கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி - 2015
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே!
முன்னுரை:
இன்று எல்லோரும் கிறிஸ்மஸ் பெருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருப்பீர்கள். மிக மகிழ்ச்சி. இயேசு அதைத்தானே விரும்பினார், இன்றும் விரும்புகிறார். அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்க, இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள், கேளுங்கள், கூடவே இணைந்து பாடுங்கள். மனதை எழுப்பி செபியுங்கள். குடும்பமாக உறவாக இணைந்து செபியுங்கள். உங்கள் மகிழ்ச்சி அதிகமாகும். எப்போதும் இந்த தெய்வீக மகிழ்ச்சி உங்களோடும் உங்கள் உறவோடும் குடும்பத்தோடும் நின்று நிலைத்து நிறைவான மகிழ்ச்சியைத் தரும்.
உங்கள் வீட்டில் தயாரித்துள்ள குடிலின் முன், கிறிஸ்மஸ் மரத்தின் முன் குடும்பமாக அமர்ந்து கொள்ளுங்கள். நிகழ்ச்சியை இப்பொழுது இயக்குங்கள். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதியை, முதல் வாசகம் அம்மாவுக்கு, இரண்டாம் வாசகம் அப்பாவுக்கு, மன்றாட்டுகள் குழந்தைகளுக்கு என பகிர்ந்தளித்து இந்த வழிபாடு உங்கள் குடும்பம் ஆசீர்பெறும் ஒரு வாய்ப்பை உருவாக்குங்கள். பங்கெடுப்போமா!
பாடல்: நமக்கோரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
செபம்:
எங்களுடைய மகிழ்ச்சியான வாழ்வை விரும்பும் எங்கள் தந்தையே, இறைவா! உலகமே மகிழும் இந்த புனித நாளில், எங்கள் குடும்பம் முழுவதும் நீர் பிறந்த குடிலின் அருகில், அழகான இந்த மரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறோம். செழிப்பான மரத்தால் வாழ்விழந்த மனிதனுக்கு, பட்ட மரத்தால் நீர் நிறை வாழ்வை வாக்களித்தீர்.வாக்கு மாறா தெய்வமே, பட்ட மரம் போன்ற எங்கள் வாழ்வும், உம் வார்த்தையால் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் பசுமை மாறாது புதுப்புது தளிர்களோடு இருக்கும் என்பதை நம்புகிறோம். இக் கிறிஸ்மஸ் மரத்தை அழகு செய்யும் மின்னும் வண்ண விளக்குகள்போல, எங்கள் வாழ்வும் என்றும் சுடர்விட்டு ஒளிரச்செய்வீர், எங்கள் வாழ்வின் இருள் அனைத்தையும் நீரே அகற்றுவீர் என்பதையும் உணறுகிறோம். பரிசுகளைத் தாங்கி நிற்கும் இக் கிறிஸ்மஸ் மரம்போல எங்கள் வாழ்வும் பூத்துக் குலுங்கிடவும், எங்களை நாடி வரும் அனைவருக்கும் இம்மரம்போல புகலிடமும் புதுவாழ்வும் கொடுப்போராய் நாங்கள் வாழச் செய்யும். புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, மாட்டுத்தொழுவத்தில் உம் ஒரே மகனை பிறக்கச் செய்தீரே, எங்கள் வாழ்விலும் நாங்கள் நலிவுறும் நேரங்களில் உம் வானதூதர்களின் வாழ்த்தொலி எங்கள் இதயங்களின்இதயத் துடிப்பாய் இருப்பதாக. கண்ணைக்கட்டும் கடும் இருள் எங்களைச் சூழ்ந்தாலும் இன்று சூழ்ந்து சுடர்ந்த சுடரொளி எங்களுக்கு ஒளி வெள்ளமாக வழிநடத்தும் என நம்புகிறோம்.
வாசகம்: எசாயா 62:1-12
சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4 "கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார். எருசலேமே, உன் மதில்கள்மேல்;;; காவலரை நிறுத்தியுள்ளேன்; இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்; ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர். அவர் எருசலேமை நிலைநாட்டி, பூவுலகில் அது புகழ் பெறும்வரை அவரை ஓய்வெடுக்க விடாதீர். 8 ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது; உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள். அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர். செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்; மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்; அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்; கற்களை அகற்றுங்கள்; மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள். உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது; "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது. " 'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.
பாடல்: மன்னவன் இயேசு பூமியில் வந்தார் ஆனந்த இராகம் பாடிடுவோம்
வாசகம் லூக்கா 2:1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது.
செய்தி:
என் அன்புக்குரிய தமிழ் இனமே, அன்புச் சகோதர சகோதரிகளே! உலகமே கொண்டாடும் இந்த பெரு விழா நாளில் உங்களையும், உங்கள் அன்பு மனைவி, அருமைக் குழந்தைகள் அனைவரையும், ஏன் பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் அனைவரையும் "என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்"(பிலிப்பியர் 4 : 19) என உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துகிறேன். செபிக்கிறேன்.
இயேசுவின் பிறப்பு, அவர் பிறந்த நாளில், பிறந்த நேரத்தில் ஒவ்வொரு தனி மனிதனிலும் சமுதாயத்திலும் இயற்கையிலும் படைப்புக்கள் அனைத்திலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பெரும் எழுச்சியைக் கொடுத்தது. கிறிஸ்மஸ் விழா கொண்டாடும் உங்கள் உள்ளங்களிலும் இயேசுவின் பிறப்பில் புதைந்துள்ள சில உண்மைகள், பெரிதும் சிறிதுமாக சில பல தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் வாழ்வுக்கு மிகப் பெரிய எழுச்சியைக் கொடுக்கும். உங்களை உயர்த்தும். உங்களை மகிழ்விக்கும். உங்களை பெருமைப்படுத்தும்.
முதலாவதாக, முகவரி இல்லாதவர்கள், அடையாளம் தெரியாதவர்கள், அறிகுறியற்றவைகள் அனைவராலும் போற்றப்படவும் பெருமைப்படவும் புகழ்ந்து பாராட்டப்படவும் தகுதி உள்ளவராயினர். அன்னை மரியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவரே சொல்வதுபோல, "தாழ்நிலை நின்றவள்". ஆனால் இயேசுவின் பிறப்பால், "பெண்களுள் பேருடையாள்" என்னும் பெருமை பெற்றாள். பெத்லகேம் சிற்றூர். யாருக்குத் தெரியும். இன்று எல்லோருக்கும் தெறியும். ஆடு மாடு மேய்ப்பவர்கள். இவர்களை யார் முன்னிலைப்படுத்தி பேசுவர். இவர்களைப் போன்ற பலரும் இன்று சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக, இருளும் இருளின் ஆதிக்கும் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில், காணக் கண் கூசும் கவர்ச்சிகள் பிரபலமாகியுள்ள இந்த இரவுகளில், இறை உணர்வையும் உறவையும் கொன்று, பகலையும் இரவாக்கும் நிகழ்ச்சிகள் நிறைந்த நவீன இரவுகளிலும் ஆங்காங்கே அவ்வப்போது தெய்வீக ஒளி சூழ்ந்து சுடர்ந்து இருளையும் இருளின் பின் விளைவுகளான துன்பத்தையும் நோயையும், கவலையையும் கண்ணீரையும் துடைத்து வருவதைக் கண்கூடாக நாம் பார்க்கின்றோம். அனுபவிக்கின்றோம் அல்லவா!
மூன்றாவதாக, இயேசு பிறப்பதற்குள்தான் எத்தனை முறை "அஞ்சாதீர்கள்" யார்யாருக்கெல்லாமோ சொல்லியிருக்கிறார். மரியாவுக்குச் சொல்லியிருக்கிறார். "இதோ ஆண்டவரின் அடிமை" என்று துணிவோடு செயல்படுகிறார். சூசையிடம் சொல்கிறார். சற்று தயங்கியபோதும், நம்பிக்கை எழுச்சி பெற்று ஏற்றுகொண்டு ஒத்துழைக்கிறார். "அஞ்சாதீர்கள்" என்று இடையர்களுக்கும் சொல்லப்படுகிறது. அந்த பாமர மக்களும் பணிவுடன் காலம் தாழ்த்தாமல் புறப்படுகிறார்.
இத்தனையும் பார்த்தும் கேட்டும் பயம் நமக்கு குறைந்துள்ளதா? இல்லையே. அச்சம் ஆணிவேறோடு அகன்றுவிட்டதா? இல்லையே. கடவுள் தாழ்நிலையில் உள்ள என்னை உயர்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறா? இல்லையே! என் வாழ்விலும் என்னைச் சுற்றிலும் உள்ள இருள் அகலும், என் வாழ்வு பிரகாசிக்கும் என்ற உறுதி இருக்கிறதா? இல்லையே!
இந்த நாட்களில் நம்மைச் சுற்றி நிலவுகிள்ற பிரச்சனைகளைப் பாருங்கள். அணை பிரச்சனை. அணு பிரச்சனை. பெரியார்அணை மக்களுக்குப் பாதுகாப்பில்லை. ஆபத்தானது. பாதுபாப்பற்ற அணை, உடைக்கப்பட வேண்டும்.இது அணையைச் சுற்றி உள்ள மக்களின் குரல். அணு உலை மக்களுக்குப் பாதுகாப்பில்லை.ஆபத்தானது. பாதுகாப்பற்ற கூடங்குளம் அணுஉலை உடைக்கப்பட வேண்டும். இது அணுஉலையைச் சுற்றி உள்ள மக்களின் குரல்.
உடைக்கப்பட வேண்டியது உலையும் அல்ல, அணையும் அல்ல. அந்த மக்களின் தேவையற்ற பயம். அநாவசிமான அச்சம். சுய நலங்களும் குருகிய கண்ணேட்டமும் அறிவுக் கண்களை குருடாக்கிவிட்டது. ஜாதி, மதம், இனம்,தன் குடும்பம், தன்தொழில் என்னும் குருகிய வட்டத்தில் கூனி குருகிய அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும், தலைவர்களும் தியாகம் என்னும் அணையையும் உலையையும் தங்களுக்குள் கட்டிக்கொள்ள வேண்டும்.
அணுவைக் கொடுத்தவன் இறைவன். அணுவுக்குள் ஆற்றலை வைத்தவனும் இறைவன், அதைப் பயன்படுத்த அறிவையும் கொடுத்துள்ளார்.ஆற்றலுள்ள சக்தியாக மாற்றுகிறான் அறிவுள்ள மனிதன். தண்ணீரைத் தந்தவன் இறைவன். அணைகட்டி அதை ஆற்றலாக்கியவன் அறிவுள்ள மனிதன்.
மூன்று ஞானிகள் பயந்து பதுங்கியிருந்தால் ஆண்டவனைப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆண்டவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்தினார்கள். அச்சத்தை அகற்றினார்கள். அமைதியோடு திரும்பினார்கள். அறிந்தும், தெழிவாகத் தெறிந்தும், பெற்ற அறிவை முறையாகப் பயன்படுத்தாத ஏரோது மன்னன் கலங்கினான்.அவனோடு எருசலேம் நகர் முழுவதும் கலங்கியது. அவன்அழிந்தான். இது வரலாறு.
எங்கோ அணை உடைந்தது, எங்கோ எப்போதோ அணு உலை வெடித்தது என்பது புள்ளி விவரமே அல்லாது முற்றுப்புள்ளி அல்ல. முறையாக, முன்மதியுடன் பயன்படுத்துவதுதான் அறிவுடைமை. மற்றவை எல்லாம் அச்சத்தின் அவலநிலை. சுய நலத்தின் விஷ்வ ரூபம். குருகிய கண்ணேட்டத்தின் கோர முகம். ஆண்டவனிலும் அவன் கொடுத்த அறிவிலும் நம்பிக்கையற்ற நிலை. ஆபத்து, விபத்து, முடியாது, கஷ்டம் என்பதெல்லாம் சோம்பேரியின்வார்த்தை. முன்னேற முட்டுக்கட்டை போடுவோரின் முரண்டு வார்த்தைகள். சாதிக்க இயலாதவர்களின் சவலைச் சொல். சுயநலவாதிகளின் கபட நாடகம். உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையானோரின் முனகல்.
அன்புச் சகோதரனே சகோதரியே, உன் அச்சம் அகல வேண்டுமா!, உன்னைச் சூழ்ந்திருக்கும் இருள் அகல வேண்டுமா!, உன் வாழ்க்கை தரம் தங்கம்போல உயர வேண்டுமா!, நீ முதன்மை பெற வேண்டுமா!அறிவைப் பயன்படுத்து. முகவரி இல்லாத நீயும் உன் சமுதாயமும் வாழ வேண்டுமா, தெய்வம் தந்த அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்து. ஆண்டவனின் குரலைக் கேட்ப்போம். அறிவைப் பயன்படுத்துவோம். அருட்கொடைகளை அனுபவிப்போம். வுhழ்வில் உயர்வோம். வாழ்த்துக்கள்.
மன்றாட்டு:
நம் தந்தை இறைவனின் அன்பும் பரிசும் எப்பொழுதும் நமக்குத் தேவை. தன் ஒரே மகனையே நமக்குப் பரிசாக அளித்து நம்மை மகிழ்விக்கும் இறைவன், இன்று நாம் நம்பி;க்கையோடு எதைக் கேட்டாலும் நமக்குத் தருவார். ஆகவே குடும்பமாக நமக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் நம்பிக்ககையோடு செபிப்போம்.
1. எங்கள் தந்தையே இறைவா! இன்று விண்ணெளியால் பெத்தலெகம் நகர் இருள் நீங்கி ஒளியால் நிறைந்ததுபோல, எங்கள் நாடும், நகரமும் வீதியும், வீடும் இருளும் இருளின் விழைவுகளும் விலகி, ஒளியின் மக்களாக நாங்கள்வாழ வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் தந்தையே இறைவா! எங்களுக்கும், இந்த உலக மக்களுக்கும் எத்தனையோ விதவிமான கொடைகளை ஒவ்வொரு நாளும் தந்துகொண்டே இருக்கிறீர். உம் மகனையே கொடையாக தந்த இந்த நாளில், நீர்தந்து நாங்கள் அனுபவிக்கும் அக்கொடைகளை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளும் பக்குவம் பெற அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3 வானதூதர்களின் சமாதானம், அமைதி ததும்பும் பாடலைக்கேட்கும் இந்நாளில், அமைதியும் நிம்மதியும் தேடும் மக்கள் அதைப் பெற்று மகிழ வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. குழந்தை இயேசுவைப் பெற்றெடுத்த மகிழ்வில் இருக்கும் அன்னை மரியாவைப்போல, எல்லா தாய்மார்களும் குடும்பத்தை மகிழ்விக்கும் சவாலைச் சந்திக்க மனவலிமையும் உடல்பலமும் எளிய உள்ளமும் அருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. மனம் நொந்து வேதனையிலும் நல்லது செய்கிறோம் என்ற மன நிறைவோடு இருக்கும் புனித சூசையப்பரைப் பார்க்கும் இந்நாளில், வேதனையோடும் விரக்தியோடும் குடும்ப பாரங்களைச் சுமக்கும் எங்கள் குடும்பங்களின் தலைவர் அனைவரும் நீதியோடும் பொறுமையோடும் பொறுப்போடும் தம் உழைப்பாலும் உறுதுணையாலும் குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கவேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகிறோம்.
6. குழந்தையாக எம் நடுவே வந்து பிறந்த தெய்வமே! எங்கள் குழந்தைகளும் உலகின் எல்லா குழந்தைகளும் வாழ்வின் நெருக்கடிகளில் நசுங்கிவிடாமல் உடலிலும் உள்ளத்திலும் அறிவிலும் ஆன்மீகத்திலும் ஆளுமை கொண்டவர்களாய் வளர வாழ உம்மை மன்றாடுகிறோம்.
7. வீடின்றி, பாதுகாப்பின்றி பிறந்த இயேசுவே, அகதியாக வாழ்வோரும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் வாழும் அனைவரும் உம்முடைய சிறப்பான அரவணைப்பை இக்காலத்தில் பெறவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
8. இயேசுவே! உம் பிறப்பு இரவைப் பகலாக்கியதுபோல, வெறுமையை நிறைவாக்கியதுபோல, ஓரங்கட்டப்பட்டோரை முன்னலைப்படுத்தியதுபோல எங்களிடையே முகவரி இழந்தோரை முதன்மைப்படுத்தி மனநிறைவோடு வாழ அருள்தர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
செபம்: தந்தையே எம் இறைவா
உம் திருமகனின்பிறப்பைக் கொண்டாடும் நாங்களும் உலக மக்கள் அனைவரும், வானதூதரின் அமைதி செய்தியின் தூதர்களாக பணிசெய்யவும், ஆயர்கள்பெற்ற மகிச்சி செய்தியை பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாய் வாழவும், நெடும் பயணம் மேற்கொண்டு தெய்வ குழந்தையைக் கண்டு மகிழ்ந்த ஆனந்தத்தைத் தேடிச் செல்வோராகவும் வாழ அருள் பொழிவீராக.
புகை, வெறுப்பு, வன்முறை, தீவிரவாதம் இவற்றை ஆழப் புதைத்து, அன்பின் கதவுகளை அனைவருக்கும் அகலத் திறக்க ஆர்வம்காட்டிட வலிமை தாரும்.அன்பு வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, செயலிலும் குறிப்பாக ஏழை எளியோருக்குச் செய்யும் அன்புச் செயலில் வெளிப்படுத்த முன்வருவோமாக.
எங்கள் குடும்பத்தையும் எல்லா மக்களையும் உம் விண்ணகக் கொடைகளால் நிறைவாக ஆசீர்வதித்து, அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிக்கல்கள், நோய்கள், குடும்ப பாரங்கள் அனைத்திலுருந்தும் விடுதலை பெற்று உம் தெய்வீக மகிழ்விலும் அமைதியிலும் வாழச் செய்யும்.
ஆசீர்:
அன்னை மரியின் அன்புக் கரத்தின் அரவணைப்பில் ஆனந்தமாய் வாழ்வீர்களாக
விண்மீன்களின் வண்ண ஒளியலும் வானகதூதர்களின் மனங்குளிரும் ஆனந்த கீதத்திலும் ஆயர்களின் ஆனந்த அனுபவமும் உங்களோடு என்றும் இருப்பதாக.
தந்தை இறைவனின் ஆசிரும், பாலன் இயேசுவின் புன்னகையும், தூய ஆவியின் வல்லமையும் காலம் முழுவதும் உங்களோடு இருப்பதாக. ஆசீர்.
- நன்றி: அருட்திரு ஜோசப் லியோன்
a Christmas
Wish :
Love, Peace and Joy
came down on earth
on Christmas day
to make you
happy and cheerful.-
Wish you lots of love,
joy and happiness -
May God shower
His choicest blessings
on you and your family
on this Christmas! - MERRY CHRISTMAS
HAPPY NEW YEAR
Bibleintamil.com