St. Mary Di Rosa

டிசம்பர் 15

தூய மேரி டி ரோசா

mary

தூய மேரி டி ரோசா

“அப்பொழுது தொழுநோயாளர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. (மத் 8: 2-3)

வாழ்க்கை வரலாறு

இன்று அன்னையாம் திரு அவை, தூய பவுலா டி ரோசாவின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர், இத்தாலியில் உள்ள ப்ரெஸ்சியா நகரில் 1813 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 11 நாள் பிறந்தார். இவர் தன்னுடைய பள்ளிக்கல்வியை விசிட்டேசன் அருட்சகோதரிகள் நடத்திவந்த பள்ளியில் கற்றார்.

சிறுவயது முதலே நோயாளிகள்மீது தனிப்பட்ட அன்புகொண்ட இவர், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும், அவர்களோடு அன்பொழுகப் பேசுவதற்கும் நிறைய நேரம் ஒதுக்கினார். இது மட்டுமல்லாமல், பங்கில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் மிகவும் ஈடுபாட்டோடு கலந்துகொண்டு, பெண்களை ஒருங்கிணைப்பதிலும், பல்வேறு குழுக்களுக்கு தியானம் கொடுப்பதிலும் மெருகேறி வந்தார்.

பவுலாவின் வாழ்க்கை இப்படியே ஓடிக்கொண்டிருக்கும்போது, 1834 ஆம் ஆண்டு, ஏழை மாணவ மாணவிகளுக்கு என்று ஒரு விடுதியைத் தொடங்கலாம் என்று முடிவுசெய்தார். அதன்பேரில் தன்னுடைய குடும்பத்திலிருந்தும், ஒருசில நல்ல உள்ளங்களிடமிருந்தும் பணம் திரட்டி விடுதியைக் கட்டி எழுப்பினார். 1836 ஆம் ஆண்டு ப்ரெஸ்சியாவில் காலாரா நோய் பரவியபோது, நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு தாய்க்குரிய கரிசனையோடு கவனித்துக்கொண்டார். இப்படி ஏழை மாணவ, மாணவிகளையும் நோயாளிகளையும் பவுலா நல்லவிதாமாய் கொள்வதைப் பார்த்த பேரருட்தந்தை பின்சானி அவரை ‘Handmaids of Charity of Brescia’ என்ற சபைக்குத் தலைவியாக ஏற்படுத்தினார். இது நடந்த ஆண்டு 1840 ஆகும்.

சபைத் தலைவியாக உயர்ந்த பவுலா, மேரி குருசிபிஸ்சா என்ற பெயரைத் தரித்துக்கொண்டு, தன்னுடைய பணிகளை முன்பைவிட மிகச் சிறப்பாகச் செய்தார். இவருடைய பணிகளைப் பார்த்துவிட்டு மறைமாவட்டம் இவருக்கு முழு ஒத்துழைப்பைத் தந்தது. இதற்கிடையில் 1848 ஆம் ஆண்டு, பவுலாவிற்கு எல்லாமுமாக இருந்த பேரருட்தந்தை பின்சானி திடிரென்று இறந்துபோனார். இந்த அதிர்ச்சியிலிருந்து பவுலா மீள்வதற்குள், இவர் இருந்த ப்ரெஸ்சியாவில் பயங்கரமாக போர் ஏற்பட்டு, ஏராளமான பேர் கொல்லப்பட்டார்கள், பலர் படுகாயமடைந்தார்கள்.

இவர்களுக்கு மத்தியில், பவுலா தன்னுடைய சபை அருட்சகோதரிகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு பணிசெய்யத் தொடங்கினார். பலருடைய காயங்களுக்கு கட்டுப்போட்டு, மருந்து தடவி, அவர்கள் விரைவில் குணமாகுமாறு பார்த்துக்கொண்டார். இது பக்கம் போனாலும்கூட ப்ரெஸ்சியாவில் போர் ஓய்ந்தபாடில்லை. ஒருநாள் போர்வீரர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பவுல் இருந்த துறவறமடத்தை நோக்கி வேகமாக வந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு, மடத்தில் இருந்த அருட்சகோதரிகள் எல்லாரும் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடி மறைந்தார்கள். பவுலாவோ எதற்கும் பயப்படாமல், தன்னுடைய கையில் பெரிய பாடுபட்ட சிரூபத்தை ஏந்திக்கொண்டு, அவர்கள் முன் சென்றார். அப்போது அந்த பாடுபட்ட சிரூபத்திலிருந்து வெளிப்பட்ட ஒளி, அவர்களுடைய பார்வையை மங்கலாகச் செய்தது. இதனால் படைவீரர்கள் யாவரும் தலைதெறிக்க ஓடி மறைந்தார்கள்.

இதற்குப் பின்பு பவுலா நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு நல்லதொரு கல்வியினைக் கொடுக்கவும் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இப்படி அயராது பாடுபட்டதால், அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 1850 ஆம் ஆண்டு, டிசம்பர் 15 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவருக்கு 1954 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பவுலா டி ரோசாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நோயாளிகள், வறியோரிடத்தில் அக்கறை

தூய பவுலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான நாம், நம்முடைய பகுதியில், குடும்பங்களில் இருக்கக்கூடிய நோயாளிகள், வறியவர்கள் போன்றோரைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். தூய பவுலா நோயாளிகளையும் ஏழை எளியவர்களையும் கவனித்துக் கொள்ள தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். நாம் அப்படியிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உயர்சாதியினர் (?) அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர்களை ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்துசென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முடிந்தவர்கள் பனிரெண்டு கிலோமீட்டர் நடந்துசென்று தண்ணீர் எடுத்துவந்தார்கள். ஆனால், அந்த தாழ்த்தப்பட்ட மக்களில் முடியாத நிலையில், எந்தவொரு உறவும் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் இருந்தார். அந்த மூதாட்டியின் நிலையைக் கண்ணுற்று பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒவ்வொருநாளும் பனிரெண்டு கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவந்து அந்த மூதாட்டிக்கு உதவினான். இப்படி அவன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு உதவினான்.

இச்செய்தி அதிகாரிகளின் கவனித்திற்கு வர, அவர்கள் அந்தச் சிறுவனைப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கிணறு ஒன்றையும் வெட்டித் தந்தனர்.

யாரும் இல்லாத மூதாட்டிக்கு அந்த சிறுவன் செய்த உதவி மிகவும் பாராட்டிற்கு உரியது. நாமும் நம்முடைய பகுதியில் வாழும் கைவிடப்பட்ட ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் இவர்களைக் கவனித்துக்கொள்வதுகூட நாம் செய்கின்ற மிக முக்கியமான ஒரு பணியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய பவுலாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழைகள், நோயாளிகள், அனாதைகள் இவர்களிடத்த்தில் தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image