St. Jane Frances De Chantal St. Spiridion
St. Finnian Of Clonard Our Lady of Guadalupe

டிசம்பர் 11

குவாடலூப் அன்னை

mary

குவாடலூப் அன்னை

“பின்னர் தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்’ என்றார். அந்நேரம் முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்” (யோவா 19:27)

வரலாறு

1531 ஆம் ஆண்டு, டிசம்பர் 9 ஆம் நாள், மெக்சிகோவில் உள்ள டோல்பெட்லாக் என்ற ஊரில் வசித்துவந்த ஜுவான் டியாகோ என்பவர், டால்டிடால்கோ இடத்தில் இருந்த பிரான்சிஸ்கன் துறவுமடத்தில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காக விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவர் டால்டிடால்கோவில் இருந்த ஆலயத்திற்குப் போகும்போது டெபெயாக் என்ற மலையின் வழியாகத்தான் போகவேண்டும்.

அவ்வாறு அவர் போய்க்கொண்டிருக்கும்பொது, “ஜுவான் டியாகோ, ஜுவான் டியாகோ” என்று ஒரு பெண் அழைப்பதுபோன்று இருந்தது. ஜுவான் டியாகோ திரும்பிப் பார்த்தபோது, அங்கே இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். “ஜுவான் டியாககோ! நான்தான் இரக்கத்தின் அன்னை. நீ எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும்... நீ மெக்சிகோவிற்கு புறப்பட்டுச் சென்று அங்கிருக்கும் ஆயரிடம், ‘இங்கே ஓர் ஆலயம் கட்டியெழுப்புமாறு சொல்’. நான் இங்கு உனக்காகக் காத்திருக்கிறேன்” என்றார். ஜுவான் டியாகோவும் அன்னை மரியின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொண்டு ஆயரிடத்தில் சென்றார்.

மெக்சிகோ சென்ற ஜுவான் டியாகோ, ஆயர் ஜும்மர்ராகாவைச் சந்தித்து, மரியன்னை சொன்னதை அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். ஆயரோ ஜுவான் டியாகோ சொன்னதை காதிலே வாங்கவேவில்லை. இதனால் வருத்தத்தோடு திரும்பிவந்த ஜுவான் டியாகோ, மரியன்னையிடம் நடந்ததைக் கூறினார். அன்னையோ, “பரவாயில்லை, நாளைக்குப் போகும்போது மரியன்னை காட்சிகொடுத்ததாகச் சொல்” என்றார். மறுநாள் ஜுவான் டியாகோ ஆயரிடத்தில் சென்று சொன்னபோது, “மரியன்னை உனக்குக் காட்சி கொடுத்தார் என்றால், அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். ஆயரிடமிருந்து விடைபெற்று வந்த ஜுவான் டியாகோ, நடந்தது அனைத்தையும் மரியன்னையிடம் எடுத்துச் சொன்னார்.

அப்போது அன்னை அவரிடம், “நீ நாளைக்கு வரும்போது, நான் உனக்கு அடையாளம் ஒன்றைத் தருகிறேன். அதை நீ ஆயரிடத்தில் போய் காட்டு” என்றார். சரி என்று சொல்லிவிட்டு மரியன்னையிடமிருந்து விடைபெற்ற ஜுவான் டியாகோ தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வீட்டிற்கு வந்த ஜுவான் டியாகோ, தன்னுடைய மாமா ஜுவான் பெர்னார்டினோ நோயுற்று இருப்பதைக் கண்டார். எனவே அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கும் இங்கும் ஓடினார். இதனால் அன்னை சொன்னதை மறந்துபோய், மறுநாள் அவரைப் பார்க்கப் போகவே இல்லை. தன்னுடைய மாமாவிற்கு உடல்நிலை ஓரளவு சரியான பின்பு டிசம்பர் 12 ஆம் நாள், ஜுவான் டியாகோ, டால்டிடால்கோவில் இருந்த ஆலயத்தில் திருப்பலி காண்பதற்காகச் சென்றார். அவர் டெபெயாக் மலையருகே சென்றபோது அன்னையானவள் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஜுவான் ஆச்சரியத்திற்கு உள்ளாகி நின்றார். அப்போது அன்னை அவரிடம், “ஜுவான் டியாகோ! நான் உனக்குக் அடையாளம் தருவதாகச் சொன்னேனே! நான் கொடுக்கும் இந்த மலர்களை ஆயரிடத்தில் போய் காட்டு” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய கையில் இருந்த மலர்களை ஜுவான் டியாகோ வைத்திருந்த துண்டில் போட்டார். ஜுவான் டியாகோ அதனை ஏந்திக்கொண்டு ஆயரிடத்தில் போய் காட்டினார்.

அன்னை கொடுத்த மலர்களை ஜுவான் டியாகோ ஆயரிடத்தில் போய் காட்டியபோது, அவர் மிகவும் ஆச்சரியப்பட்டு நின்றார். ஏனென்றால், அந்த மலர்களுக்கு நடுவே அன்னையிடம் உருவம் தோன்றியது. அந்த உருவம் டெபெயாக் மலையில் தோன்றிய அன்னையின் உருவகமாக இருந்தது. இதனால் ஆயர், ஜுவான் டியாகோ சொன்ன வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு டிசம்பர் 26 ஆம் நாள், டெபெயாக் மலையில் அன்னைக்கு என்று ஓர் ஆலயம் கட்டி, அதனை மக்களுடைய வழிபாட்டிற்காக அனுமதித்தார். அன்னையும் அந்த இடத்திலிருந்து இன்றுவரைமக்களுக்கு நல்லாசிர் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

குவாடலூப் அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. அன்னையிடம் வேண்டுவோம், அருளாசிர் பெறுவோம்

ஜுவான் டியாகோவுக்கு அன்னை காட்சிக்கொடுத்தபோது, “நானே இரக்கத்தின் அன்னை, என்னிடத்தில் வேண்டுவோருக்கெல்லாம் அருளாசிர் வழங்குவேன்” என்று கூறினார். அன்னை சொன்ன வார்த்தைகளை நம்பி, நாம் அன்னையிடம் வேண்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஒரு நிகழ்வு. பெண்கள் பிரிவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மிகச் சிறந்த விராங்கனையான திருனேஷ் டிபாபா உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்களோடு மெசெரெட் தேபார் கலந்துகொண்டார். எல்லாரும் திருனேஷ் டிபாபாதான் வெற்றி பெறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் மெசெரெட் தேபார் என்பவர் வெற்றிகொண்டார். போட்டி முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் அவரிடம், “எப்படி உங்களால் இது சாத்தியமானது?” என்று கேட்டதற்கு, “நான் இந்த பந்தயத்தை அன்னை மரியிடம் ஒப்படைத்துவிட்டு ஓடினேன். அப்படி ஓடும்போதும் என்னுடைய ஆடையினுள்ளே மரியன்னையின் படத்தைத் தாங்கி ஓடினேன். அந்த அன்னைதான் என்னுடைய வேண்டுதலைக் கேட்டு, எனக்கு வெற்றியை அளித்தார்” என்றார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

அன்னையிடம் வேண்டுவோருக்கு, அவர் தன் ஆசிரை நிறைவாகத் தருவார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய குவாடலூப் அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டு வாழ்வோம். அவருடைய அருளை இறைஞ்சி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

image