St. John of the Cross St. Nicasius St. Venantius Fortunatus

டிசம்பர் 14

தூய சிலுவை அருளப்பர்

mary

தூய சிலுவை அருளப்பர்

நிகழ்வு :

ஒருசமயம் (சிலுவை) அருளப்பர் காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கூட்டமானது அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரிடமிருந்த பணத்தை எல்லாம் எடுத்துத் தருமாறு கேட்டது. அருளப்பரும் எதுவும் பேசாமல் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் அந்த கொள்ளைக்கூட்டத் தலைவனிடம் எடுத்துக்கொடுத்தார். அவரிடத்தில் சிறிதளவுதான் பணம் இருந்தது. அவை அனைத்தையும்கூட அவர் அவர்களிடம் கொடுத்துவிட்டு வழி நடந்தார்.
சிறுதுதூரம் நடந்தபிறகு, அவர் தன்னுடைய கையை அங்கிக்குள் விட்டுப் பார்த்தபோது, அங்கிப் பையின் ஓரத்தில் ஒருசில நாணயங்கள் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் வேகவேகமாகப் போய்கொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தை சத்தம் போட்டு அழைத்தார். அவருடைய சத்தத்தைக் கேட்டு அவர்கள் திரும்பி வந்தார்கள். அவர்களிடத்தில் அவர், “என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் உங்களிடத்தில் கொடுக்கவில்லை, ஒரு சில நாணயங்களும் என்னிடத்தில் இருக்கின்றது. அதனை தெரியாமல் உங்களிடத்தில் கொடுக்க மறந்துவிட்டேன். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த நாணயத்தை அவர்களிடத்தில் கொடுத்தார். அருளப்பர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். அவருடைய நேர்மை அவர்களை ஏதோ செய்தது. எனவே, அவர்கள் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அவரிடமிருந்து கவர்ந்து சென்ற மொத்த பணத்தையும் அவரிடத்தில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து மறைந்தனர்.
தன்னுடைய வாழ்வில் உண்மை, தாழ்ச்சி, பொறுமை, இரக்கம் போன்ற நற்குணங்களைக் கொண்ட சிலுவை அருளப்பரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் மகிழ்வோடு கொண்டாடுகின்றோம்.

வாழ்க்கை வரலாறு :
சிலுவை அருளப்பர் அல்லது யோவான் ஸ்பெயின் நாட்டில் உள்ள காஸ்டில் என்னும் ஊரில் 1542 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை இவரை சிறிய வயதிலேயே விட்டுப் பிரிந்ததால், இவர் தன்னுடைய தாயின் பராமரிப்பிலே வளர்ந்தார். இவருடைய குடும்பம் துணி நெய்து, அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து பிழைப்பை ஒட்டக்கூடிய மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆகையால் இவர் சிறுவயதில் மருத்துவமனையில் வேலைபார்த்து, அதிலிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தை தன்னுடைய தாயிடம் கொடுத்து அவருக்கு பேருதவியாக இருந்தார்.

தன்னுடைய தொடக்கக் கல்வியை சேசு சபையார் நடத்தி வந்த நிறுவனத்தில் கற்ற இவர், 21 ஆம் வயதில் கார்மேல் துறவறமடத்தில் சேர்ந்து 1568 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இந்த ஆண்டிலேதான் அவர் கார்மேல் சபையில் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்திய அவிலா தெரசாவைச் சந்தித்தார். அதன்பிறகு நடந்தது எல்லாம் வரலாறு என்பதை யாரும் மறக்க முடியாது. அவிலா தெரசாவும் அருளப்பரும் இணைந்து கார்மேல் சபையில் பெரிய பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். குறிப்பாக அவிலா தெரசா ஆண்களுக்காக ஏற்படுத்திய துறவற சபையில் அருளப்பர்தான் முதல் நபராக இடம்பெற்றார்; அவரே அச்சபையின் தலைவராகவும் உணர்ந்தார். சபைத் தலைவராக உயர்ந்தபிறகு அருளப்பர் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால் இது அவருடைய சபையில் இருந்த ஒருசிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவருடைய சபையில் இருந்தவர்கள் அவரை கடத்திச் சென்று, டோலேடோ என்ற இடத்தில் வைத்து சித்ரவதை செய்தார்கள். ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு மேலாகவும் அருளப்பர் அந்த சிறையில் இருந்து, நிறைய சித்ரவதைகளை அனுபவித்தார். அந்த நேரத்தில் எல்லாம் இறைவன் ஒருவரே தனக்குத் துணை என்று அவர் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தபோது அவர் எழுதிய ‘The Dark night of the Soul’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது. ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த அருளப்பர் மீண்டுமாக தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பி வந்தார். இந்த முறை அவர் மிகவும் துணிவோடு பற்பல பணிகளைச் செய்தார். நிறைய புத்தகங்களை எழுதினார். அவர் எழுதிய The Absent of Mount Carmel, Spiritual Canticle, Light Flame of Love போன்ற புத்தகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவர் தன்னுடைய சபைக்குருக்களிடம் வலியுறுத்திச் சொன்ன விஷயங்கள் இரண்டு. ஒன்று எல்லாவற்றையும் துறந்து வாழ்வது (Absolute Detachment), இன்னொன்று அளவுகடந்த அன்பு (Absolute Love). இந்த விஷயங்களைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக் கடினம் என்று அவருடைய சபைத் துறவிகள் இரு குருக்களாக பிரிந்தார்கள் (Moderate, Rationalist). ராஸ்னலிஸ்ட் என அழைக்கப்பட குழுவானது அருளப்பருக்கு எதிரான சதித்திட்டத்தில் இறங்கியது. அவரைத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது. இதனால் அவர் பலவாறு வேதனைகளை அடைந்தார். இதற்கிடையில் அவர் உடலளவிலும் மிகவும் பலவீனமடைந்தார். அவருடைய காலில் ஏற்பட்ட புற்றுநோயானது உடல்முழுவதும் பரவி அதுவே அவருக்கு மிகப்பெரிய சிலுவையாக மாறியது. இப்படியோர் இறைப்பணியைச் செய்து, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு இன்னல்களை அனுபவித்த அருளப்பர், 1591 ஆம் ஆண்டு தன்னுடைய கையில் சிலுவையை ஏந்தியவராய் ‘ஆண்டவரே! உம்முடைய கையில் என்னுடைய ஆன்மாவை ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு இறந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினோறாம் பத்தினாதரால் மறைவல்லுநர் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய சிலுவை அருளப்பரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. துன்பத்தை பொறுமையாக ஏற்றல்
சிலுவை அருளப்பரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதுதான். அவர் டோலேடோ என்ற சிறையில் ஒன்பது மாதங்கள் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் ஆண்டவர் இயேசு அவருக்குத் தோன்றி, “என்மீது பிரியமாக இருக்கும் உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் எனக்கு வரக்கூடிய துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைத் தாரும். அதுவே போதும்” என்றார். ஆண்டவரும் அவர் கேட்டுக்கொண்டது போன்று துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் வரக்கூடியத் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் மன திடத்தைப் பெற்றிருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் பேதுருவைப் போன்று துன்பமே வேண்டாம் என்றுதான் நினைக்கின்றோம். ஆனால் துன்பங்களே நம்மைப் புடமிடுகின்றன. துன்பங்களே நம்மைக் கடவுளுக்கு மிக நெருக்கமாகக் கூட்டிச் செல்கின்றன என்ற உண்மையை மறந்தவர்களாக இருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு சொல்வார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும், அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்று (யோவா 12:24). நாம் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

எனவே, தூய சிலுவை அருளப்பரின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்த நற்பண்புகளை நமதாக்குவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image