திருச்சபை வரலாறு

அதிகாரம் 2
இடைக் காலத் திருச்சபை
(கி.பி. 700-1517)

பிளவும், வளர்ச்சியும்

14-15ஆம் நூற்றாண்டுகள்;
திருத்தந்தையர்களின் ‘பாபிலோனிய அடிமை நிலை'

13ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 8ஆம் போனிபாஸ் (1294-1303) திருச்சபையின் தலைமைப் பீட அதிகாரத்தை வலுப்படுத்தினார் என்று மேலே கண்டோம். அவருக்குப் பிறகு சுமார் 70 ஆண்டுகள் (1305-1376) திருத்தந்தையர்கள் தங்கள் திருப்பீடமாகிய உரோமை நகரை விட்டு பிரான்ஸ் நாட்டில் அவிஞ்ஞோன் நகரில் 'நாடு கடத்தப்பட்ட நிலையில்' இருந்தனர். இதற்குக் காரணம் என்ன?

கர்த்தினால்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்த்தினால்கள் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்ததால் பிரஞ்சு நாட்டவரே திருத்தந்தையர் ஆயினர். 5ஆம் கிளமென்ட் (1305-1314) உரோமைக்குச் சென்று பதவி ஏற்பதற்குப் பதில் பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் பதவியேற்றார். பிறகு அதே நாட்டில் அவிஞ்ஞோன் நகரில் குடியேறி விட்டார்.

13ஆம் நூற்றாண்டு வரையிலும் உரோமை நகர் திருச்சபையின் தலைமைப் பீடமாக இருந்து வந்தது. பேதுருவின் வாரிசான திருத்தந்தை உரோமைப் பீடத்தின் தலைமையைக் கொண்டிருந்ததால் திருச்சபை அனைத்துக்கும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். ஆனால் இப்போதோ பிரான்ஸ் நாட்டு மன்னரின் கைப்பாவையாகத் திருத்தந்தை மாறிவிட்டார். பிரான்ஸ் நாட்டு அவிஞ்ஞோன் நகரிலேயே போய் தங்கிவிட்டார்.

திருத்தந்தை 22ஆம் ஜான் (1316-1334) என்பவர் ஜெர்மானிய அரசன் லூயிசைப் (1314-1347) பதவி நீக்கம் செய்தார். திருச்சபைக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட்டு, திருத்தந்தையை எதிர்த்தவர்களை ஒன்று திரட்டி அவன் ஒரு பொதுச் சங்கம் கூட்டி திருத்தந்தையைப் பதவி நீக்கம் செய்தான். பொதுச் சங்கம் திருத்தந்தையின் அதிகாரத்திற்கும் மேற்பட்டது என்று ஒரு சிலர் வாதாடினர்.

அவிஞ்ஞோன் நகரில் திருத்தந்தையில் அலுவலகச் செலவுகளுக்கென்று பலவிதமான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அவிஞ்ஞோனில் தங்கியிருந்த கடைசி திருத்தந்தை 9ஆம் கிரகோரி (1370-1378). அவர் உரோமைக்குத் திரும்பி வரக் காரணமாக இருந்தவர்களுள் இரண்டு புனிதையர்கள் குறிப்பிடத்தக்கவர். ஸ்வீடன் நாட்டு புனித பிரிஜித் (1303-1373) சீயனா நகரத்து புனித காத்தரின் (1347-1380). பிரிஜித் எட்டு குழந்தைகளுக்குத் தாய். அவிஞ்ஞோனில் தங்கியிருந்த திருத்தந்தையர் தங்கள் உல்லாச வாழ்க்கையைத் துறந்து திருச்சபையின் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமென்று இறைவன் தமக்கு வெளிப்படுத்தியதாக இவர் அறிவித்தார்.' காத்தரின் புனித தொமினிக்கின் மூன்றாம் சபை உறுப்பினர்; துறவுபூண்டு இறைவனுக்கு தம்மை அர்பணித்தவர். இவரும் இறைவனின் ஏவுதலுக்கு ஏற்ப ஒரு இறைவாக்கினராக செயல்பட்டு திருத்தந்தை 9ஆம் கிரகோரியை உரோமைக்குத் திரும்பச் செல்ல வற்புறுத்தினார்.

இறுதியாக 1377ல் திருத்தந்தை 9ஆம் கிரகோரி அவிஞ்ஞோனை விட்டு உரோமை திரும்பினார். ஆனால் மறு ஆண்டே அவர் இறந்து போனதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாயிற்று.

'மேலைத் திருச்சபைப் பிளவு' (1378-1417)
திருத்தந்தை 9ஆம் கிரகோரியின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. மொத்தம் கர்த்தினால்கள் 16 பேரில் 11 பேர் பிரஞ்சுக்காரர்களாக இருந்ததால் இன்னும் ஒரு முறை பிரஞ்சு நாட்டவரே திருத்தந்தையாகி விடுவார் என்ற அச்சம் ஏற்பட்டது. உரோமையைச் சார்ந்த ஒரு கர்தினாலை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். கர்தினால்கள் பயத்தின் காரணமாக இத்தாலியின் பாரி நகர் ஆயரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் 6ஆம் அர்பன் என்று பெயர் சூடிக் கொண்டார். (1378)

ஆனால் ஒருசில மாதங்களுக்குள் கர்த்தினால்களுள் பலர் இந்தத் தேர்தல் செல்லாது என்றும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தினால்தான் நாங்கள் 6ஆம் அர்பனைத் தேர்ந்தெடுத்ததாகவும் அறிக்கை விடுத்தனர். அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்து விட்டு வேறொருவரைத் திருத்தந்தையாகத் தேர்வு செய்தனர். 7ஆம் கிளமென்ட் (1378-1394) என்று பெயர் சூடிய இவர் உரோமையை விட்டுவிட்டு அவிஞ்ஞோன் சென்று விட்டார்.

இந்த நிலையில் யாரைத் திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக ஏற்றுக்கொள்வது என்று அறியாமல் மக்கள் குழம்பிப்போயினர். திருச்சபைத் தலைமையில் ஏற்பட்ட பிளவு திருச்சபையின் எல்லா மட்டங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு திருத்தந்தையருமே தாங்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதினார்கள். இருவருமே தங்கள் மனசாட்சிக்கு எதிராகப் பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

தலைமைப் பீடப் பிளவு எல்லா நாடுகள், மறை மாவட்டங்கள், பங்குகள் வாழ்வையும் சீர்குலைத்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாரிஸ் பல்கலைக்கழகம் 1394இல் ஒரு யோசனை கூறியது. அதாவது கீழ்வரும் மூன்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

1. இரு பிரிவிலுமுள்ள திருத்தந்தையர்களும் பதவி விலக வேண்டும்.
2. இருவரும் பேச்சு வார்த்தை வழி ஒரு முடிவிற்கு வர வேண்டும்.
3. இருவரும் பொதுச் சங்கத்தின் முடிவிற்குக் கட்டுப்பட வேண்டும்.

30 ஆண்டுகள் முயற்சி மேற்கொண்ட பிறகும் முதல் இரண்டு வழிகளும் தோல்வியில் முடிந்தன. எனவே பொதுச் சங்கம் ஒன்றைக் கூட்டுவதுதான் வழி என்பது தெளிவாயிற்று. ஆனால் பொதுச் சங்கத்தை யார் கூட்டுவது? திருத்தந்தைக்குத்தானே அந்த அதிகாரம் உண்டு? ஆனால் இரண்டு பேர் உரிமை பாராட்டுகிறார்களே? - இந்தக் குழப்பத்தில் இரு கட்சிகளிடமிருந்தும் கர்த்தினால்கள், ஆயர்கள் இணைந்து பீசா நகரில் 1409இல் கூடி எதிரெதிர் கட்சிகளிலுள்ள திருத்தந்தையர் இருவருமே திருச்சபையின் எதிரிகள், அவர்கள் திருத்தந்தையர் பதவிக்கு உரிமை பாராட்ட முடியாது என்ற முடிவு செய்து அறிக்கை விட்டனர். மேலும் அவர்கள் 5ஆம் அலெக்சாந்தர் என்பவரைப் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் ஒரு வருடத்திற்குள் இறந்து விடவே அவரது வாரிசாக 23ஆம் யோவான் பதவியேற்றார். ஆனால் அவிஞ்ஞோன் கட்சியை சார்ந்த திருத்தந்தையும் 13ஆம் பெனதிக்தும் உரோமை கட்சியைச் சார்ந்த திருத்தந்தையும் (12ஆம் கிரகோரி) பதவி விலக மறுத்து விட்டனர். இவ்வாறாக ஒரே சமயத்தில் 3 பேர் திருத்தந்தையாக செயல்பட்டனர்.

இக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக ஜெர்மானிய அரசன் சிஜிஸ்மூண்ட் திருத்தந்தை 23ஆம் யோவானின் இசைவோடு கொன்ஸ்தான்ஸ் நகரில் ஒரு பொதுச் சங்கத்தைக் கூட்டினான் (1414-1418). திருத்தந்தையர் பெனதிக்து கிரகோரியும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 23ஆம் யோவான் சங்கத் தந்தையர் தம்மை சட்டப் பூர்வமாகத் திருத்தந்தையாக ஏற்றுக் கொள்வர் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார். அவரும் பதவி விலக வேண்டும் என்று சங்கம் முடிவு செய்துவிட்டது. ஆனால் அவர் இரகசியமாக ஓடி விட்டார். இச்சங்கம் செல்லாது என்று அறிக்கை விட்டார். ஆனால் சிஜிஸ்மூண்ட் அரசன் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி அவரைப் பதவிநீக்கம் செய்தான். 1415இல் 12ஆம் கிரகோரி தாமாகவே பதவி விலகினார். பிடிவாதமாக இருந்த 13ஆம் பெனதிக்து பதவி விலக்கம் செய்யப்பட்டார். 1417இல் கொன்ஸ்தான்ஸ் சங்கம் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தது. அவர் 5ஆம் மார்ட்டின் என்ற பெயரில் பொறுப்பேற்றார் (1417-1431). எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டனர்.

திருத்தந்தையாக யாரை ஏற்பது என்ற குளறுபடி முடிவிற்கு வந்தது. மேலைத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஓரளவு சரியாயிற்று.

ஆனால் பொதுச் சங்கம் உயர் அதிகாரம் கொண்டதா, திருத்தந்தை உயர் அதிகாரம் கொண்டவரா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது 1414 -1418இல் நடந்த கொன்ஸ்தான்ஸ் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருத்தந்தை மீதும் தனக்கு அதிகாரம் உண்டென உரிமை பாராட்டியதை நாம் அறிகிறோம். திருச்சபையில் ஏற்பட்டிருந்த அவலமான ஒரு பிளவைப் போக்க எடுக்கப்பட்ட விதிவிலக்கான ஒரு நடவடிக்கை என்றே இதைக் கருத வேண்டும்.

புதிய ஆன்மீகம்'
14-15 நூற்றாண்டுகளில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆழ்நிலை தியானம் வழியாக இறைவனோடு ஒன்றித்தல் பற்றி பலர் எடுத்துரைத்தனர்.

"புதிய ஆன்மீகம்” என்றொரு இயக்கம் தொடங்கியது. இது இறையியல் சர்ச்சைகளைத் தவிர்த்தது; தியான முறை பற்றியும் பேசவில்லை. ஆனால் இயேசுவின் வாழ்க்கையைப் பின்பற்றி நடைமுறையில் எவ்வாறு ஒழுகுவது என எடுத்துரைத்தது. அயலாருக்கு அன்புகாட்டுவதின் தேவை வலியுறுத்தப்பட்டது. இப்புதிய ஆன்மீகத்தின் தலைசிறந்த நூல் "கிறிஸ்து வழி வாழ்வு” (கிறிஸ்து நாதர் அனுசாரம்) இக்காலத்தில் தோன்றியது. தாமஸ் அகெம்பீஸ் இதை எழுதியதாகக் கருதப்படுகிறது.

கீழைத் திருச்சபையில் ஒரு செபமுறை தோன்றியது. இது "ஹெஷிகாசம்" என்றழைக்கப்படுகிறது. நாம் சீராக மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் வேளை இதயத்தில் இயேசுவின் பெயரை இடைவிடாது மனனம் செய்வதில் இது அடங்கும். "இயேசுவே என் மேல் இரக்கமாயிரும்” போன்ற செபங்களையும் உள்ளூர மனனம் செய்யலாம்.

மறுமலர்ச்சி
14-15 நூற்றாண்டுக் காலத்தை மறுமலர்ச்சிக் காலம் என்று அழைப்பதுண்டு. கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் ஒரு புது எழுச்சி ஏற்பட்ட காலம் அது. பண்டைக்கால இலக்கியமும் கலையும் மீண்டும் "கண்டெடுக்கப்பட்ட" காலம் அது. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனை எழுந்ததால் இக்காலத்தின் பண்பு மனித மையக் கொள்கை என்றும் குறிப்பிடப்படுகிறது.

மறுமலர்ச்சிக் காலத் திருத்தந்தையர் பற்றி சில குறிப்புகள் இவண் தரப்படுகின்றன. 5ஆம் நிக்கோலாஸ் (1447-1455) உரோமை நகரை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தினார். உலகப்புகழ் வாய்ந்த வத்திக்கான் நூலகத்தை நிறுவினார். திருத்தந்தையின் அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டப் பாடுபட்டார். 3ஆம் கலிஸ்டஸ், (1455-1458) போர்ஜியா என்ற சக்தி வாய்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் காலத்திலிருந்து "உறவினர் சலுகை" என்ற தீய பழக்கம் திருச்சபைத் தலைமைப்பீடத்தில் சீரழிவைக் கொணரலாயிற்று. உயர் பதவியிலுள்ளவர்கள் தம் உறவினர்க்கும் குடும்பத்தார்க்கும் தனிச் சலுகையும் ஆதரவும் காட்டுவதுதான் இப்பழக்கம். 3ஆம் கலிஸ்டஸ் தம் மருமகன்கள் இருவரை கர்தினால்கள் ஆக்கினார். இவர்களுள் ஒருவர்தான் பிற்காலத்தில் ஆறாம் அலெக்சாந்தர் என்ற பெயரில் திருத்தந்தையாகப் பதவி ஏற்று தமது ஒழுக்கக்கேடான வாழ்க்கையால் திருச்சபைக்குப் பெரும் அவமானம் இழைத்தவர். 3ஆம் கலிஸ்டசின் இன்னொரு மருமகன் ஸ்பொலேட்டோ பகுதியில் ஆளுநனாக நியமிக்கப்பட்டான்.

இரண்டாம் பியுஸ் (1458-1464) தனது பழைய வாழ்க்கையைத் திருத்தி நன்முறையில் திருத்தந்தையாகப் பணியாற்றினார். இவரும் இவருக்குப் பின் - வந்த இரண்டாம் பவுல் (1464-1471) என்பவரும் தம் உறவினர்களுக்குத் தனிச் சலுகை காட்டவில்லை. ஆனால் 6ஆம் சிக்ஸ்டஸ் என்ற திருத்தந்தை (1471-1484) மீண்டும் உறவினர்க்கு சலுகை காட்டத் தொடங்கினார். அவருடைய 3 மருமகன்களை கர்தினால்களாக நியமித்து அவர்களுக்கு ஏராளமான வருமானம் வரும்படி பார்த்துக்கொண்டார். உரோமை நகரை அழகுபடுத்தினார். இன்று வத்திக்கானிலுள்ள "சிக்ஸ்டைன் சிற்றாலயம்” இவரால் கட்டப்பட்டதே. எட்டாம் இன்னொசென்ட் (1484-1492) திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இவரது ஒழுக்கம் சீர் குலைந்திருந்தது.

ஆறாம் அலெக்சாந்தர் (1492-1503) போர்ஜியா குடும்பத்தைச் சார்ந்தவர் 3ஆம் கலிஸ்டஸ் என்ற திருத்தந்தையின் மருமகன். அலெக்சாந்தர் திருத்தந்தைப் பதவியை அரசியல் நோக்கங்களுக்காகவும் குடும்பத்தினருக்கு சலுகை வழங்கவும் பயன்படுத்திக் கொண்டார். அவரது ஒழுக்கமற்ற வாழ்க்கை யாவருக்குமே துர்மாதிரிகை ஆயிற்று.

இரண்டாம் ஜூலியஸ் (1503-1513) ஆறாம் சிக்ஸ்ட ஸ் திருத்தந்தையின் மருமகன். இவரது ஆட்சிக் காலத்திலும் அரசியல் சூழ்ச்சிகள் மலிந்திருந்தன இவர் கலைகளின் புரவலராக விளங்கினார். ஆனால் திருச்சபையின் ஆன்மீக மறுமலர்ச்சியில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை .

திருச்சபையில் உலகப் போக்குகளும் அதிகாரப் பாணிகளும் ஊழல்களும் மலிந்திருந்ததைச் சுட்டிக்காட்டி சீர்திருத்தம் கொணர பலர் விரும்பினர். மிகுந்த தயக்கத்தோடு 2ஆம் ஜுலியஸ் 5ஆம் லாத்தரன் பொதுச் சங்கத்தை 1512இல் கூட்டினார். 1513ஆம் ஆண்டில் அவரது இறப்புக்கு முன்னால் சங்கம் ஒரு முக்கியமான சட்டம் இயற்றியது. அதாவது திருத்தந்தையைத் தேர் செய்யும்போது யாரும் பணம் பெற்று வாக்கு வழங்குதல் தடை செய்யப்பட்டது ஊழல் வழி நடந்த தேர்தல் செல்லுபடியாகாது. ஊழல் பெறுவோர் உடனடியாக திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டவராகக் கருதப்படுவார்.

இதற்குப் பின் பதவியேற்ற திருத்தந்தை பத்தாம் லெயோ (1513-1521) லாத்தரன் பொதுச் சங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார். சங்கம் பல சீர்திருத்தங்களைக் கொணரச் சட்டம் இயற்றியது. ஆனால் உலகப் போக்கில் அரசியல் சூழ்ச்சிகளில் மூழ்கிய திருத்தந்தை சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை! திருச்சபையின் ஆயர்களில் பலரும் சீர்திருத்தம் பற்றிக் கவலைப்படவில்லை.
ஆனால் திருச்சபையில் சீர்திருத்தம் தேவைப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க : நவீன காலம்

image