St. Ambrose St. Sabinus

டிசம்பர் 7

தூய அம்புரோஸ்

mary

தூய அம்புரோஸ் (டிசம்பர் 07)

நிகழ்வு

அம்புரோஸ் மிலன் நகரில் ஆளுநராக இருந்தபோது அங்கு இருந்த (ஆரியப் பதிதத்தைப் பின்பற்றிவந்த) ஆயர் திடிரென இறந்துபோனார். எனவே மிலன் நகரின் ஆயர் பதவியானது வெற்றிடமாக இருந்தது. அந்த இடத்தில் யாரை நியமிப்பது என்று திருச்சபைக்கும் ஒரு குழப்பமாக இருந்தது. மக்களில் ஒருபிரிவினர் எங்களுக்கு ஒரு கத்தோலிக்க சபையைச் சேர்ந்த ஆயர்தான் வேண்டும் எனவும், இன்னொரு பிரிவினர் எங்களுக்கு ஆரிய பதிதத்தைப் பின்பற்றும் ஆயர்தான் வேண்டும் என கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அம்புரோஸ் தான் அதில் தலையிட்டு அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆம், அவர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒரு குழந்தை ’அம்புரோஸ் தான் எங்கள் ஆயர்’ என்று குரல் எழுப்பியது. இக்குரலைக் கேட்ட எல்லாரும் அது கடவுளின் குரலாகவே நினைத்து, சத்தமாக ‘அம்புரோஸ்தான் எங்கள் ஆயர்’ என்று உரக்கக் கத்தினர். இவ்வாறு மக்கள் அனைவரும் அம்புரோசை மிலன் நகரின் ஆயராக ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் அம்புரோசோ திருமுழுக்குக்கூட பெறாத தான் அதற்குத் தகுதியில்லை என நினைத்து லியோன்சியஸ் என்ற அரச அலுவலரின் வீட்டுக்கு ஓடிப்போனார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசர் வலன்டியன் அங்குசென்று அம்புரோசிடம், “நான் ஏற்படுத்திய ஆளுநரே! உங்களை மிலன் நகரின் ஆயராக எண்ணிப் பார்ப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என்று சொல்லி, அவரை மிலன் நகருக்குக் கூட்டி வந்து, அம்புரோசை மிலன் நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட பேருதவியாக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு
அம்புரோஸ் ஜெர்மனியில் உள்ள டிரியர் என்னும் இடத்தில் 340 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ஆரேலியுஸ் அம்புரோசியுஸ் ஆளுநராக இருந்தவர். அம்புரோசுக்கு ஒரு சகோதரி உண்டு. சிறுவயதிலேயே அம்புரோஸ் தன்னுடைய தந்தையை இழந்ததால், இவருடைய குடும்பம் உரோமை நகருக்குக் குடிபுகுந்தது. அம்புரோஸ் சிறுவயதிலே மிகவும் திறமையுள்ளவராக விளங்கினார். சிறப்பாக எழுதுவதிலும் பேசுவதிலும் அவர் வல்லவராக விளங்கினார். இவருடைய திறமையைப் பார்த்துதான் இவருக்கு 32 வயது நடக்கும்போதே மன்னன் வலண்டின் இவரை மிலன் நகரின் ஆளுநராக நியமித்தார்.
374 ஆம் ஆண்டு மிலன் நகரின் ஆயர் இறந்துபோக அம்புரோஸ் மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். அப்போது இவர் ஒரு சாதாரண கிறிஸ்தவராகவே இருந்தார். அதன்பிறகுதான் இவர் தன்னையே தயார்படுத்திக்கொண்டு, மிகச் சிறந்த ஓர் ஆயராக விளங்கினார். அம்புரோஸ் ஆயராக உயர்த்தப்பட்ட பிறகு தன்னிடம் இருந்த உடமைகளில் ஒரு சிறு பகுதியை மட்டும் தன்னுடைய சகோதரிக்குக் கொடுத்துவிட்டு மற்ற அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டார்.
ஆயராக உயர்ந்தபிறகு அம்புரோஸ் பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்தார். குறிப்பாக இவர் தன்னுடைய போதனையினால் – மறையுரையினால் - ஆரிய பதிதத்தைக் கடுமையாகச் சாடினார். இவருடைய மறையுரை எப்போதும் மக்களின் மனதைத் தொடுவதாக இருந்தது. இவருடைய மறையுரையால் தொடப்பட்டவர்தான் ஹிப்போ நகரின் ஆயரான தூய அகுஸ்தினார். அம்புரோஸ் எப்போதும் ஏழை எளியவர் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் மிலன் நகரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைப் பார்த்த ஆயர் அம்புரோஸ் ஆலயத்தில் இருக்கும் தங்கப் பாத்திரங்களை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவினார். இவர் சொன்ன “ஏழைகளுக்குக் கொடுக்கும்போது நீங்கள் உங்களுக்கு உரியவற்றைக் கொடுக்கவில்லை; அவர்களுக்கு உரியவற்றைதான் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்” (You are giving to the poor not what is yours; You are giving them what is theirs) என்ற வார்த்தைகள் எப்போதும் நம்முடைய சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
ஆயர் அம்புரோஸ் ஒருபோதும் அதிகாரத்திற்குப் பயப்படாமல் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்தார். உரோமையை ஆண்ட ஜஸ்டினியன் என்ற மன்னன் ஒருமுறை ஆயர் அம்புரோசைச் சந்தித்து, ஆரிய பதத்த்திற்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொண்டபோது, “நான் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே அடிபணிவேனே தவிர வேறு யாருக்கும் அடிபணிய மாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொல்லி வெளியே அனுப்பினார். அந்தளவுக்கு நாட்டு அரசனுக்குக்கூட பயப்படாத துணிச்சல் ஆயர் அம்புரோசிடம் இருந்தது.

இப்படி உண்மையான கடவுளின் தூதராய் வாழ்ந்து வந்த அம்புரோஸ் 397 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். ஆயர் அம்புரோஸ் தொடக்கத் திருச்சபையில் தோன்றிய முக்கியமான நான்கு மறைவல்லுனர்களில் ஒருவர். ஏனையோர் தூய அகுஸ்தினார், தூய எரோனிமுஸ், பெரிய கிரகோரியார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்

1. யாருக்கும் அஞ்சாமல், துணிவோடு நற்செய்திப் பணி செய்தல்
ஆயர் தூய அம்புரோஸ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துணிச்சல் மிக்க ஒரு நற்செய்திப் பணியாளராக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சி வாழவில்லை.
ஒருசமயம் தியோடோசியுஸ் என்ற மன்னன் அடக்குமுறை என்ற பெயரில் 7000 கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்தான். இச்செய்தியைக் கேட்டு ஆயர் அம்புரோஸ் கொதித்தெழுந்தார். “அவன்செய்த இந்த பாதகச் செயலுக்காக எல்லாருக்கும் முன்பாக பொதுமன்னிப்புக் கேட்கவேண்டும், இல்லையென்றால் அவன் திருச்சபையிலிருந்து தூக்கியெறியப்படுவான்” என்று முழங்கினார். தியோடோசியுசோ பயந்துபோய் மக்கள் அனைவருக்கும் முன்பாக விழுந்து பொது மன்னிப்புக் கேட்டான். இவ்வாறு ஆயர் அம்புரோஸ் யாருக்கும் பயப்படமால் அஞ்ச நெஞ்சத்தினராய் வாழ்ந்து வந்தார்.
அம்புரோசின் விழாவை நினைவுகூரும் இந்த நாளில், நாம் அவரைப் போன்று துணிச்சலாக இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அல்லது துணிச்சல்மிக்க இறை மனிதர்களாக வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசுகூறுவார், “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” என்று. இப்படிச் சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து சொல்வார், “காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமில்லாமல் தரையில் விழாது.... சிட்டுக் குருவிகள் பலவற்றையும்விட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதீர்கள்” என்று (மத் 10:29 -31). ஆம், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்கின்றபோது, நாம் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதே ஆண்டவர் இயேசுவும் ஆயர் அம்புரோசின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, தூய அம்புரோசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைப்பணியைத் துணிவுடன் செய்வோம், எதிர்வரும் தடைகளை இறைவனின் துணையால் துணிவோடு வெற்றிகொள்வோம். அதன்வழியாக வெற்றிகொள்வோம்.

 

image