார். இதனாலே கண்ணீர் வடிந்த கண்களோடு அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

இதற்குப் பின்பு தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிய சபாஸ், 483 ஆம் ஆண்டு, புதிதாக ஒரு துறவுமடத்தைக் கட்டி எழுப்பினார். இதில் எகிப்திலிருந்தும் அர்மேனியாவிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் சீடர்களாக வந்து சேர்ந்தார்கள். சபாஸ் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிய இருந்து, அவர்களை நேரிய பாதையில் வழிநடத்திச் சென்றார்.

இப்படி அவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும் அவரது உடல்நலம் குன்றியது. இதனால் அவர் 532 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சபாஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்

தூய சபாஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்துபோகின்றது. அவர் தன்னுடைய வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் ஜெபித்துக்கொண்டே இருந்தார். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்காவிட்டாலும் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்தவர்களாய் வாழ்வது மிகச் சிறப்பான ஒரு செயலாகும். நற்செய்தியை வாசிக்கின்றது, இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார் என்று அறிகின்றோம். இயேசுவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய சபாசைப் போன்று ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து ஜெபிக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

காந்தியடிகள் ப்ரெடோரியாவுக்குச் (Pretoria) சென்றிருந்த சமயம், அங்கு தனக்குத் தெரிந்த ஒருசில கிறிஸ்தவ நண்பர்களைப் பார்த்திவிட்டுப் போகலாம் என அவர் நினைத்தார். அது இரவுநேரம். காந்தியடிகள் ஒரு நண்பருடைய வீட்டின் கதவைத் தட்டினார். சிறுதுநேரத்தில் உள்ளே இருந்து அவருடைய நண்பர் வெளியே வந்தார். அப்போது காந்தியடிகள் தற்செயலாக நண்பருடைய வீட்டினுள்ளே பார்த்தார். அங்கே அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜெபித்துக் கொண்டிருந்தனர். காந்தியடிகளைப் பார்த்ததும், அவர்கள் ஜெபத்தை நிறுத்திவிட்டு, அவரை இன்முகத்தோடு வரவேற்க வந்தார்கள்.

உடனே காந்தியடிகள், “எதற்கு ஜெபிப்பதை நிறுத்திவிட்டீர்கள்?, நீங்கள் யாரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அவர் என்னைவிடப் பெரியவர். ஆதலால், தொடர்ந்து நீங்கள் ஜெபியுங்கள். நான் அப்புறம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் விடைபெற்றுப் போகும்போது தனது நண்பருடைய குடும்பம் எந்தளவுக்கு ஜெபிக்கின்ற குடும்பமாக இருக்கின்றது என்று வியந்துகொண்டே போனார்.

காந்தியடிகளின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு, நம்முடைய ஜெபம் மெச்சக்கூடியதாக இருக்கின்றதா?, நமது ஜெப வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததாக இருக்கின்றதா? என்று சிந்திக்க நம்மை அழைக்கின்றது. ஜெபம் ஒரு ஓடத்திற்கு துடுப்பு போன்றது. துடுப்பு இல்லாமல், ஓடத்தின் கதி அதோ கதிதான்.

ஆகவே, தூய சபாஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப – செயல் – வீரர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image