St. John Of Kanti St. Margaret D-Youbille St. Thorlac

டிசம்பர் 23

கண்டி நகர தூய ஜான்

mary

கண்டி நகர தூய ஜான்

நிகழ்வு

செல்வந்தர் ஒருவர் விருந்து கொடுத்தார். அந்த விருந்திற்கு ஜானும் அழைக்கப்பட்டிருந்தார். எனவே ஜான், விருந்தில் கலந்துகொள்வதற்காக ஒரு சாதாரண அங்கியில் கிளம்பிப் போனார். அப்போது செல்வந்தரின் வீட்டு வாசலில் இருந்த காவலாளியோ அவருடைய அங்கியையும் வெளித் தோற்றத்தையும் பார்த்துவிட்டு, அவரை விருந்து நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. ஜானும் அதற்கு எதுவும் சொல்லாமல், தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிவந்து, புது அங்கியை எடுத்துப் போட்டுக்கொண்டு விருந்துக்குப் போனார்.

இந்த முறை வாசலில் நின்றுகொண்டிருந்த காவலாளி அவரை இன்முகத்தோடு வரவேற்று, விருந்து நடைபெறும் இடத்திற்குள் அனுப்பி வைத்தார். ஜான் உள்ளே சென்றதும் அவருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இடையில் ஒரு பணியாளர் ஜானுடைய அங்கியில் தெரியாமல் உணவைக் கொட்டிவிட்டார். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார். அதற்கு ஜான் அவரிடம், “அங்கியில் உணவைக் கொட்டியதற்காக வருந்தவேண்டாம், இந்த அங்கி மட்டும் இல்லையென்றால், நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். ஏனெனில் என்னைவிட்ட இந்த புது அங்கிக்குத்தான் மதிப்பு இருக்கின்றது” என்றார். விருந்துக்கு அழைத்த செல்வந்தரும் விருந்துக்கு வந்திருந்தவர்களும் இதைக் கேட்டு உறைந்து போய் நின்றார்கள்.

மனிதர்களை அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடும்போக்கு மறைவது எந்நாளோ?

வாழ்க்கை வரலாறு

அன்னையாம் திரு அவை இன்று கண்டி நகர தூய ஜானின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் 1390 ஆம் ஆண்டு, ஜூன் 23 ஆம் நாள், போலந்தில் உள்ள கண்டி என்ற ஒரு சாதாரண ஊரில் பிறந்தார்.

சிறுவயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய ஜான், வளர்ந்து பெரியவனாகியபோது, கிராகோவ் (Krakow) என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, முதல் மாணவனாய் தேர்ச்சிபெற்றார். பிறகு குருத்துவ வாழ்விற்கு தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு குருவாக மாறினார். ஜானிடமிருந்த ஞானத்தைக் கண்டு அவருடைய ஆயர் அவரை கிராகோவ் பல்கலைக்கழகத்தில் விவிலியப் பேராசிரியராகப் பணியாற்ற நியமித்தார். ஜானும் பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக முறையில் பணியாற்றிவந்தார். இதனால் அவருடைய பேரும் புகழும் எங்கும் பரவியது.

இதற்கிடையில் அவருடைய வளர்ச்சியைப் பிடிக்காத ஒருசிலர் அவருடைய பெயருக்கு பங்கம் விளைவித்து, அவரை ஓல்குஸ் என்ற ஒரு சாதாரண கிராமப்புறப் பங்கிற்கு போகுமாறு செய்தனர். இதற்காக அவர் மிகவும் வேதனை அடைந்தாலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களைப் பழிவாங்க நினைக்காமல், அவர்களை அவர் மன்னித்து ஏற்றார். மேலும் புதிய பணித்தளத்தில் எப்படி எல்லாம் நல்லவிதமாய் பணிசெய்யலாம் என்று பல்வேறு கனவுகளோடு ஒல்குஸ் என்ற ஊருக்குச் சென்றார்.

ஆனால் ஜான் அந்த ஊருக்குச் சென்றபிறகுதான் தெரிந்தது, அங்கிருந்த யாரும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று. இதை நினைத்து அவர் மனமுடைந்து போகாமல், தன்னால் இயன்ற மட்டும் பணிசெய்வோம் என்று ஆன்மீகப் பணிகளையும் சமூக பணிகளையும் ஒருசேர சேர்த்துச் செய்தார். இதனால் அவரைப் பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்த அந்த ஊர் மக்கள், அவரைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். இதற்குப் பின்பு ஜான் அந்த ஊர் மக்களிடத்தில் நல்லவிதமாய் பணிசெய்தார். ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் ஜான் ஒல்குஸ் என்ற அந்தப் பங்கில் நல்லவிதமாய் பணியாற்றுவதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆயர், அவரை முன்பு அவர் பேராசியராகப் பணியாற்றிய கிராகோவ் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராக நியமித்தார்.

தன்னுடைய வாழ்வின் கஷ்ட காலம் அனைத்தும் முடிந்துவிட்டு என நினைத்துக்கொண்டு, ஜான் கிராகோவ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, பணியாற்றிவிட்டு, அங்கே இறையடி சேர்ந்தார். இவர் இறந்த ஆண்டு 1473. இவருக்கு 1767 ஆம் ஆண்டு, ஜூலை 16 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

கண்டி நகர தூய ஜானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. வெறுப்புக்குப் பதிலாக அன்பை விதைப்போம்

தூய ஜான், கிராகோவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அவருடைய பெயரைக் கெடுத்து, அவரைத் ‘தண்ணியில்லாத காட்டிற்கு’ அனுப்பி வைத்தவர்களை வெறுத்து ஒதுக்கிவிடவில்லை. மாறாக அவர்களை அவர் மன்னித்து அன்போடு ஏற்றுக்கொண்டார். அவரைப் போன்று நாம் நம்மீது வெறுப்பை உமிழ்பவர்கள்மீது அன்பினை, பாசத்தைப் பொழிகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு சமயம் உளவியலாளர் ஒருவர், கல்லூரி மாணவர்களிடம் முப்பது நொடிகள் கொடுத்து, இந்த முப்பது நொடிகளுக்குள், நீங்கள் உங்களை வெறுப்பவர்கள் மற்றும் உங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய பெயர்களை எல்லாம் எழுதுங்கள்” என்றார். உடனே மாணவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய பெயர்களை வேகவேகமாக எழுதினார்கள். ஒருசிலர் ஓரிரு பெயர்களையும், இன்னும் ஒருசிலர் ஐந்தாறு பெயர்களையும், மற்றும் சிலர் பத்துப் பதினைந்து பெயர்களையும் எழுதினார்கள். அவர்கள் இதனை எழுதி முடித்தபின்பு, உளவியலாளர் அவர்களைப் பார்த்துச் சொன்னார், “யாராரெல்லாம் அதிகமான பெயர்களை வெறுப்பவர்கள், பிடிக்காதவர்கள் பட்டியலில் எழுதியிருக்கிறீர்களோ, அவர்களெல்லாம் மற்றவர்களால் அதிகமான வெறுக்கப்படுகிறவர்கள்”. இதைக் கேட்டு அந்த மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி நின்றார்கள்.

ஆம், இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. இதில் நாம் அன்பு செலுத்தினால் அன்பு அன்பு செலுத்தப்படுவோம். வெறுப்பினை உமிழ்ந்தால், நம்மீது வெறுப்பு உமிழப்படும்.

ஆகவே, இந்த உண்மையை உணர்ந்தவர்களாய், தூய ஜானைப் போன்று நம்மை வெறுப்பவர்களை அன்பும் செய்வோம், அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைதிரு. மரிய அந்தோனிராஜ்,
பாளையங்கோட்டை

 

image