St. Nicholas St. PeterPascual

டிசம்பர் 6

தூய நிக்கோலாஸ்

mary

தூய நிக்கோலாஸ்

நிகழ்வு :

ஒரு சமயம் கப்பல் ஒன்று கடலில் போய்க்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடலில் புயல் வீசவே, கடல் தண்ணீரெல்லாம் கப்பலுக்கும் வந்துவிட்டது. இதனால், அந்தக் கப்பல் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டது. கப்பலில் பயணித்த பயணிகள் எல்லாம் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தபோது, கப்பலில் இருந்த மாலுமிகள் தூய நிக்கோலாசை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். “தூய நிக்கோலாசே! உம்மைப் பற்றி எங்களுக்குத் தெரியும். நீர் இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி. உம்மால் எங்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்” என்று உருக்கமாக வேண்டினார்கள். உடனே, “உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற இதோ வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு தூய நிக்கோலஸ் அங்கு தோன்றினார். ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அலைகளையும் புயலையும் அடக்கி, அமைதி பிறக்கச் செய்தார். இதனால், கப்பல் மாலுமிகள் அனைவரும் தூய நிக்கோலாசுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, அவரை வணங்கினார்கள்.

இவ்வாறு தூய நிக்கோலாஸ் ஆபத்திலிருந்து பயணிகளையும் மாலுமிகளையும் காப்பாற்றியதால், அவர் மாலுமிகளுக்குப் பாதுகாவலாராக அறியப்படுகின்றார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூறும் நிக்கோலாஸ், 335 ஆம் ஆண்டு, தற்போதையை துருக்கியில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுவயது முதலே இறை பக்தியிலும் பிறரன்புப் செயல்களிலும் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கினார். ஒருமுறை நிக்கோலாஸ் வாழ்ந்து வந்த பகுதியில் இருந்த ஓர் ஏழைத் தந்தை, தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளை மணமுடித்து வைப்பதற்கு போதிய பணமில்லாது கஷ்டப்பட்டதால், அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதன்மூலம் கிடைக்கின்ற தொகையை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு திருமண காரியங்களை நடத்த நினைத்தார். இதை அறிந்த நிக்கோலஸ் இரவோடு இரவாக அந்த ஏழையின் வீட்டுச் சாளரத்தின் வழியாக மூன்று தங்க நாணயங்கள் அடங்கிய மூட்டையைப் போட்டு, அவருடைய மூன்று பெண் குழந்தைகளை பாவத்திலிருந்து காப்பாற்றினார். விஷயம் அறிந்த அந்த ஏழைத் தந்தை நிக்கோலாசிடம் வந்து, தன்னுடைய மூன்று மகள்களுடைய வாழ்வைவும் இழிவான செயலிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்.

நிக்கோலஸ், கால்நடையாகவே பல்வேறு இடங்களுக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் நடந்தே நீண்ட தூரங்களுக்குச் செல்வது அவருக்குப் பிடித்த விசயமாக இருந்தது. இப்படித்தான் அவர் புனித நாடுகளுக்குப் பயணப்பட்டார். இதற்கிடையில் மிரா என்னும் இடத்தில் ஆயர் இல்லாத நிலை இருந்தது. அங்கிருந்தவர்கள் அடுத்தநாள் காலையில், பேராலயத்திற்கு யார் முதன்முதலாக வருகின்றார்களோ, அவரை ஆயராகத் திருநிலைப் படுத்தலாம் என்று முடிவு செய்திருந்தார். நிக்கோலாசோ புனித நாடுகளுக்குச் செல்லும்வழியில் இருந்த மிரா வழியாகச் சென்று, அங்கிருந்த பேராலயத்திற்குள் நுழைந்தார். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை ஆயராகத் திருநிலைப்படுத்தினார்கள். முதலில் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், பின்னர் அதனை இறைத் திருவுளமென ஏற்றுக்கொண்டார்.

நிக்கோலாஸ் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்துவ நெறியின்படி நடப்பதே சவாலான ஒரு விசயமாக இருந்தது. அப்படி இருந்தாலும் அவர் விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். அதனால், மன்னன் டயோகிளசியானால் சிறைபிடித்து வைக்கப்பட்டு, அங்கு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தார்.

இன்னொரு சமயம் அவர் வாழ்ந்த பகுதியில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்களெல்லாம் உணவுக்காக பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அப்போது சரக்குக் கப்பல் ஒன்று கோதுமையை ஏற்றுக்கொண்டு அவ்வழியாக வந்தது. செய்தியை அறிந்த நிக்கோலஸ், அந்த சரக்குக் கப்பல் தளபதியை அணுகி, அவரிடம் மக்களின் பிரச்னையை எடுத்துக்கூறி மக்களுக்கு கோதுமை தருமாறு கேட்டார். அதற்கு அந்த கப்பல் தளபதி, இது கொன்ஸ்டண்டீநோபுள் மன்னனுக்குச் சொந்தமான கப்பல், இதிலிருந்து நான் கோதுமையைத் தரவேண்டும் என்றால், மன்னரிடமிருந்து அனுமதி பெற்றுத்தான் தரமுடியும்” என்றார். உடனே நிக்கோலாஸ், “இப்போது நீங்கள் இந்த பஞ்ச காலத்திற்கு மக்களுக்குத் தேவையான மட்டும் கோதுமையைத் தந்து உதவுங்கள், இந்தக் கப்பலிலிருந்து சிறிதளவுகூட கோதுமை குறையாது” என்றார். அதனடிப்படையில் கப்பல் தளபதி மக்களுக்கு கோதுமையைத் தந்தது உதவினார். அதிசயம் என்னவென்றால், நிக்கோலாஸ் சொன்னது போன்று கப்பலிலிருந்து சிறிதளவுகூட கோதுமை குறையவில்லை. இவ்வாறு நிக்கோலஸ் மக்கள் மீது உண்மையான அக்கறைகொண்டு புதுமைகள் செய்வதில் வல்லவராக இருந்தார். இவர் நிசேயா பொதுச் சங்கத்தில் கலந்துகொண்டு ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார் என்பது இவருக்கு இருக்கின்ற இன்னொரு சிறப்பு. இவர் 414 ஆம் ஆண்டு இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய நிக்கோலாசின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஒருவர் மற்றவருக்கு பரிசுகள் கொடுத்து உதவுவோம்

இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வை வடிவமைத்தது இவர்தான் என்பது நாம் நினைவுகூர்ந்து பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கு திருமண காரியங்களை நடத்த மிகவும் கஷ்டப்பட்ட ஓர் ஏழைத் தந்தைக்கு, தங்க நாணயங்கள் அடங்கிய மூன்று மூட்டைகள் இவர் கொடுத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிறிஸ்துமஸ் தாத்தாவே வடிவமைக்கப்பட்டது. இதன் முக்கியமான நோக்கமே (இல்லாதவர்களுக்கு) பரிசுகள் கொடுத்து உதவுவதுதான். இந்தப் பின்னணில் நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

கொடுப்பது என்றால் பணம் மட்டும் கிடையாது, நம்முடைய உழைப்பு, நேரம், ஏன் நம்மையே கூட பிறருக்குக் கொடுக்கல்லாம். தந்தைக் கடவுள் தன் மகன் இயேசுவை இந்த உலகத்திற்குப் பரிசாகக் கொடுத்தார், அவரோ தன்னையே இந்த உலகம் உயவதர்க்காகக் கொடுத்தார், தூய நிக்கோலஸ் தன்னிடம் இருந்ததை இல்லாதவர்களுக்குக் கொடுத்தார்.

ஆகவே, இயேசுவின் வழியில், தூய நிக்கோலாசின் வழியில் நடக்கும் நாம், இருப்பதை இல்லாதவருக்குக் கொடுப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image