St. Lucy St. Odilia

டிசம்பர் 13

தூய லூசியா (பிரகாசியம்மாள்) (283 -304)

mary

தூய லூசியா (பிரகாசியம்மாள்) (283 -304)

“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்” (மத் 5: 11-12)

வாழ்க்கை வரலாறு

‘பிரகாசியம்மாள்’ என அன்போடு அழைக்கப்படும் லூசியா 283 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள சிராக்யுஸ் என்ற ஊரில் இருந்த ஓர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இறந்துபோனார். எனவே இவர் தன்னுடைய தாய் யூத்திசியாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

லூசியா, சிறுவயது முதலே தன்னிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் நல்ல பண்போடு வளர்ந்து வந்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய கற்பு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்துவந்தார். இவர் இப்படி தன்னை முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்துகொண்டிருக்க, இவருடைய தாயார் யூத்திசியாவோ இவருக்குத் தெரியாமல் இவரை பஸ்காசியுசுக்கு மணமுடித்துக் கொடுக்க திட்டம் தீட்டினார். ஆனால், இதை எப்படியோ தெரிந்துகொண்ட லூசியா மிகவும் வருந்தினார். அதே நேரத்தில் தன்னுடைய தாயின் முடிவில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று இறைவனிடம் இறைவிடாது ஜெபித்து வந்தார்.

இதற்கிடையில் லூசியாவின் தாயார் யூத்திசியா தனக்குப் பல காலமாக இருந்த இரத்தப்போக்கு சரியாக வேண்டும் என்பதற்கு அவர் தன்னுடைய மகளைக் கூட்டிக்கொண்டு அருகில் இருந்த ஆகத்தம்மாளின் கல்லறைக்கு செபிக்கச் சென்றார். அங்கு ஜெபித்ததன் பயனாக, அவருக்கு இருந்த இரத்தப் போக்கு நின்று போனது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு லூசியா தன் தாயாரிடம் ஆண்டவருக்காகக் கன்னியாகவே வாழ இருக்கும் தன்னுடைய விருப்பத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய தன்னுடைய விருப்பத்தையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் லூசியாவின் தாயார் அவருடைய விருப்பத்திற்கு மறுப்புச் சொன்னபோதும், லூசியா தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாய் இருந்ததைக் கண்டு, அவர் அவருடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் லூசியா தனக்குச் சொந்தமான சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்காக தன்னை அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

விஷயம் அறிந்த ஆளுநன் பஸ்காசியுஸ், லூசியாவிடம் வந்து, தன்னை மணமுடித்துக்கொள்ள கேட்டுக்கொண்டான். லூசியாவோ, ஆண்டவருக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துவிட்டதால், யாரையும் மணமுடிப்பதாக இல்லை என்று சொல்லி தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாய் இருந்தார். இதைக் கேட்டு சினமுற்ற அவன், அப்போது உரோமையின் அரசனாகிய இருந்த டயோக்ளசியனிடம் சென்று, “லூசியா ஒரு கிறிஸ்தவள், அவளை அப்படியே விட்டுவைப்பது நல்லதன்று” என்று போட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டான். டயோக்ளசியனோ கிறிஸ்தவர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டவன், அவனுக்கு லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று தெரிந்ததும், அவன் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, அவளை இழுத்து வரச்சொன்னான். படைவீரர்கள் லூசியாவை எவ்வளவுதான் இழுத்தாலும் அவர்களால், அவளை ஒரு அடிகூட இழுக்கமுடியவில்லை. காரணம் இயேசு அவரை யாரும் இழுக்க முடியாதபடி பார்த்துக்கொண்டார்.

பாடைவீரர்கள் யாரும் லூசியாவை இழுத்துவர முடியாத செய்தியைக் கேள்விப்பட்ட அரசன், லூசியாவை தீயிலிட்டுக் கொழுத்த ஆணையிட்டான். அப்போதும் தீ அவரை ஒன்றும் செய்யவில்லை. கடைசியில் அவன் லூசியாவை தன்னுடைய வாளால் வெட்டிக் கொன்றுபோட்டான். லூசியாவோ 304 ஆம் ஆண்டு தன்னுடைய இருப்பத்தியோறாம் வயதில் கிறிஸ்துவுக்காக உயிர்நீத்து மறைசாட்சியானார். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய இறைவார்த்தை, “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்பதாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூசியாவின் வாழக்கை வரலாற்றை வாசித்த நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. விசுவாசத்தில் வேரூன்றி இருத்தல்

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து கூறுவார், “இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே, மீட்கப்படுவார்” என்று. தூய லூசியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நமக்கு அந்த இறைவார்த்தைதான் நினைவுக்கு வருகின்றது. லூசியா, கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தை விட்டுவிடவேண்டும் என்று உரோமை அரசன் எவ்வளவோ கொடுமைகளை, சித்ரவதைகளை அவருக்குக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், அவரோ எதற்கும் அஞ்சாது விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். லூசியாவைக் குறித்து படிக்கின்ற நாமும் அவரைப் போன்று விசுவாசகத்தில் வேறொன்றி இருக்கவேண்டும் என்பதுதான் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

இந்த இடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் மறைபோதகப் பணியைச் செய்து வந்த ஜான் அர்ட்லி (John Ardly) அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள்ளதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஜான் அர்ட்லி, மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துச் சொன்னதற்காக ஆட்சியாளர்கள் அவரைப் பிடித்து, தீயில் போட்டு எரித்துக் கொல்வதற்கு அவரை கொலை களத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது அவரை இழுத்துச் சென்ற படைவீர்களில் ஒருவன், “தீயில் எரிந்து சாம்பலாவது எவ்வளவு கொடிய தண்டனை என்பது உனக்குத் தெரியாதா? பேசாமல் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உன்னுடைய நாட்டுக்கு ஓடிப்போ, எதற்காக இந்த சித்ரவதைகளை எல்லாம் அனுபவிக்கவேண்டும்?” என்றான். அதற்கு ஜான் அர்ட்லி அவனிடம், “என்னுடைய தலையில் உள்ள முடிகள் எத்தனை இருக்கின்றதோ அத்தனை முறை எனக்கு வாழ்வு கிடைத்தாலும் நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனே ஒழிய, உயிருக்குப் பயந்து ஓட மாட்டேன்” என்றார். இதைக் கேட்டு அந்தப் படைவீரன் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனான்.

ஆம், கிறிஸ்துவுக்காக எதையும், ஏன் நம் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான சீடத்துவ வாழ்க்கை.

ஆகவே, தூய லூசியாவைக் குறித்து வாசித்து அறிந்த நாம், அவரைப் போன்று விசுவாசத்தில் வேரூன்றி இருப்போம். அதன்மூலம் இயேசுவின் உண்மைச் சீடர்களாவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image