St. Thomas Becket

டிசம்பர் 29

தூய தாமஸ் பெக்கட்

mary

தூய தாமஸ் பெக்கட்

“சீடர் குருவைவிடப் பெரியவர் அல்ல, பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள், வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?” (மத் 10: 24,25)

வாழ்க்கை வரலாறு

இன்று அன்னையாம் திரு அவை தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இவர் 1118 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள், இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை பாரிஸில் படித்து வந்தார். அப்போது இவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பராமரித்துக் கொள்ள, இவர் தன் சொந்த ஊருக்குத் திரும்பிவந்தார்.

ஒருசில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, தாமஸ் பெக்கட், காண்டர்பேரியில் பேயராக இருந்த தியோபோல்டிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். பேராயர் தியோபோல்ட் தாமஸ் பெக்கட்டிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு 1154 ஆம் ஆண்டு, அவரை முதன்மைத் திருத்தொண்டராக நியமித்தார். இப்படியே தாமஸ் பெக்கட்டின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டு அரசரும் தாமஸ் பெக்கட்டின் நெருங்கிய நண்பருமான இரண்டாம் ஹென்றி என்பவன், அவரை துணைவேந்தராகவும், பேராயர் தியோபோல்டின் மறைவிற்குப் பிறகு காண்டர்பேரியின் பேராயராகவும் நியமித்தான். அவன் ஏன் இப்படியெல்லாம் செயல்படுகிறான் என்பதைக் குறிப்பால் அறிந்த தாமஸ் பெக்கட், துணைவேந்தர் பதவியைத் துறந்து, காண்டர்பேரியின் பேராயர் பொறுப்பினை மட்டும் வைத்துக்கொண்டு மக்களுக்கு சிறப்பாக பணிகளைச் செய்து வந்தார்.

தாமஸ் பெக்கட் துணை வேந்தர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு தன்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டார் என நினைத்த மன்னன் இரண்டாம் ஹென்றி, 1164 ஆம் ஆண்டு Constitutions of Clarendon என்ற சட்டத்தை இயற்றி, ஆயர்கள், குருக்கள் தனக்குக் கீழ் பணிசெய்யவேண்டும், திரு அவையில் தன்னுடைய தலையீடு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தான். இதனை தாமஸ் பெக்கட் மிகக் கடுமையாக எதிர்த்து, ‘திரு அவைக்கு திருத்தந்தைதான் தலைவரே ஒழிய, அரசர் அல்ல. எனவே அரசர் எந்தவிதத்திலும் திரு அவையின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது’ என்று தன்னுடைய குரலைப் பதிவு செய்தார். இதனால் வெகுண்டெழுந்த மன்னன் இரண்டாம் ஹென்றி, தாமஸ் பெக்கட்டை எப்படியாவது வீழ்த்தலாம் என்று திட்டம் தீட்டினான். அவனுடைய திட்டத்தை உணர்ந்து தாமஸ் பெக்கட், பிரான்ஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு அரசராக இருந்த ஏழாம் லூயிஸ் மன்னர் அவரை இன்முகத்தோடு வரவேற்று அவருக்கு அடைக்கலம் தந்தார்.

1164 ஆம் ஆண்டிலிருந்து 1170 ஆம் வரை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள், தாமஸ் பெக்கட் பிரான்ஸ் நாட்டில் இருந்து, அப்போது இருந்த திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் வழியாக இங்கிலாந்து நாட்டில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட கடுமையாக உழைத்தார். 1170 ஆம் ஆண்டு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டபோது தாமஸ் பெக்கட் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று, காண்டர்பேரியில் பேராயராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் ஒருசில ஆயர்கள் திருத்தந்தைக்குக் கீழ்படியாமல், அரசருக்குக் கீழ்ப்படிந்து வந்ததை தாமஸ் பெக்கட் கண்டித்ததால், மன்னன் இரண்டாம் ஹென்றி, “இவர் (தாமஸ் பெக்கட்) நமக்கு மிகவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவரைக் கொன்றுவிடுங்கள்” என்று தன்னுடைய படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அதனடிப்படையில் படைவீரர்கள் தாமஸ் பெக்கட்டை 1170 ஆம் ஆண்டு, டிசம்பர் 29 ஆம் நாள் கொன்றுபோட்டார்கள். இவருக்கு 1174 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 12 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஆண்டவருக்கு மட்டும் பணிந்து நடப்போம்!

தூய தாமஸ் பெக்கட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் மன்னன் இரண்டாம் ஹென்றிக்குப் பணிந்து நடக்காமல், திருத்தந்தைக்கும் அவருக்குத் தலைவராக இருக்கின்ற ஆண்டவருக்கு மட்டுமே பணிந்து நடந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவருக்கு மட்டுமே பணிந்து நடக்கின்றோமா? அல்லது மனசாட்சியை அடகுவைத்துவிட்டு, நம்முடைய சொகுசான வாழ்க்கைக்காக யாராருக்கெல்லாமோ பணிந்து நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

16 ஆம் நூற்றாண்டில் திரு அவையில் போராட்டம் வெடித்தபோது, இங்கிலாந்தை ஆண்டுவந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னன், “இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற எல்லாக் குருக்களும் ஆயர்களும் எனக்குத்தான் கீழ்ப்படியவேண்டும். இதை மீறி யாராவது திருத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் தமேஸ் நதியில் தூக்கி வீசப்படுவார்கள்” என்று உத்தரவிட்டான். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறையப் குருக்கள், ஆயர்கள், “நாங்கள் திருத்தந்தைக்குத்தான் கீழ்ப்படிந்து நடப்போம் என்று உறுதியாக இருந்தார்கள். இதனால் அவர்கள் அனைவரும் மன்னன் முன்பாக இழுத்துவரப்பட்டார்கள்.

மன்னன் அவர்களை விசாரித்தான். அப்போது அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “நாங்கள் ‘கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கும் சீசருக்கு உரியதை சீசருக்கும் கொடுக்கச் சொன்ன இயேசுவின் வழி வந்தவர்கள். அதனால் நாங்கள் திருத்தந்தைக்குத்தான் கீழ்ப்படிவோம். மீறி நீர் எங்களை தமேஸ் நதியில் தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை. என்றைக்கோ ஒருநாள் சாகப் போகிறோம். அது இன்றைக்கே, இறைவனுக்காக இறந்தால் என்ன?” என்றார்கள். இதைக் கேட்டு அரசன் மிரண்டு போனான்.

நம்முடைய வாழ்விற்கான ஆதாரம் இறைவன் மட்டும்தானே தவிர, வேறு யாருமல்ல. ஆகவே, தூய தாமஸ் பெக்கட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image