St. Peter Canisius

டிசம்பர் 21

தூய பீட்டர் கனிசிசியுஸ்

mary

தூய பீட்டர் கனிசியுஸ்

“மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார் (லூக் 2:46)

வாழ்கை வரலாறு

இன்று நாம் தூய பீட்டர் கனிசியுஸின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றோம். இவர் 1521 ஆம் ஆண்டு, மே திங்கள் 8 ஆம் நாள், நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகேன் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை நிஜ்மெகேன் நகர மேயர். எனவே இவர் எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியாக வளர்ந்துவந்தார்.

இவர் தன்னுடைய உயர் கல்வியை கோலோக்னேவில் (Cologne) இந்த பல்கலைக்கழகத்தில் கற்றுவந்தார். இந்த சமயம்தான் மார்டின் லூதர் திரு அவையை விட்டு வெளியேறி இருந்தார், இயேசு சபை அப்போதுதான் உயதமாகி இருந்தது. பீட்டர் கனிசியுஸின் கனவெல்லாம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியராக மாறவேண்டும் என்பதாக இருந்தது. இதற்க்காக பீட்டர் கனிசியுஸ் கடுமையாக உழைத்து வந்தார்.

அப்போதுதான் இயேசு சபையில் சேர்ந்திருந்த பீட்டர் பேபர் என்பவர் பீட்டர் கனிசியுசை, தூய இஞ்ஞாசியரிடம் கூட்டி வந்தார். அவர் பீட்டர் கனிசியுசிடம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி எடுத்துச் சொன்னார். இயேசுவால் ஈர்க்கப்பட்ட பீட்டர் கனிசியுஸ், இயேசு சபையில் சேர்ந்து, 1546 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய பின்பு பீட்டர் கனிசியுஸ் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வகுப்புகள் எடுத்துக் கொண்டும் போதித்துக் கொண்டும் வந்தார். இவருடைய போதனையைக் கேட்க பிராடெஸ்டன்ட் சபையைச் சேர்ந்த சகோதர்கள் உட்பட பலர் ஆர்வமாய் வந்தார்கள்.

பீட்டர் கனிசியுஸ், அப்போதிருந்த திருத்தந்தையோடு ஓர் இறையியலாளர் என்ற முறையில் மிக நெருக்கமாக இருந்தார். திரிதெந்திய பொதுச் சங்கம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு தப்பரைக் கொள்கைகளை கடுமையாகச் சாடி, திரு அவையின் கருத்துகளை மிக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதனால் இவர் பலருடைய பாராட்டையும் பெற்றார். கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கால்நடையாகவே முப்பதாயிரம் கிலோமீட்டருக்கு மேல் நடந்துசென்று போதித்தார். சிசிலி, உரோமை, பவரியா, வியன்னா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து. போலந்து போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்று இவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தார். இவர் செய்துவந்த நற்செய்திப் பணியைப் பார்த்துவிட்டு மக்கள் இவரை ‘இரண்டாம் திருத்தூதர்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். இவர், குழந்தைகள் முதல் பெரியவர் வரை மறைகல்வி கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக மறைக்கல்வி தொடர்பாக நிறையப் புத்தகங்களை எழுதி, அவற்றை மக்களுடைய பயன்பாட்டிற்குக் கொடுத்தார்.

பீட்டர் கனிசியுஸ் மருத்தவமனையில் இருந்த நோயாளிகளையும், சிறையில் இருந்த கைதிகளையும் சந்தித்து, அவர்களிடத்தில் ஆறுதல் வார்த்தைகளை மொழிந்தார். இத்தனைக்கும் அவருடைய உடல் மிகப் பலவீனமாக இருந்தாலும் இதுபோன்ற பணிகளை அவர் தொடர்ந்து செய்துவந்தார்.

இப்படி இறைவனுடைய கைகளில் ஒரு வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட்ட பீட்டர் கனிசியுஸ், 1597 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1925 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பீட்டர் கனிசியுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நினைத்த வாழ்க்கை கிடைக்காதபோது, கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாய் எடுத்துக்கொண்டு சாதிப்போம்

தூய பீட்டர் கனிசியுஸின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்து போகின்றது. பீட்டர் கனிசியுசிற்கு பெரிய பேராசிரியராக மாறவேண்டும் என்பது ஆசை, இலட்சியம் எல்லாம். ஆனால், அது நடக்காமல், வேறொன்று அதாவது, அவர் நற்செய்திப் பணியாளராக மாறியபோது வருந்தவில்லை. மாறாக அந்தப் பணியை அவர் செவ்வனே செய்து, ‘இரண்டாம் திருத்தூதர்’ என அழைக்கப்படும் பேறுபெற்றார். நாமும் கூட, நாம் நினைத்தது நிறைவேறவில்லை என்பதற்காக வருந்திக் கொண்டிருக்காமல், கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதில் சாதித்துக் காட்டுவதே சாலச் சிறந்தது.

ஒரு மாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரப்போனார். அங்கிருந்த எழுத்தர் மாணவரிடம், “என்ன பிரிவு வேண்டும்?” என்று கேட்டார். மாணவரோ, “தியாலாஜி” என்று சொல்ல, எழுத்தருடைய காதில் ‘ஜியாலஜி’ என்று விழுந்தது. உடனே எழுத்தர் அவரை ஜியாலஜி பிரிவில் இணைத்துவிட்டு அவரிடத்தில் கையொப்பம் கேட்டார். மாணவரும்கூட அதைக் கவனிக்காமல் கையொப்பமிட்டுத் தந்துவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. மாற்றிக்கொள்ளத் தயங்கினார். ஜியாலஜி பிரிவிலேயே சேர்ந்து படித்தார். கவனக் குறைவால் விருப்பப்பட்ட துறை கிடைக்காத போது கிடைத்த துறையையே விரும்பித் தொடங்கினார். கடைசியில் அவர் படித்து தங்கப் பதக்கமும் பெற்றார்.

இது ஒரு சிறிய நிகழ்வுதான். ஆனாலும் நினைத்த வாழ்க்கை அமையாத போது, அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினால், சாதனைகள் பல செய்யலாம். இதற்கு இந்த நிகழ்வும் தூய பீட்டர் கனிசியுஸின் வாழ்வும் சான்றுகள்

ஆகவே, தூய பீட்டர் கனிசியுஸின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை ஆர்வமாய் மக்களுக்கு அறிவிப்போம். கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image