St. Juan Diego Cuauhtlatoati

டிசம்பர் 9

தூய ஜுவான் டியாகோ

mary

தூய ஜுவான் டியாகோ

“ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக் 1:48)

வாழ்க்கை வரலாறு

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சிகோவை அஸ்டெக் என்பவர் ஆண்டுவந்தார். இவருடைய காலத்தில் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால் 1521 ஆம் ஆண்டு இவருடைய ஆட்சி ஹெர்மன் கோர்ட்ஸ் என்பவரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பின்பு, நற்செய்தியானது தங்குதடையில்லாமல் அறிவிக்கப்படுவதற்கு எல்லாச் சாத்தியக் கூறுகளும் உண்டாயின. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த அருட்தந்தையர்கள் மெக்சிகோவில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்கள்.

இந்த பிரான்சிஸ்கன் அருட்தந்தையர்கள் அறிவித்த நற்செய்தியினால் கிறிஸ்துவுக்குள் வந்தவர்கள்தான் இன்று நாம் நினைவுகூரும் தூய ஜுவான் டியாகோ என்பவர் ஆவார். இவருடைய மனைவி மரிய லூசியா என்பவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிடையாது. அப்படியிருந்தபோதும் இவர்கள் ஆண்டவர்மீது உண்மையான நம்பிக்கைகொண்டு, தங்களுடைய இருப்பிடத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிரான்சிஸ்கன் சபை துறவுமடத்தில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காக ஒவ்வொருநாளும் வந்துபோனார்கள். இப்படியே ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கும்போது 1529 ஆம் ஆண்டு, ஜுவான் டியாகோவின் மனைவி மரிய லூசியா இறந்துபோனார்.

தன்னுடைய மனைவி இறந்தபின்பும் கூட, ஜுவான் டியாகோ ஒவ்வொருநாளும் ஆலயத்திற்குச் சென்று, திருப்பலி காணத் தவறவே இல்லை. 1531 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 9 ஆம் நாள், திருப்பலி காண்பதற்காக ஜுவான் டியாகோ வழக்கமாகச் செல்லும் டெபெயாக் மலைவழியாக விரைந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு இளம்பெண் அவருடைய பெயரைச் சொல்லி அழைத்தார். உடனே ஜுவான் டியாகோ, அவர் யார் என்று திரும்பிப் பார்த்தபோது, அங்கே 14 வயது இருக்கக்கூடிய இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் ஜுவான் டியாகோவைப் போன்று கருமை நிறத்தில் இருந்தார். அவர் அவரிடம், “நானே உம்முடைய இரக்கத்தின் அன்னை” என்றார். இதைக் கேட்டு ஜுவான் டியாகோ வியப்பு மேலிட அவரைப் பார்த்தார். அப்போது கருமைநிற அன்னை ஜுவான் டியாகோவிடம், “நீ விரைவாகச் சென்று ஆயரைச் சந்தித்து, இங்கே ஓர் ஆலயம் கட்டி எழுப்பச் சொல்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

ஜுவான் டியாகோவும் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, ஆயரிடத்தில் சென்று அன்னை சொன்னதையெல்லாம் சொன்னார். ஆனால் ஆயரோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. இதனால் முகவாட்டத்தோடு திரும்பி வந்த ஜுவான் டியாகோ, நடந்ததை மிக வருத்தத்தோடு அன்னையிடம் சொன்னார். அதற்கு அன்னை அவரிடம், “கன்னிமரி காட்சிகொடுத்ததாகச் சொல்லிவிட்டு, முன்பு நான் சொன்னதையெல்லாம் ஆயரிடம் சொல்” என்றார். ஜுவான் டியாகோவும் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, ஆயரிடத்தில் சொன்னார். ஆயரோ, “உனக்குக் கன்னிமரி காட்சி கொடுத்தார் என்றால், அடையாளம் ஒன்றைக் கேள்” என்று சொல்லி அனுப்பினார். இதனால் ஜுவான் டியாகோ வருத்ததோடு திரும்பி வந்து நடந்தது அனைத்தையும் அன்னையிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த முறை அன்னை ஜுவான் டியாகோ வைத்திருந்த துண்டில் கொஞ்சம் பூக்களைத் தந்து, இதனை ஆயரிடத்தில் காட்டு என்றார். ஜுவான் டியாகோ, அன்னை கொடுத்த பூக்களை ஏந்திக்கொண்டு ஆயரிடத்தில் சென்று காட்டினார். அப்போது அந்தப் பூக்களின் நடுவே, அன்னையின் உருவம் தோன்றியது. இதைப் பார்த்து வியந்துபோன ஆயர், அன்னையின் உருவம் தோன்றிய துண்டினை பேராலயத்திற்கு ஏந்திச் சென்று மக்களுடைய பார்வைக்கு வைத்தார். அதற்குப் பின்பு அன்னை சொன்னது போன்றே டெபெயாக் மலையில் அன்னைக்கு ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.

இதற்குப் பின்பு ஜுவான் டியாகோ தன் வாழ்நாளின் இறுதிவரைக்கும் அன்னையின் பெருமையை மக்களுக்கு எடுத்துரைத்துவிட்டு 1548 ஆம் ஆண்டு, மே திங்கள் 30 அன்று இறையடி சேர்ந்தார். இவருக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2002 ஆம் ஆண்டு, ஜூலை 31 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜுவான் டியாகோவின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. இறைவனின் கையில் ஒரு கருவியாக இருந்து செயல்படுவோம்

மெக்சிகோ நாட்டில் மரியன்னையின் புகழ் பரப்ப, நற்செய்தியை அறிவிக்க இறைவன் ஜுவான் டியாகோவினை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்தார். ஜுவான் டியாகோவும் இறைவனோடு ஒத்துழைத்தார். இந்த உலகத்தில் இறைவன் நம் வழியாய் ஏராளமான பணிகளைச் செய்யக் காத்திருக்கின்றார். நாம் இறைவனின் கைகளில் ‘இதோ உமது அடிமை’ என நம்மை ஒப்படைத்து, அவருடைய ஆட்சி இந்த மண்ணில் மலர நாம் ஒத்துழைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கருமை நிற மரியன்னை ஜுவான் டியாகோவிடம் சொன்ன வார்த்தைகள் இவை: “கலங்காதே, திகையாதே, நான் உனக்குச் சொன்னதை ஆயரிடத்திலும் எல்லாரிடத்திலும் எடுத்துச் சொல், ஏனெனில் நான் உன்னை என் கைகளில் தாங்கியுள்ளேன்”. இறைவனுடைய பணியைச் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும், அவருடைய கருவியாக இருந்து இந்த மண்ணகத்தில் இறையாட்சியை மலரச் செய்ய உழைப்போருக்கும் இறைவனும் அன்னை மாறியும் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவைதான்.

ஆகவே, தூய ஜுவான் டியாகோவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனில் கையில் ஒரு வல்லமையுள்ள கருவியாக இருந்து செயல்படுவோம். இறைவனின் நாமத்தை எல்லாருக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image