St. Adelaide Of Burgundy

டிசம்பர் 16

தூய அடேலைத்

mary

தூய அடேலைத்

“கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்டபோது அவர் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்” (1 பேதுரு 2: 21-23).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் அடேலைத், 930 ஆம் அண்டு, பர்கண்டியை ஆண்டுவந்த இரண்டாம் ருடால்ப் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடேலைத், சிறுவயது முதலே பக்திநெறியில் சிறந்துவிளங்கி வந்தார்.

அடேலைத்துக்கு பதினாறு வயது நடக்கும்போது அவருடைய தந்தை அவரை இத்தாலி நாட்டு அரசர் லோதைர் (Lothair) என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அடேலைத் – லோதைருடைய திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் அடேலைத்தின் கணவர் லோதைர் 950 ஆம் ஆண்டு திடிரென இறந்துபோனார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் பெரெங்கரியுஸ் மன்னர் அடேலைத்தை தன்னுடைய மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க திட்டம் தீட்டினார். இதற்கு அடேலைத் சம்மதிக்காததால், பெரெங்கரியுஸ் மன்னர் அவரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்யத் தொடங்கினார். இந்த துன்பத்தை தன்னிடமிருந்து எப்படியாவது நீக்கிவிடவேண்டும் என்று அவர் இறைவனிடத்தில் மிக உருக்கமாக வேண்டிவந்தார்.

அடேலைத் இறைவனிடம் தொடர்ந்து எழுப்பிய வேண்டுதல் வீண்போகவில்லை. ஆம், அதே ஆண்டில் ஜெர்மன் நாட்டு அரசர் ஓட்டோ, இத்தாலியின் மீது படையெடுத்து வந்து பெரெங்கரியுசை வீழ்த்தி, அடேலைத்துக்கு விடுதலை அளித்து, அவரைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். இதற்குப் பிறகு அடேலைத்தின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போனது. அவருடைய கணவர் அவருக்கு முழு சுதந்திரம் அளித்தார். இதனால் அடேலைத் பக்தி நெறியில் மேலோங்கி வந்தார். ஆலயங்களைக் கட்டி எழுப்ப நிறைய நீதி உதவி செய்தார், ஏழை எளியவரை அன்புடன் பராமரித்து வந்தார்.

இந்நிலையில் அடேலைத்தின் கணவர் ஓட்டோ இறந்துபோனார். அவருக்குப் பின் இரண்டாம் ஓட்டோ என்பவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவருடைய காலத்தில் அவருடைய உறவுக்காரப் பெண்ணாகிய தியோப்பனோ என்பவர், அரசரோடு சேர்ந்துகொண்டு அடேலைத்தை அரண்மனையிலிருந்தே விரட்டும் தந்திர வேளையில் இறந்துபோனார். 983 ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் ஓட்டோவும் இறந்துபோனபோது, இது அவருக்கு மிகவும் வசதியானது. இரண்டாம் ஒட்டோவின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மனி நாட்டின் அரசியான தியோபனா, அடேலைத்தை அரண்மனையிலிருந்தே துரத்தி அடித்தார். இதற்காக அடேலைத் மனமுடைந்து போகவில்லை. தான் சந்தித்த பிரச்சனைகள், சவால்கள் அனைத்தையும் ஆண்டவருடைய பாதத்தில் ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து இறைவனிடத்தில் ஜெபித்துவந்தார்.

991 ஆம் ஆண்டு தியோபனா இறந்துபோனபோது, ஆட்சிப் பொறுப்பு அடேலைத்திடம் வந்தது. இதற்குப் பின்பு அரசியான அடேலைத் செய்த பணிகள் ஏராளம். மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களைத் தன்னிறைவு பெற்ற மக்களாக மாற்றினார். நிறைய ஆலயங்களையும் துறவுமடங்களையும் கட்டி எழுப்பி, மக்களுடைய ஆன்மீக வாழ்வு மலர பெரிதும் காரணமாக இருந்தார்.

இப்படி மக்கள் பணியையும் இறைப்பணியையும் தன்னுடைய இரண்டு கண்களெனப் பாவித்து, மிகச் சிறப்பான பணியைச் செய்துவந்த அடேலைத், 999 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அடேலைத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. இறைவேண்டலின் மூலம் இறைவனோடு இணைந்திருப்போம்

தூய அடேலைத்தின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் (தாழ்விலும் வாழ்விலும்) இறைவேண்டல் செய்தார். அதன்வழியாக அவர் இறைவனோடு இணைந்திருந்தார். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், இறைவேண்டல் செய்கின்றோமா? அதற்கு நம்முடைய வாழ்வில் போதுமான நேரம் ஒதுக்குகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆப்ரிக்கப் பழங்குடி மக்களிடையே வித்தியாசமான பழக்கம் ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இறைவேண்டல் செய்வதற்கு என்று காட்டுக்குள் ஓர் இடம் இருக்கும். அந்த இடத்திற்குப் போகின்ற பாதை, அங்கே அமைக்கப்படுகின்ற குடில் இவையெல்லாம் அவர்களாகவேதான் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லாரும் இறைவனிடம் வேண்டுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவார்கள். இல்லையென்றால், அவர்கள் இறைவேண்டல் செய்யும் இடத்திற்குப் போகும் பாதையில் புற்கள் வளர்ந்துவிடும், அதைப் பார்த்துவிட்டு, இறைவேண்டல் செய்யாத மனிதரிடம் “நீ இறைவனிடம் வேண்டுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லையா?... நீ இறைவேண்டல் செய்யும் இடத்திற்குப் போகும் பாதையில் புற்கள் அதிகமாக வளர்த்திருக்கின்றன” என்று கேட்டுவிடுவார்கள். இதற்காகவே அவர்கள் இறைவேண்டல் செய்ய போதுமான நேரம் ஒதுக்குவார்கள்.

ஆப்ரிக்கப் பழங்குடி மக்களிடம் இருக்கக்கூடிய இந்த வழக்கம் பாராட்டக்குரியது. நாமும் இறைவனிடம் வேண்டுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கி, அவரோடு இணைந்திருப்பதே சாலச் சிறந்த ஒரு செயலாகும்.

ஆகவே, தூய அடேலைத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, நம்முடைய வாழ்விலும் தாழ்விலும் இறைவனோடு இறைவேண்டலில் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image