St. Dominic Of Silos

டிசம்பர் 20

சிலோஸ் நகர தூய டொமினிக்

mary

சிலோஸ் நகர தூய டொமினிக்

நிகழ்வு

டொமினிக் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசா நகரைச் சேர்ந்த ஜோன் என்ற பெண்மணி, டொமினிக்கின் கல்லறைக்கு வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை இல்லை. எனவே அவர் டொமினிக்கின் கல்லறைக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு, கண்ணீர் மல்க, “எனக்கொரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும்” என்று உருக்கமாக வேண்டிச் சென்றார்.

அன்றிரவு டொமினிக், ஜோனின் கனவில் தோன்றி, “என் மகளே! கலங்காதே! அடுத்தாண்டு கட்டாயம் உனக்குகொரு ஆண் குழந்தை பிறக்கும்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அவர் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு ஜோன் நம்பிக்கையோடு இருந்தார். அவர் நம்பிய வண்ணமே அவருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. டொமினிக்கின் பரிந்துரையால் தனக்கொரு ஆண்குழந்தை பிறந்ததை எண்ணி மகிழ்ந்த ஜோன், அவருடைய நினைவாக தன்னுடைய மகனுக்கு டொமினிக் என்று பெயர் வைத்தார். இந்த டொமினிக்தான் வளர்ந்து, பின்னாளில் டொமினிக்கன் என்ற சபையை உருவாக்கியவர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

இன்று அன்னையாம் திரு அவை சிலோஸ் நகர தூய டொமினிக்கின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள நவரே என்ற இடத்தில், பத்தாம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

டொமினிக்கின் குடும்பம் மிகவும் எளிய குடும்பம். அதனால் அவருடைய பெற்றோரால் அவரை பள்ளிக்கு அனுப்பி வைக்கமுடியவில்லை. எனவே அவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடுகளை மேய்த்துவந்தார். அத்தகைய தருணங்களில் அவர் இறைவனை இயற்கையில் தரிசிக்கத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல், அது தந்த அமைதியிலும் அழகிலும் சொக்கிக் கிடந்தார். இப்படியே அவருடைய பதின்வயது நாட்கள் கடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் உருவானது. எனவே அவர் சான் மில்லன் தெலா கோகொல்லாவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, ஒருசில ஆண்டுகளிலேயே அங்கு துறவியாகி, மடாதிபதியாகவும் ஆனார்.

இந்த நேரத்தில் நவரேவை ஆண்டுவந்த மூன்றாம் கார்சியா என்ற மன்னன், டொமினிக் இருந்த துறவுமடத்திற்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கேட்டான். இதற்கு டொமினிக் சம்மதிக்காததால், அவரையும் அவரோடு இருந்த துறவிகளையும் விரட்டியடித்துவிட்டு, துறவுமடத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டான். இதனால் டொமினிக்கும் அவரோடு இருந்த துறவிகளும் சில மாதங்களுக்கு நாடோடிகளாகவே அலையவேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கண்ட லயோன்சை ஆண்டுவந்த முதலாம் பெர்டினான்ட் என்ற மன்னர், அவர்களுக்கு தன்னுடைய நாட்டில் அடைக்கலம் கொடுத்தார். இதனால் டொமினிக், சிலோவில் ஒரு துறவுமடத்தை நிறுவி, அங்கு தன்னுடைய சபைத் துறவிகளோடு சேர்ந்து, பணி செய்யத் தொடங்கினார்.

சிலோவில் டொமினிக் பல்வேறு பணிகளைச் செய்தாலும் அவர் ஆற்றிய இரண்டு பணிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று மக்களுடைய ஆன்மீக வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னொன்று, மூர் இனத்தவரிடம் அடிமைகளாக இருந்த கிறிஸ்தவர்களை பெரிய தொகை செலுத்தி மீட்டுக்கொண்டது. இந்த இரண்டு பணிகளையும் டொமினிக் மிகச் சிறப்பாகச் செய்ததால், பலருடைய நன்மதிப்பையும் பெற்றார். ஆண்டவராகிய கடவுள், டொமினிக்கிற்கு புதுமைகள் புரியும் வல்லமையையும் கொடுத்திருந்தார். இதைக் கொண்டு டொமினிக் மக்களுக்கு நல்லமுறையில் சேவை செய்துவந்தார்.

இப்படி இறைவனை இயற்கையிலும் அயலாரிலும் கண்டுகொண்டு அற்புதமான பணியைச் செய்த டொமினிக், 1073 ஆம் ஆண்டு, டிசம்பர் 20 ஆம் நாள், இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

சிலோஸ் நகர தூய டொமினிக்கின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. இயற்கையில் இறைவனைக் காண்போம்

தூய டொமினிக் சிறு வயதிலும் சரி, துறவியான பின்பும் சரி, இயற்கையில் இறைவனைக் கண்டுகொண்டு, அது தந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். தூய டொமினிக்கைப் போன்று நாம் இயற்கையில் இறைவனைக் கண்டுகொள்கின்றோமா? அதனைப் பேணிப் பாதுகாக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு உலகில் நடக்கும் பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது, நாம் இயற்கையை சரியாகப் பேணாமல், அதனை நம்முடைய சுயநலத்திற்காக அழித்ததுதான் பதிலாக வரும். என்றைக்கு நாம் இயற்கையில் இறைவன் உறைந்திருக்கின்றார் என உணர்ந்து, நாம் அதனைப் பேணிப் பாதுகாக்கின்றோமா? அன்றைக்கு நாம் இறைகையிடமிருந்தும், அதில் உறைந்திருக்கும் இறைவனிடமிருந்தும் எல்லா நலன்களையும் பெற்றுக் கொள்வோம் என்பது உறுதி.

ஒருசமயம் பள்ளி சென்ற சிறுமி ஒருத்தி வீடு திரும்புமுன் வானத்தை மேகங்கள் சூழ்ந்துவிட்டன. இதற்கடையில் ‘மழை வந்தால் மகள் பயப்படுவாளே’ என்றெண்ணி அந்த சிறுமியின் தாய், குடையுடன் பள்ளியை நோக்கி ஓடினாள். ஆனால் அதற்குள் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. அப்படியிருந்தும் அவள் வேகமாக ஓடினாள். பாதிதூரம் அவள் சென்றபோது, பள்ளிக்கூடப் பையோடு மகள் வருவது தெரிந்தது. ஆனால் அவள் மின்னல் வெட்டும்போதெல்லாம் வானத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே வருவது தாய்க்கு ஆச்சரியத்தைத் தந்தது.

வீடு வந்ததும் தாய் மகளிடத்தில், “நீ ஏன் மின்னல் வெட்டும்போதெல்லாம் வானத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாய்?” கேட்டாள். அதற்கு அந்தச் சிறுமி, “கடவுள் எவ்வளவு ஆசையாய் என்னை போட்டோ எடுக்கிறார். நான் சிரிக்கத்தானே வேண்டும் அம்மா” என்று களங்கமில்லா சிரிப்போடு சொன்னாள்.

ஆம், இயற்கையை நேசிக்கும் இதயத்தில் இயற்கையைக் கண்டு அச்சம் எப்படி வரும்? வாய்ப்பே இல்லை.

ஆகவே, தூய மின்னல் டொமினிக்கின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயற்கையில் (அயலாரில்) இறைவனைக் காண்போம். அதனைப் பேணி வளர்க்க நம்மாலான முயற்சிகளில் ஈடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image