திருச்சபை வரலாறு

அதிகாரம் 5
இந்திய, தமிழக திருஅவை வரலாறு
(கி.பி. 1901 - 1999)'

5. 19-20 நூற்றாண்டுகளில் இந்திய, தமிழக திருச்சபை

19ம் நூற்றாண்டுத் திருச்சபை
இந்த நூற்றாண்டு பிரிட்டீஷார் நூற்றாண்டு ஆகும். வங்காளம், சென்னை, பம்பாய் மாகாணங்கள் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தன. பின் வடக்கு, மத்திய, வடமேற்கு பகுதிகள் படிப்படியாக அவர்களது ஆளுகைக்குள் வந்தன. 1793 இல் வங்காளத்தில் வில்லியம் கேரி என்ற பாப்டிஸ்டு மறைப்போதகர் வந்து சிறப்பாகப் பணியாற்றினார். செரம்பூர் மறைத்தளம் உருவாகியது. 1801இல் புதிய ஏற்பாடு வங்காள மொழியில் பெயர்க்கப்பட்டது. 'தொடர்ந்து பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய் போன்ற பிறமொழிகளிலும் விவிலிய மொழிபெயர்ப்புப்பணி செரம்பூரில் நிகழ்ந்தது. புகழ்மிக்க செரம்பூர் கல்லூரி 1819இல் தொடங்கப்பட்டது.

1850களில் இந்தியா முழுவதிலும் திருநெல்வேலி, தென்திருவிதாங்கூர் பகுதிகளில்தான் சீர்திருத்த சபைக் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

சிப்பாய் கலகம் - முதல் விடுதலைப் போராட்டம் (1857)
பிரிட்டீஸ்காரரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் 1857இல் கொதித்தெழுந்தனர். இந்திய ராணுவத்தினரிடையே வெடித்த போராட்டம் சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்டாலும் உண்மையில் இது ஒரு விடுதலைப் போராட்டமே. அதோடு கிழக்கிந்திய கம்பெனி முடிவுக்கு வந்தது. 1858இலிருந்து இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் நேரடி ஆளுகையின் கீழ் இந்தியா வந்தது. பல சீர்திருத்த சபைகள் இந்தியாவில் நுழைந்தன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வியில் சிறந்த பலர் கிறிஸ்தவராயினர். எ.டு. பண்டித ராமா பாய் (1883), நாராயண் வாமன் திலக் (1895). அதே நேரத்தில் இந்து சமய மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. சமய, சமூக சீர்திருத்தத்துக்காக ராஜாராம் மோகன் ராயால் நிறுவப்பட்ட பிரமம் சமாஜம் (1828), கேஷப் சந்த்ர சென் தலைமையில் 1865இல் பெரிதாக வளர்ந்தது. 'ராம கிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வையும் போதனையையும் அடிப்படையாகக் கொண்டு விவேகானந்தர் தலைமையில் இராமகிருஷ்ணா மிஷன் தழைத்தது. 1875இல் இந்து சமய பாதுகாப்புக்காக. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது. இறுதியாக 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. கல்வி கற்ற இந்துக்களின் அறிவு வேட்கை, தேசிய உணர்வு ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய இவ்வாறு பல இயக்கங்கள் இருந்தன.

பெண்களின் நிலையை உயர்த்துவதில் கிறிஸ்தவ சபைகள் அரும்பணியாற்றின. படிப்படியாக பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்தனர். குறிப்பாக சீர்திருத்த சபை மறைப்போதகர்கள் இப்பணியில் ஆர்வம் காட்டினர்.

பெண் விடுதலைக்காக உழைத்த ஒரு பெண்மணி பண்டித ராமா பாய் (1858-1922). மராட்டிய பிராமண குலத்தில் பிறந்த இவருக்கு இவரது தந்தையார் அக்கால வழக்கத்தை மீறி . வடமொழி பயிற்றுவித்தார். புராணங்களில் தேர்ச்சி பெறச் செய்தார். 1876இல் ஏற்பட்ட பஞ்சத்தில் தன் பெற்றோரையும் உற்றாரையும் இழந்த ராமா பாய் 1878இல் கல்கத்தா வந்தார். கிறிஸ்தவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. தன்னுடைய சாதியைச் சாராத ஒருவரை மணமுடித்துக் கொண்டார். இரு ஆண்டுகளுக்குள் விதவை ஆகிவிட்ட அவர் தம் சிறு பெண்குழந்தையோடு பூனா வந்து அங்கு இளம் விதவைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்காக உழைத்தார். கிறிஸ்தவ பெண் துறவியர் மற்றும் மறைப்போதகர்களோடு கொண்ட தொடர்பால் 1883இல் திருமுழுக்குப் பெற்றார். பம்பாயில் 1889இல் சாரதா சாதன் என்ற விதவைகள் மறுவாழ்வு இல்லம் தொடங்கினார். வெளிநாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஆள் மற்றும் பொருள் உதவி பெற்று முக்தி என்றொரு அமைப்பைத் தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.

1850களில் பீஹாரில் சோட்டா நாகபுரி பகுதிகளில் பழங்குடி மக்களிடையே சீர்திருத்த சபையினர் கிறிஸ்தவத்தை அறிவித்தனர். ஓராவோன், முண்டா, கோல் போன்ற பழங்குடி மக்கள் கிறிஸ்தவராயினர். வங்காள, பீஹார் எல்லையில் சாந்தாள் இன மக்கள் 1860இலிருந்து கிறிஸ்தவராயினர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் அமைப்பு உறுதிப்படல் (1800 முதல் 1900 வரை)
1740இலிருந்து 1830 வரையிலும் சுமார் 70 ஆண்டுகள் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் ஓர் இருண்டகாலம் நிலவிற்று. போர்த்துக்கல்லின் அதிகாரம் குன்றியது. மறைபரப்புப் பணிக்கு ஆள், பொருள் உதவி இதனால் இல்லாமல் போயிற்று. போர்த்துக்கல் கிறிஸ்தவ மறை அறிவிப்பில் ஆர்வம் காட்டவில்லை டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற சீர்திருத்த சபை சார்ந்த நாட்டவரின் ஆதிக்கம் ஓங்கியது. 1759 இல் போர்த்துக்கல்லிலும் அதன் குடியேற்றப் பகுதிகளிலும் இயேசு சபை மூடப்பட்டது. 1773இல் உலகமெங்கும் இயேசுசபை தடை செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் மறைபரப்புப்பணி வீழ்ச்சியடைந்தது. பிரஞ்சு மறைபரப்புப் பணியாளர்கள் பிரஞ்சுப் புரட்சியின் காரணமாக இந்தியாவில் பணியாற்ற இயலவில்லை. திப்பு சுல்தானின் படையெடுப்பால் கிறிஸ்தவர் சிதறினர். தரங்கம்பாடி சீர்திருத்த சபை மிஷன் காரணமாக பல கத்தோலிக்கர் சீர்திருத்த சபையினராக மாறிவிட்டனர். - திருச்சபை நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் கோவா மறைமாநிலமும் அதோடு இணைந்து கொச்சி மறைமாவட்டமும் மற்றும் மைலாப்பூர் மறைமாவட்டமும் இருந்தன. பின்னர் கொடுங்களூர் (அங்கமாலி) மறைமாவட்டம் இயேசு சபையினர் கண்காணிப்பில் இருந்தது. கொச்சி மறைமாவட்டத்தின் கீழ் இலங்கை, தெற்கு தமிழ்நாடு, கேரள கடற்கரைப் பகுதிகளில் இருந்தன. மைலாப்பூர் மறைமாவட்டம் வடக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரிசா மற்றும் வங்காளம் வரை உள்ளடக்கியது. இந்தியாவின் பிற பகுதிகள் கோவா மறை மாநிலத்தோடு ஓரளவு இணைந்திருந்தன என்றாலும் போர்த்துக்கீசியரின் நேரடி ஆதிக்கப் பகுதிகளிலும் கோவா கிறிஸ்தவர்கள் இருந்த ஒருசில உள்நாட்டுப் பங்குத்தளங்களிலும் மட்டுமே கோவா மறைமாநில நிர்வாகம் நிலைத்தது.

மறைமாவட்டங்கள் தவிர துணை மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மலபார் (வராப்புழை) துணை மறைமாவட்டம் பெரும்பாலம் சீரியா கிறிஸ்தவர்களின் நலனுக்காக அமைந்தது. பம்பாய் துணை மறைமாவட்டம் பீஜப்பூர் அல்லது முகலாய துணைமறைமாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. வட இந்தியாவில் திபெத்-இந்துஸ்தான் மறைத்தளம் என்று அழைக்கப்பட்ட பாட்னா துணை மறைமாவட்டம் இருந்தது. இந்த துணை மறைமாவட்டங்களில் பணியாற்றிய மறைப்பணியாளர்கள் போர்த்துக்கீசியர் அல்லாத துறவற சபையினர் (எ.டு. வராப்புழை மற்றும் பம்பாயில் கார்மெல் சபை; வட இந்தியாவில் கப்பூச்சியர் சபை)

மேலே கூறிய பழைய துணை மறைமாவட்டங்கள் தவிர 1776இல் பாண்டிச்சேரி துணை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு பாரீஸ் மறைபரப்பு சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவா போன்ற மறைமாநிலங்கள் போர்த்துக்கீசிய பத்ரவாதோ அமைப்பின் கீழும் துணைமறைமாவட்டங்கள் உரோமை விசுவாசப்பரம்புதல் பேராயத்தின் கீழ் நேரடியாக திருத்தந்தையின் ஆளுகையின் கீழும் செயல்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துணைமறைமாவட்டங்களில் அவ்வளவு குருக்கள் இல்லை. பத்ரவாதோ பகுதிகளில் குருக்கள் இருந்தாலும் மறைபணி ஆர்வத்தோடு நடைபெறவில்லை.

கத்தோலிக்க சபையைப் பொறுத்தமட்டில் நவீனகாலத்தில் மறையறிவிப்புப் பணிக்கு ஊக்கம் அளித்தவர் திருத்தந்தை 16ஆம் கிரகோரி ஆவார். 1831இல் . திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்படுமுன் இவர் விசுவாசப் பரம்புதல் பேராயத்தின் தலைவராக இருந்தார். எனவே கிரகோரி போர்த்துக்கீசிய பத்ரவாதோ மறைபரப்புப் பணியைச் சரிவர செய்யாதிருப்பதை உணர்ந்து போர்த்துக்கல் ஆட்சி இல்லாத பகுதிகளில் துணைமறைமாவட்டங்களை உருவாக்கி தம் நேரடி ஆளுகையில் கொண்டுவந்தார். இவ்வாறு 1832இல் சென்னை துணைமறைமாவட்டம் உருவாயிற்று. அதன்கீழ் சென்னை ஹைதராபாத் வரை, நாகபுரி மற்றும், ஒரிசா, எல்லை வரையிலான பகுதிகள் அடங்கின. வங்காள பகுதிக்கென கல்கத்தா துணைமறைமாவட்டம் 1834ல் உருவாயிற்று. 1836இல் பாண்டிச்சேரி துணைமறைமாவட்டம் விரிவுபடுத்தப்பட்டு சோழ மண்டலக் கடற்கரையில் ஏறக்குறைய தமிழகம் முழுவதும் மற்றும் மைசூரை உள்ளடக்கியதாக மாறிற்று.

இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் கேரளம் உட்பட்ட பகுதிகளிலிருந்த பழைய துணை மறைமாவட்டங்கள் தவிர புதிய துணை மறைமாவட்டங்களும் போர்த்துக்கீசிய ஆளுகைக்கு உட்படாத பகுதிகளில் உருவாக்கப்பட்டதால் திருச்சபை நிர்வாகத்திற்கான உறுதியான ஓர் அடித்தளம் இடப்பட்டது. பத்ரவாதோ அமைப்பு நிலவிய சில இடங்களிலும் திருத்தந்தை நேரடியாக தலையிட்டுச் செயல்படத் தொடங்கினார். இது, போர்த்துக்கல்லுக்கு விசுவாசமாயிருந்த கோவா குருக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏற்கனவே சிறிதுகாலமாக ஆயர்களின்றி இருந்த கொச்சி, கொடுங்களூர், மைலாப்பூர் மறைமாவட்டங்கள் செயல்படமாட்டா என்று திருத்தந்தை 16ஆம் கிரகோரி 1839இல் அறிவித்து அவற்றில் பணிபுரிந்த குருக்கள் துணைமறைமாவட்ட ஆயர்களின்கீழ் பணிபுரியக் கேட்டார். இதையும் பல குருக்கள் எதிர்த்தனர். போர்த்துக்கீசிய பத்ரவாதோ அமைப்பை அழிக்க திருத்தந்தைக்கு உரிமையில்லை என்று வாதாடினர்.

நிலைமை இவ்வாறிருக்க, பல புதிய மறையறிவிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1773இல் மூடப்பட்ட இயேசுசபை மீண்டும் 1814இல் 'திருத்தந்தை 7ஆம் பியுஸ் என்பவரால் உயிர்ப்பிக்கப்பட்டது. 1838இல் பிரஞ்சு இயேசு சபையினர் பாண்டிச்சேரி வந்து பழைய மதுரை மறைத்தளத்தில் காவேரிக்குத் தெற்குப் பகுதியில் பணிபுரிய ஆரம்பித்தனர். பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்த கிறிஸ்தவ சமூகங்கள் படிப்படியாக மீண்டும் உயிர்பெறலாயின. கோவா பத்ரவாதோ குருக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இவர்கள் பணிபுரிந்தனர். மதுரை 1847 இல் ஒரு துணைமறைமாவட்டமாயிற்று. தத்துவபோதகரின் தழுவியமைத்தல் முறை கைவிடப்பட்டது.

வங்காளத்தில் 1834இல் ஆங்கில, அயர்லாந்து, பிரஞ்சு சபையினர் பணிசெய்த இடத்தில் 1859இல் பெல்ஜிய இயேசு சபையினர் வந்தனர். மேற்கு வங்காளம், ஒரிசா, சோடா நாகபுரி பகுதிகளில் இவர்கள் மறைப்பணி ஆற்றினர். 1854இல் ஜெர்மன் இயேசு சபையினர் கார்மேல் சபையினரிடமிருந்து பம்பாய் பகுதியைப் பெற்று அங்குப் பணியாற்றினர். குஜராத், பூனா பகுதிகளில் மறை அறிவிப்பை விரிவுபடுத்தினர். இத்தாலிய இயேசு சபையினர் 1877இல் மங்களூர் வந்தனர். கார்மேல் சபையிடமிருந்து பொறுப்பேற்று அங்குப் பணிபுரிந்தனர்.

இதற்கிடையில் வட இந்தியாவில் கப்பூச்சியர் சபைத் துறவியர் தம் பணித்தளத்தை பீகாரிலிருந்து பஞ்சாப் வரை விரிவுபடுத்தினர். அவர்களது ஒரு முக்கிய பணி மையம் மீரட் அருகே உள்ள சர்தானா ஆகும். டெல்லி முகலாய மன்னர்கள் 18ஆம் நூற்றாண்டில் சர்தானா பகுதியைத் தங்களுக்குப் போரில் உதவி செய்த ஓர் ஐரோப்பிய வீரருக்கு இனாமாகக் கொடுத்திருந்தனர். அவர் ஒரு முஸ்லீம் பெண்மணியைத் திருமணம் செய்திருந்தார். தம் கணவரின் சாவுக்குப்பின் பேகம் சம்ரு என்ற இப்பெண்மணி கிறிஸ்தவ மதத்தைத் தழுவ முடிவுசெய்து 1781 இல் திருமுழுக்குப் பெற்றார். பின் சுமார் 55 ஆண்டுகளாக கிறிஸ்தவ மறைக்குப் பெரிதும் ஆதரவு அளித்தார். சர்தானா பகுதியில் பலர் கத்தோலிக்கர் ஆயினர்.. பேகம் திருச்சபைக்கு ஏராளம் பொருளுதவி செய்ததோடு பிறரன்புப் பணியிலும் சிறந்து விளங்கினார். கத்தோலிக்க ஆங்கிலிக்க சபைகளுக்கும் மட்டும் அல்ல, இந்து, முஸ்லீம் சமய நிறுவனங்களுக்கும் உதவி செய்தார். 1836இல் காலமானார். சர்தானாவில் கிறிஸ்தவ, இந்து, முஸ்லீம் கலைகளை இணைத்து இவர் எழுப்பிய அழகிய கோவில் இன்றும் இவர் புகழைப் பறைசாற்றுகிறது.

கப்பூச்சியர் சபையினர் 1820இலிருந்து ஆக்ரா துணைமறைமாவட்டத்தை மையமாகக் கொண்டு பணியாற்றினர். ஆனால் 1857இல் நிகழ்ந்த விடுதலைப் போரின் (சிப்பாய் கலகம்) விளைவாக அங்கு வளர்ந்த கிறிஸ்தவ சபை பெரிய இழப்பைச் சந்தித்தது. மற்றொரு பணி மையம் பாட்னா. அத்துணை மறைமாவட்ட ஆயர் கப்பூச்சியர் சபையைச் சார்ந்த அனஸ்தாசியுஸ் ஹார்ட்மான் என்பவர். இவர் ஒரு தலைசிறந்த மறைப்பணியாளர். 1850இல் பம்பாய் சென்றார். மீண்டும் 1860இல் பாட்னா திரும்பி 6 ஆண்டுகள் அங்கும், லக்னௌ , அலகாபாத் ஆகிய பகுதிகளிலும் ஆயராகப் பணியாற்றி 1866இல் காலமானார்.

பாரிஸ் மறைபோதக சபை குருக்கள் பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு மைசூர், கோயம்புத்தூர், கும்பகோணம் பகுதிகளில் பணியாற்றினர். அவ்வமயம் சென்னை துணைமறைமாவட்டத்தின்கீழ் விசாகப்பட்டினம், ஹைதராபாத், நாகபுரி உட்பட பெரும்பகுதி அடங்கியிருந்தது. அதில் வெவ்வேறு சபையினர் பணிபுரிந்தனர். இரு அயர்லாந்து மறைமாவட்ட குருக்கள் ஜான் பெனலி (1842-1868) மற்றும் அவரது சகோதரர் ஸ்டீபன் பெனலி ஆகியோர் முயற்சி செய்து ஆங்கில நாட்டு மில்ஹில் சபைக் குருக்கள் இந்தியாவில் பணிபுரிய ஏற்பாடு செய்தனர். மில்ஹில் குருக்கள் 1875இல் சென்னைக்கு வடக்கே தெலுங்கு பகுதியில் பணிபுரியலாயினர். விசாகப்பட்டினம், நாகபுரி பகுதிகளில் சலேசிய சபையினர், ஹைதராபாத் பகுதியில் இத்தாலிய அயல்நாட்டு மறைப்பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்தனர். இவை 'காலப்போக்கில் தனித் துணை மறைமாவட்டங்களாக வளர்ச்சி பெற்றன. "ஹைதராபாத் பகுதியில் தெலுங்கர் நடுவிலும் கோந்த் என்ற பழங்குடி மக்கள் நடுவிலும் கத்தோலிக்க சமயம் தழைக்கலாயிற்று.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வேறுபல துறவற சபைகளும் இந்தியாவில் மறைப்பணி செய்யத் தொடங்கின. பெண் துறவியர் இங்கு வந்து கல்விப்பணி, மருத்துவப்பணி, அன்புப்பணி, பெண்கள் முன்னேற்றப்பணி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டனர்.

1886ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் வழியாக பத்ரவாதோ - திருத்தந்தை அதிகாரப் பிரச்சனை ஓரளவுக்கு முடிவு பெற்றது. உடனே திருத்தந்தை 13ஆம் லெயோ இந்தியாவில் திருச்சபை அமைப்பை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொண்டார். 1886ஆம் ஆண்டிலேயே அதுவரை துணைமறைமாவட்டங்களாக இருந்த அமைப்புகள் எல்லாம் மறைமாவட்டங்களாக உயர்த்தப்பட்டன. அவற்றுள் ஆறு (ஆக்ரா, பம்பாய், கல்கத்தா, சென்னை, பாண்டிச்சேரி, வராப்புழை) மறைமாநிலங்களாக்கப்பட்டன. ஏற்கெனவே மறைமாநிலமாக இருந்த கோவாவோடு சேர்த்து மொத்தம் ஏழு மறைமாநிலங்களின் கீழ் பிற மறைமாவட்டங்கள் கொணரப்பட்டன. இந்த ஏற்பாடுகள் 1887இல் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டதோடு இன்றைய திருச்சபை அமைப்புக்கு உறுதியான அடித்தளம் இடப்பட்டது எனலாம். 1958இல் 15 மறைமாநிலங்களும் 47 மறைமாவட்டங்களும் இந்தியாவில் இருந்தன. இன்று இந்தியாவில் - 140 மறைமாவட்டங்கள் உள்ளன.

ஆனால் ஒரே இடத்தில் இரண்டு ஆயர்களின்கீழ் பங்குகள் இருந்த நிலைமை ஆங்காங்கே தொடர்ந்தது. போர்த்துக்கல் - பத்ரவாதோ ஆயரின்கீழ் ஒரு கோவில், அதற்கு அருகிலேயே விசுவாசப்பரம்புதல் பேராயத்தின் ஆளுகைப்படி இன்னொரு ஆயரின்கீழ் மற்றொரு கோயில் என்று இருந்ததால் போட்டியும் உரசலும் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது 1928ஆம் ஆண்டிலாகும். உரோமைக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி "இரட்டை அதிகார முறை" ஒழிக்கப்பட்டது. ஆயினும் ஆயர் நியமனம் செய்வதில் போர்த்துக்கல் தனக்கிருந்த உரிமையை முழுவதுமாக விட்டுக்கொடுக்கவில்லை.

1947 ஆகஸ்டு 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. பிரிட்டீசாரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில் திருச்சபையும் புத்துணர்ச்சியோடு செயல்படத் தொடங்கியது. இந்தியக் குடியரசுப் பகுதியில் பத்ரவாதோ உரிமையை 1950இல் போர்த்துக்கல் கைவிட்டது. 1953இல் கர்வார், தவந்த்வாதி, ரத்னகிரி பகுதிகள் கோவா மறைமாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டன. 1961 டிசம்பரில் இந்தியா கோவாவை இணைத்துக்கொண்டது.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கத்தோலிக்க மறைத்தளங்கள் உறுதியடைந்தன. திருச்சிராப்பள்ளியில் மகாதேவய்யர் உட்பட சில பிராமணர் கத்தோலிக்கராயினர் (1894). ஆனால் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களிலிருந்து மனந்திரும்பியவர்களே. சோட்டா நாகபுரியில் முதலில் லூத்தரன் சபையினரும் பின்னர் கத்தோலிக்கரும் முண்டா , ஓராவோன் போன்ற பழங்குடி மக்களை கிறிஸ்தவர்களாக்கினர். வங்காளத்திலிருந்து 1877இல் சோட்டா நாகபுரி வந்த பெல்ஜிய இயேசு சபையினர் கோல் பழங்குடி மக்களிடையே பலரை 1887இல் கத்தோலிக்க மறையில் சேர்த்தனர்.

இவர்களுள் பலர் ஏற்கனவே லூத்தரன் சபையைத் தழுவியிருந்தனர். குறிப்பாக கான்ஸ்தன்ஸ் லீவென்ஸ் என்ற பெல்ஜிய இயேசு சபைக்குரு 1885-1892 ஆண்டுகளில் தனது ஆர்வமிகு செயல்பாட்டினால் ஏழைப் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடினார். ஜமீந்தார் மற்றும் பணமுதலைகள் பழங்குடியினரைச் சுரண்டியதைக் கண்டித்தார். பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சிக்காக சேமிப்பு வங்கிகள் தொடங்கினார். 1927இல் அப்பகுதியில் ராஞ்சி மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது சுமார் 2 லட்சம் பேர் கத்தோலிக்கராயிருந்தனர். 1958இல் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்தது.

தெற்கு கன்னடப் பகுதியில் இயேசு சபையைச் சார்ந்த கோர்த்தி அடிகளின் முயற்சியால் 1910இல் பிற்படுத்தப்பட்டோர் பலர் கத்தோலிக்கர் ஆயினர். ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் திரளான மக்கள் குழுவாக சீர்திருத்த சபைகளுக்கு மாறினர்.

அஸ்ஸாம் பகுதியில் 1889இல் ஜெர்மன் மறைப்பணியாளர்களும் முதலாம் உலகப்போருக்குப்பின் சலேசிய குருக்களும் மறைப்பணியாற்றினர்.

1880 அளவில் தமிழகம் முழுவதிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. மேலை நாடுகளிலிருந்து பல துறவறச் சபைகளின் உறுப்பினர்கள் இங்கு வந்தனர்.

வராப்புழை மறைமாவட்டத்திலிருந்து 1853 இல் பிரிந்த கொல்லம் மறைமாவட்டத்தின்கீழ் தென் திருவிதாங்கூர் பகுதியும் (இன்றைய கோட்டாறு மறைமாவட்டம்) அடங்கியிருந்தது. அங்கு கார்மேல் சபையினர் பணியாற்றினர். இவர்களுக்கும் பத்ரவாதோ அமைப்புக்குமிடையே அவ்வப்போது மோதல்கள் எழுந்தன. இலண்டன் மிஷனரி சொசைட்டி, பாறசாலை, நெய்யூர் பகுதிகளில் நல்ல வளர்ச்சி கண்டது. 1883இலிருந்து இரட்சணிய சேனையும் தழைத்தது.

1857இல் தமிழ்நாட்டில் சீர்திருத்த சபையினர் பாதிக்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தனர்.

புதிய ஆயர் கனோஸின் நீண்ட பணிக்காலத்தின்போது புதிய மதுரை மறைப்பணித் தளம் உறுதிப்பட்டது. பல பங்குகள் உருவாயின. பாளையங்கோட்டை - திருநெல்வேலி, மதுரை, திருச்சி என்ற மூன்று வட்டாரங்கள் எழுந்தன, மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் ஆதிதிராவிடர் பலர் கிறிஸ்தவராயினர். 1860இல் குஜராத்திலிருந்து குடியேறியிருந்த சவுராஷ்டிரியர் (பட்டுநூல்காரர்) சிலரும் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இயேசு சபைக்குரு திரிங்கால் முயற்சியின் பயனாக மதுரை, பெரியகுளம், சாத்தூர் எல்லைப் பகுதிக்குள் 1860-1890களில் பல ஆதிதிராவிடர் கிறிஸ்தவராயினர். திருச்சி, தஞ்சைப் பகுதிகளிலிருந்து பல கிறிஸ்தவர் இடம்பெயர்ந்து சென்றதால் திண்டுக்கல் பகுதியில் கிறிஸ்தவம் தழைத்தது. ஆவூர் வெள்ளாளர் கிறிஸ்தவ மையமானது. திருச்சியில் வெள்ளாளர், ஆசாரிமார் கிறிஸ்தவக் குடியேற்றங்கள் உருவாயின. தஞ்சையிலிருந்து வந்து குடியேறிய பிராமணர் சிலரும் கிறிஸ்தவராயினர்.

சலேசிய சபை மறைப்பணியாளர்கள் 1906இல் தஞ்சை வந்தனர். பாண்டிச்சேரி, திருச்சி, தஞ்சை, ஆற்காடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்துக்கு வெளியே சில பகுதிகளிலும் பாரிஸ் வெளிநாட்டு மறைப் போதகர்கள் பணியாற்றினர். 1899 இல் கும்பகோணம் தனி மறைமாவட்டமாகப் பிரிந்தது. பவானி பள்ளத்தாக்கு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரு வட்டாரங்களைக் கொண்ட கோயம்புத்தூர் 1850இல் ஏற்கெனவே தனி துணைமறைமாவட்டமாகப் பிரிந்திருந்தது. வேலூர் பகுதியில் சலேசிய சபையினர் பணியாற்றலாயினர்.

இந்தக் காலக்கட்டத்தில் உபதேசியார், கணக்கப்பிள்ளை என்றழைக்கப்பட்ட வேதியர்கள் புரிந்த அரும்பணியைக் குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் மறைக்கல்விப் போதனை வழங்கல், அருளடையாளங்களுக்கு மக்களைத் தயாரித்தல், திருமுழுக்கு வழங்குதல், வீடு சந்தித்தல், செபம் செய்தல், தெருக்களில் போதித்தல், மக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தல் என்று எண்ணிறந்த பணிகளை ஆற்றிவந்தனர்.

20ஆம் நூற்றாண்டில் இந்திய, தமிழகத் திருச்சபை
தலத் திருச்சபையிலிருந்து குருக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உருவானதைத் தொடர்ந்து மறைமாவட்டக் குருக்கள் திருச்சபைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கினர். 1921 இல் தூத்துக்குடி மறைமாவட்டக் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1923இல் முதல் இந்திய ஆயராக (இலத்தீன் வழிபாட்டு முறை) திபூர்சியுஸ் ரோச் தூத்துக்குடி மறைமாவட்டப் பொறுப்பை ஏற்றார். பின்னர் கும்பகோணம் (1931). கோயம்புத்தூர் (1940), திருச்சி (1938), சேலம் ((1943), வேலூர் (1952) ஆகிய மறைமாவட்டங்களில் நம் நாட்டவரே ஆயர்களாக நியமனம் செய்யப்பெற்றனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் குருக்கள் உருவாக்கத்திலும் நுழைந்தன என்பதற்குச் சான்று 1844இல் நடந்த பாண்டிச்சேரி மறைமாவட்ட மன்றம். மேல் சாதியினரைக் குருத்துவப் பயிற்சிக்குச் சேர்த்தால் போதும் என்று இம்மன்றம் முடிவு செய்தது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னரே முதன்முதலில் ஆதிதிராவிடர் குருக்களாக முடிந்தது. 1894இல் இலங்கையிலுள்ள கண்டி நகரில் திருத்தந்தை குருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு பின் 1955இல் இந்தியாவிலுள்ள புனே நகருக்கு மாற்றப்பட்டது. பாண்டிச்சேரியில் 1909இல் நிறுவப்பட்ட குருத்துவக் கல்லூரி 1934இல் பெங்களுருக்குக் கொண்டு வரப்பட்டது. மதுரை மறைப்பணித் தளத்திற்கென புனித பவுல் குருத்துவக் கல்லூரி 1920இல் திருச்சியில் நிறுவப்பட்டது. செண்பகனூரில் 1895இல் ஏற்படுத்தப்பட்ட இயேசு சபைக் குருத்துவக் கல்லூரி 1980இல் சென்னைக்கு மாற்றப்பட்டது. கோயம்புத்தூரிலும் ஒரு குருத்துவக் கல்லூரி உளது.

1886ஆம் ஆண்டு திருத்தந்தைக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட பத்ரவாதோ அமைப்பின் தாக்கங்கள் உணரப்பட்டன. சென்னையில் 5 சிறு பகுதிகள் மைலாப்பூர் பத்ரவாதோ ஆயரின் கீழ், முன்னாள் மதுரை மறைப்பணித் தளமாக இருந்த திருச்சியில் 8 ஆலயங்கள் அதே பத்ரவாதோ ஆயரின்கீழ் வந்தன. இவை ஆவூர், கொக்கூரணி, திண்டுக்கல், மதுரை, மலையடிப்பட்டி, ஓரியூர், திருச்சி, வேங்கடாகுளம் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. முத்துக் குளித்துறையில் தூத்துக்குடி மணப்பாடு உட்பட 6 பங்குகள் மற்றும் மதுரை மறைப்பணி தளத்திலிருந்து வந்த தஞ்சைப் பகுதிகள் மயிலை பத்ரவாதோ ஆயரின்கீழ் இருந்தன. 1952இல் சென்னை மறைமாவட்டம் மற்றும் பத்ரவாதோ மயிலை மறைமாவட்டம் இணைக்கப்பட்டு சென்னை - மயிலை மறைமாவட்டம் உருவானது. முன்னாள் மைசூர் மறைப்பணித் தளத்திலிருந்து ஒரு பகுதியும் கோவையிலிருந்து பவானி ஆற்றுக்கு வட பகுதியும் இணைக்கப்பட்டு ஊட்டி மறைமாவட்டம் 1955இல் உருவாக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து ஏற்கெனவே 1938இல் மதுரை தனி மறைமாவட்டமாகப் பிரிந்திருந்தது. 1953இல் திருச்சி மறைமாவட்டம் மதுரை மாநிலத்தின் இணை மறைமாவட்டமாகியது. தூத்துக்குடியும் அவ்வாறே ஆகியது. 1930இல் தனி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டிருந்த கோட்டாறு வாரப்புழை மறைமாநிலத்தின்கீழ் இருந்து வந்தது. 1959இல் தென் திருவிதாங்கூர் தமி ழ்ப்பகுதி கன்னியாகுமரி மாவட்டமாகத் தமிழ்நாட்டோடு இணைந்த பிறகு 1963இல் கோட்டாறு மறைமாவட்டம் மதுரை மாவட்டத்தின் இணைமறைமாவட்டமானது. தூத்துக்குடி 1923 இல் தனி மறைமாவட்டமாகியது. 1973 இல் பாளையங்கோட்டையும் 1987இல் சிவகங்கையும் மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மறை மாவட்டங்களாயின. இவ்வாறு இன்று தமிழகத்தில் 19 கத்தோலிக்க மறைமாவட்டங்கள் உள்ளன.

சாதிப்பிரிவினைகள்
தமிழகத் திருச்சபையில் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் சாதி உணர்வு தலைதூக்கி நின்றது. சமத்துவத்தைப் போதித்த கிறிஸ்தவம் நடைமுறையில் மனிதரிடையே பாகுபாடுகளை ஆதரித்தது ஒரு பெரிய முரண்பாடுதான். சாதி வேறுபாடு இந்து சமயத்தைச் சார்ந்தது. எனவே அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சிலர் வாதாடினர். ஆனால் வேறு சிலர் சாதியை ஒழித்தல் இயலாதது. எனவே அதை ஏற்றுக்கொண்டு எல்லா சாதியினரையும் கிறிஸ்தவத்திற்குள் கொணர முயல்வோம் என்று கருத்து தெரிவித்தனர். இந்தப் பிரச்சனையைக் கத்தோலிக்க சபையும், சீர்திருத்த சபைகளும் சந்தித்தன.

தரங்கம்பாடி லூத்தரன் சபைக் கோவிலில் சாதி அடிப்படையில் இடப்பாகுபாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை வேப்பேரியில் 1820-1826 காலக்கட்டத்தில் கோயிலிலும் பள்ளிக்கூடத்திலும் தனி இடம் ஒதுக்கியது பற்றி சீர்திருத்த சபை வெள்ளாளர் - ஆதிதிராவிடர் மோதினர். அதுபோலவே பாளையங்கோட்டையில் வெள்ளாளர் - நாடாரிடையே மோதல் ஏற்பட்டது.

1844 இல் பாண்டிச்சேரியில் நடந்த மறைமாவட்ட மன்றத்தில் இளங்குருக்கள் சாதி ஒழிப்பை ஆதரித்தனர். ஆனால் குருமடத்தில் உயர்சாதி - கீழ்சாதி மாணவர் ஒன்றாக உணவருந்தியதை ஒருசில பெற்றோர் எதிர்த்தனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கோவிலில் தனி இடம் ஒதுக்குதல், சாதிப்பிரிவினை வலுப்படுத்த கோவிலில் தடுப்புச்சுவர் கட்டுதல், தாழ்த்தப்பட்டோருக்குக் கடைசியில் நன்மை வழங்குதல், ஊர்வலங்களில் அவர்கள் பங்கேற்க தடைவிதித்தல், திருமுழுக்கு, திருமணம், அடக்கம் ஆகியவற்றில் பாகுபாடு காட்டுதல் இவ்வாறாக பல வழிகளில் சாதிப் பிரிவினை திருச்சபைக்குள் நிலவியது. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர்க்கு என்று தனிக்கோவில் அல்லது சிற்றாலயம் கட்டப்பட்டது.

மதுரை மறைபரப்புத்தளத்தில் வடக்கன்குளம் ஊரில் கோவிலில் சாதி அடிப்படையில் தனி இடம் ஒதுக்குவது பற்றி ஒரு நீண்ட சர்ச்சை எழுந்தது. 1872இல் தடுப்புச் சுவரோடு கட்டப்பட்டது ஒரு புதிய கோவில், தடுப்புச் சுவர் வேண்டாம் என்று நாடார் கிறிஸ்தவர்களும் சுவர் வேண்டும் என்று வெள்ளாளர் கிறிஸ்தவர்களும் கூற மோதல் எழுந்தது. 1910 நவம்பர் 22ஆம் நாள் தடுப்புச் சுவரை பங்குத்தந்தை கௌசானல் அடிகள் அகற்றினார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் 1916 ஜனவரி 25ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கியது. பிரிட்டீஷ் நீதிபதி நேப்பியர், இந்திய நீதிபதி சதாசிவ ஐயர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கிறிஸ்தவர்கள் எல்லா மனிதரும் சமம் என்று ஏற்கிறார்கள்; கோவில் சார்ந்த காரியங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை தங்கள் விருப்பம்போல் நடத்தல் தகாது. திருச்சபை கூறும் வழிமுறைகளை ஏற்கவேண்டும்; ஐரோப்பியரும் தீண்டத்தகாதவரே என்று கூறுகின்ற இந்துப் பழக்கத்தை கைவிட்டபிறகு கிறிஸ்தவர்களே தமக்குள் தீண்டாமையைக் கடைபிடிப்பது எந்த வகையில் நியாயம்? என்று அந்த நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பை ஏற்க மறுத்த வெள்ளாளர் சிலர் லூத்தரன் சபைக்குச் சென்றுவிட்டனர். அதுபோலவே திருச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் கத்தோலிக்கர் சுமார் 3500 பேர் லூத்தரன் சபையில் சேர்ந்தனர்.

இந்திய தேசிய உணர்வும் சுயமரியாதை இயக்கமும் வலுப்பெற்றபோது 1935-40 ஆண்டுகளில் திருச்சியில் கோவில் இடப் பாகுபாடுகள் படிப்படியாக அகன்றன. இதை எதிர்த்த சில உயர்சாதியினர் தனிக்கோவில்கள் எழுப்பி சிறிதுகாலம் வழிபாடு நடத்தினர்.

சாதிபாகுபாடுகள் இன்றும் திருச்சபையில் நிலவுகின்றன என்பது வெட்கத்துக்குரியது. 1982இல் திருச்சியில் கூடிய இந்திய ஆயர் பேரவை சாதிப்பிரிவினைகளை கண்டித்து ஒரு மடல் விடுத்தது. 1990இல் தமிழக ஆயர்கள் பிற்படுத்தப்பட்டோர் திருச்சபையில் உரிய இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்துக்காக 10 அம்சத் திட்டம் ஒன்றை வழங்கினார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளை கிறிஸ்தவ தலித் மக்களின் ஆண்டுகள் என்று அறிவித்து அவர்களின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். தமிழக ஆயர்களும் தமிழக ஆண் - பெண் துறவியர் உயர் தலைவர்களும் இணைந்து எடுத்த இந்த முடிவு (10 அம்சத் திட்டம்) இன்னும் எல்லா இடங்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றே கூறவேண்டும்.

தலித் மக்களின் விடுதலைக்காக தமிழகத் திருச்சபையில் வெவ்வேறு குழுக்கள் இன்று ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தியத் திருச்சபை இந்திய உணர்வுபெறல்
சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்கரும் பிற கிறிஸ்தவரும் பெருமளவில் ஈடுபடவில்லை . சிறுபான்மையினராக இருந்த அவர்களால் தீவிரமாக ஈடுபடவும் இயலவில்லை. பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்த பாதுகாப்பு போய்விடுமே என்ற அச்சமும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் படிப்படியாகக் கிறிஸ்தவர்கள் சுதந்திர இந்தியாவுக்குத் தங்கள் பங்களிப்பை நல்க முன்வந்தனர். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் பல கிறிஸ்தவர் ஒத்துழைத்தனர். 1948இல் வத்திக்கான் இந்தியக் குடியரசோடு அரசுநிலை உறவு ஏற்படுத்தியது.

திருச்சபை சுதந்திர இந்தியாவில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்த இந்திய ஆயர் பேரவை 1944இல் உருவானது. 1950இல் ஒரு தேசிய பேரவை பெங்களூரில் கூடியது. '

ஒருசில இந்து தீவிரவாதிகள் குறிப்பாக ஜனசங் கட்சி கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். எனவே மத்தியபிரதேசத்தில் 1954இல் நியோகி தலைமையில் ஒரு குழு இப்பிரச்னை பற்றி ஆய நியமிக்கப்பட்டது. நியோகி அறிக்கையில் ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் அடங்கியிருந்தன. கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலை ஆங்காங்கே தலைதூக்கியது. குறிப்பாக ஆதிவாசிகள் நடுவே கிறிஸ்தவம் பரவுவது தடைசெய்யப்பட்டது.

இந்த எதிர்ப்பு மனநிலை ஒரு நன்மையைக் கொணர்ந்தது. இந்தியத் திருச்சபை இந்திய மண்ணில், பண்பாட்டில் வேரூன்ற வேண்டும்; அது இறக்குமதிச் சரக்காக இருத்தல் ஆகாது என்ற கருத்து படிப்படியாக எழுந்தது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் திருச்சபை காளணி ஆதிக்க மனப்பான்மையை விடுத்து தேசிய உணர்வோடு, மண்ணோடு இணைந்த விதத்தில் ஈடுபடுவதே பொருத்தம் என்று கிறிஸ்தவர் உணரலாயினர்.

கேரளத் திருச்சபை
கேரளாவில் இருந்த ஆர்த்தடாக்ஸ் சபையினர் பலர் முதல் உலகப்போருக்குப்பின் கத்தோலிக்கர் ஆயினர். 1920இல் கீவற்கஸ் என்ற ஆர்த்தடாக்ஸ் குரு ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இரு துறவற சபைகளைத் தொடங்கினார் (பெத்தனி சபை). 1926இல் மார் இவானியோஸ் என்ற பெயரில் அவர் பெத்தனி ஆயரானார். பின்னர் ஆயிரக்கணக்கான மக்களோடும் பல குருக்களோடும் பெண் துறவியரோடும் மார் இவானியோஸ் 1930இல் உரோமை திருச்சபையின் உறவில் இணைத்தார்.

1932இல் இச்சபை சீரோ-மலங்கரா என்று பெயர் பெற்றது. திருவனந்தபுரம் மறைமாநிலம், திருவல்லா மறைமாவட்டம் இதன் மையமாயின. இன்று பல துறைகளிலும் இந்தக் கீழைச்சபை வளர்ந்துள்ளது. தமிழகத்திலும் பல பகுதிகளில் சீரோ-மலங்கரா சபை செயல்படுகிறது.

1950களுக்குப் பின் இந்தியத் திருச்சபை
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு கத்தோலிக்கத் திருச்சபை முழுமூச்சோடு நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டது. கல்வி, சமூகப்பணி, மருத்துவப்பணி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தியது. 1953ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கர்தினாலாக வலேரியன் கிராசியாஸ் அவர்களைத் - திருத்தந்தை 12ஆம் பியுஸ் நியமித்தார். தமிழகத்திலிருந்து 1985இல் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டவர் சைமன் லூர்துசாமி. இவர் தற்போது வத்திக்கானில் திருத்தந்தையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.

அகில உலக நற்கருணை மாநாடு பம்பாயில் 1964இல் நடைபெற்றது. அப்போது திருத்தந்தை 6ஆம் பவுல், இந்தியாவுக்கு வருகை தந்தார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு இந்தியத் திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. 1969இல் அகில இந்திய கருத்தரங்கு பெங்களூரில் கூடியது. வத்திக்கான் சங்கத்தின் போதனைகளை இந்தியச் சூழமைவில் நடைமுறைப்படுத்துவது பற்றி இந்தியத் திருச்சபையின் பிரதிநிதிகள் சிந்தித்து பல திட்டங்களை வகுத்தனர். இதைத் தொடர்ந்து தேசிய நடுநிலையம் 1967 இல் பெங்களூரில் நிறுவப்பட்டது. இதன் இயக்குநராக டி.எஸ். அமலோற்பவதாஸ் அடிகள் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கும் இந்தியப் பண்பாட்டைத் திருவழிபாடு மற்றும் திருச்சபை வாழ்வில் கொணர்வதற்கும் அரும்பாடுபட்டார். பொது நிலையினர்க்குத் தலைமைப் பயிற்சியளிப்பதில் மிக்க ஆர்வம் காட்டினார். ஒரு சாலை விபத்தில் 1990 மே மாதம் இவர் இறந்தது இந்தியத் திருச்சபைக்கு, தமிழகத் திருச்சபைக்கு ஒரு பேரிழப்பு.

1971ஆம் ஆண்டு நாகபுரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் நற்செய்தி அறிவிப்புப் பற்றி ஆழமாக விவாதிக்கப்பட்டது.

தமிழக ஆயர் பேரவையின் முயற்சியால் 1970இல் கிரேக்க மூலத்திலிருந்து புதிய ஏற்பாடு தற்காலத் தமிழில் பெயர்த்து வெளியிடப்பட்டது. பழைய ஏற்பாட்டுத் திருத்திய பதிப்பு 1973இல் தமிழக ஆயர் பேரவையின் முயற்சியால் வெளியானது. 1995 நவம்பர் 26ஆம் நாள் கிறிஸ்தவ சபைகள் இணைந்து பொது மொழிபெயர்ப்பு ஒன்றினை வெளியிட்டன. இந்தப் பொது திருவிவிலியம் கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்புக் கொணர உதவும் என்று நம்பலாம்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) தமிழகத் திருச்சபையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. வழிபாடு முழுவதும் தமிழ்மயமானது. சங்க ஏடுகள் முதல்முறையாக ஓர் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்டது தமி ழில்தான். திருச்சி புனித பவுல் குருத்துவக்கல்லூரி மீண்டும் 1987இல் சங்க ஏடுகளின் திருத்திய மொழிபெயர்ப்போடு சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெளியான ஏடுகளின் சுருக்கத்தையும் வெளியிட்டது. சங்கப் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக மறைமாவட்டங்கள் பலவற்றில் பல கருத்தரங்குகள், பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இந்தியாவில் இலத்தீன் வழிபாட்டுமுறை, சீரோ மலபார் மற்றும் சீரோ மலங்கரா வழிபாட்டு முறைகள் மூன்று தனித்தனி கத்தோலிக்க திருச்சபைகளாக விளங்குவதால் அவற்றிற்கென்று தனித்தனி ஆயர் பேரவைகள் அமைக்கவேண்டிய தேவை எழுந்தது. எல்லாக் கத்தோலிக்க ஆயர்களையும் உள்ளடக்கிய அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை தொடர்ந்து நீடிக்கிறது. இலத்தீன் சபைக்கென “இந்திய ஆயர்களின் கத்தோலிக்க பேரவை - இலத்தீன் வழிபாட்டுமுறை” (CCBI-LR) என்ற அமைப்பும் சீரோ மலபார் மற்றும் சீரோ மலங்கரா திருச்சபைகளுக்கெனத் தனித்தனி ஆயர் பேரவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆயர் பேரவைகள் பல ஆணைக்குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் வழியாக மறைமாவட்டங்களில் வெவ்வேறு துறைகளில் மேய்ப்புப் பணியை ஊக்குவிக்கின்றன. இந்திய திருச்சபை வெவ்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்நாடகம், வட இந்தியா, மேற்கு இந்தியா போன்ற இந்த வெவ்வேறு மாநிலங்களும் திருச்சபையின் மறுமலர்ச்சிக்குப் பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.

1998ஆம் ஆண்டில் வாரணாசியில் கூடிய அகில இந்திய ஆயர்கள் அவைக் கூட்டத்தில் மக்களின் வறுமையைப் பற்றியும் சாதியத்தைப் பற்றியும் சிறப்பாகப் பேசினர். சாதியப் பாகுபாடு காட்டுவது பாவம் என்று ஆயர்கள் அவை அறிக்கையிட்டது.

2000 மாபெரும் ஜுபிலி ஆண்டு. மூன்றாம் ஆயிரம் ஆண்டின் துவக்கமாக உள்ள இக்காலத்தில் தமிழக தலைநகரம் சென்னையில் அகில இந்திய ஆயர்கள் அவைக் கூட்டத்தில் (17 - 24.01.2000) நாட்டுப்பணியில் திருச்சபையின் பங்கு என்ற கருத்தில் கலந்தாலோசித்தார்கள்.

தமிழகத் திருச்சபையின் ஆயர் பேரவை விவிலியம், திருவழிப்பாடு, மறைக்கல்வி, பொதுநிலையினர், இளைஞர், தொழிலாளர், சமூக நீதி, சமூகத் தொடர்புக் கருவிகள், இறை அழைத்தல் முதலிய பல்வேறு துறைகள் மற்றும் பிரிவினரின் நலனுக்காக உழைக்க 14 ஆணைக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சபையிலும் சமுதாயத்திலும் பொதுநிலையினரின் பங்கேற்பையும், தலைமைத்துவத்தையும் வளர்க்க தமிழக ஆயரவையும் மறைமாவட்ட ஆயர்களும் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். -

  • 1990-ல் தமிழக ஆயரவை தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவையும், மறைமாவட்ட ஆயர்கள் மறைமாவட்டப் பொதுநிலையினர் பணிக்குழுக்களையும் ஏற்படுத்தினர். * 1995-ல் பெண்கள் பகுதி அமைக்கப்பட்டு பொதுநிலையினர் பணிக்குழுவின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.
  • பொதுநிலையினர் பெரும்பான்மையாக உள்ள இந்திய கத்தோலிக்கப் பேரவை அமைப்பின் பாணியில், தமிழ்நாடு பாண்டிச்சேரி கத்தோலிக்கப் பேரவை (CCTP) என்ற அமைப்பைத் தமிழக ஆயரவை 1994-ல் உருவாக்கியது. * 1997 ஆம் ஆண்டில் இறுதிக்குள் தமிழகத்தில் எல்லா பங்குகளிலும் பங்குப் பேரவை மற்றும் பங்கு நிதிக்குழுக்களும் மறை மாவட்டங்களில் மேய்ப்புப் பணிப்பேரவை மற்றும் மறைமாவட்ட நிதிக்குழுவும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழகத் திருச்சபை முடிவெடுத்தது. இந்த அமைப்புகள் திருச்சபையிலும் சமூகத்திலும் பொதுநிலையினர் ஆர்வத்தோடு ஈடுபட வாய்ப்புக்களாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் இன்னும் பல பங்குகளில் இப்பேரவையானது நிறுவப்படாமல் இருக்கின்றது. அப்படி நிறுவப்பட்டாலும் சில இடங்களில் பெயரளவில் உள்ளது. இதற்கு இரு காரணங்களைக் காணலாம். 1. குருக்களிடம் அதிகாரப் பகிர்விற்கு மனமில்லாமை 2. பொதுநிலையினரிடம் தங்கள் பொறுப்பைப் பற்றிய தெளிவு இல்லாமை.
  • தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று பொதுநிலையினர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக ஆயரவை, 1. "திருச்சபையிலும் சமுதாயத்திலும் பொதுநிலையினர்” பற்றித் தவக்காலச் சுற்றுமடலும் (1996) 2. 'பொதுநிலையினர் பணிகள் பற்றி பொதுநிலையினர் ஆண்டில் சிறப்பு மடலும் (1998) விடுத்துள்ளது..
  • பொதுநிலையினரையும், பெண்களையும் பல்வேறு துறைகளில் மேம்படுத்த பணிக்குழு தயாரித்த கொள்கை குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்ட பங்கு, மறைமாவட்ட, மாநிலச் செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்கு தமிழக ஆயரவை ஒப்புதல் அளித்தது (1997).
  • 1998ஆம் ஆண்டை பொதுநிலையினர் ஆண்டாக தமிழக ஆயரவை அறிவித்தது. * பொதுநிலையினர் ஆண்டு நிறைவு விழாவாக “மூன்றாம் . ஆயிரம் ஆண்டில் பொதுநிலையினர்'' என்ற தலைப்பில் மாநிலக் கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர், துறவியர் கலந்து கொண்ட இக்கலந்தாய்வரகு பொதுநிலையினர் மேம்பாட்டுக்குரிய அடுத்த ஆண்டுகளுக்கான மாநில, மறைமாவட்ட முன்னுரிமைகளை வகுத்தது.

திருச்சபையில்:

1. திருச்சபையில் பொதுநிலையினர் பங்கேற்பும் தலைமைத்துவமும்.
2. பொதுநிலையினர் உருவாக்கம்.
3. பங்கேற்பு அமைப்புகள்,
4. பொதுநிலையினர் பேரவைகள்,
5. திருப்பணிகள்

சமுதாயத்தில்:

6. அரசியல் ஈடுபாடு,
7. சமூக ஈடுபாடு,
8. சமூகத் தொடர்பு ஊடகங்கள்,
9. பொதுவாழ்வில் பொதுநிலையினர் பணிகள் ஆகிய துறைகளில் இந்த முன்னுரிமைகள் வகுக்கப்பட்டன.

  • 1999ஆம் ஆண்டில் பெண்கள் பகுதி பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தது. இறையாட்சியும் பெண்விடுதலையும்” என்ற தலைப்பில் மாநிலக் கலந்தாய்வரங்கம் நடத்தப்பட்டு பெண்கள் பல்வேறு துறைகளில் மேம்பட மாநில, மறைமாவட்ட முன்னுரிமைகள்வகுக்கப்பட்டன.
  • ஜுபிலி 2000 ஆண்டில் மார்ச் திங்கள் பெண்களுக்கு யூபிலியாகவும், ஜுன் திங்கள் பொதுநிலையினர்க்கு யூபிலியாகவும் ஏற்படுத்தப்பட்டன.
  • 1999ல் தமிழ்நாடு - புதுவை பொதுநிலையினர் பேரவையை தமிழக ஆயரவை ஏற்படுத்தியது. இது பொதுநிலையினர்க்காக, பொதுநிலையினரால் நடத்தப்படும் அமைப்பாகும்.
  • தமிழகத்தில் முதன்முறையாக பெண் வேதியர் தமிழக ஆயரவையால் ஏற்கப்பட்டு 1999 முதல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. * தமிழகச் சூழலில் பொதுநிலையினருக்கென தமிழக ஆயரவை கீழ்க்கண்ட 5 திருப்பட்டங்கள், திருப்பணிகளை அளிக்க முடிவு செய்துள்ளது. அவை,

1. நிலையான வழிபாட்டுத் துணையாளர்,
2. நிலையான இறைவாக்குப் பணியாளர்,
3. அருள்பணி உதவியாளர்,
4. நீதிப் பணியாளர்,
5. நோயுற்றோர் அருட்பணியாளர் என்பன. 1999ல் இவர்களுக்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • பொதுநிலையினர், பெண்கள் ஆகியோரின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வளர்க்க மாநில, மறைமாவட்டப் பொதுநிலையினர் பணிக்குழுக்கள், முதுநிலை இறையியல் பயிற்சி, அஞ்சல்வழி இறையியல் கல்வி, தலைமைத்துவப் பயிற்சி, திறமை வளர்ப்பு பயிற்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், ஆகியவற்றையும் நடத்தி வருகின்றன.
  • 1993ல் தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவுக்கெனச் சொந்த அலுவலகம் அமைக்கப்பட்டது.
  • 1999ல் தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவுக்கு புதிய வளாகம் அமைக்கப்பட்டது. 13.4.2000 அன்று பொதுநிலையினர் உருவாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
  • பொதுநிலையினர், பெண்கள் ஆகியோரின் பங்கேற்பும் தலைமைத்துவமும் வளர பல்வேறு நிலைகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் பொதுநிலையினரின் ஈடுபாடும், பணிகளும் சிறப்பாக அமைய வேண்டின் திருப்பணியாளர்களும் பொதுநிலையினரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக பொதுநிலையினர் சிறப்பான முறையில் உருவாக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இது தமிழகத் திருச்சபைக்கு ஒரு முக்கிய சவாலாகவும் சிறப்பு முன்னுரிமையாகவும் அமையும்.

நிறைவாக
இதுவரை அகில உலகம், இந்தியா மற்றும் தமிழகத்தில் கிறிஸ்தவம் எவ்வாறு பரவி வளர்ந்தது என்றும் திருச்சபையின் வளர்ச்சிப் போக்கு எவ்வாறு அமைந்தது என்றும் சுருக்கமாகக் கண்டோம். எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் திருச்சபை கடந்த காலத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். வரலாறு வாழ்வுக்கு வழிகாட்டி. கடந்த கால அனுபவத்தில் நிகழ்கால எதார்த்தத்தைப் பார்க்கவும் எதிர்காலத்தை நோக்கி நடக்கவும் நமக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியை.

20 நூற்றாண்டு காலத் திருச்சபை வரலாறு, இந்திய, தமிழகத் திருச்சபை வரலாறு நமக்கு விடுக்கும் சவால்கள் யாவை?

1. அமைதி: அணு ஆயுதப்போர் எழும் ஆபத்து நம் கண்முன் தெரிகிறது. படிப்படியாக அணு ஆயுதங்களை அழிப்பதற்கும் அணு ஆயுத சோதனையைத் தடுப்பதற்கும் முயற்சி செய்தல்.

2. நீதி: வளர்ந்த நாடுகள் இன்று வளரும் நாடுகளைச் சுரண்டுகின்றன. நம் நாட்டிலேயே மேல் மட்டம் கீழ் மட்டத்தை ஒடுக்குகிறது; நீதியைப் புறக்கணிக்கிறது. எனவே சமூக - பொருளாதார நீதி நிலவப் பாடுபடுதல் திருச்சபை சந்திக்கும் ஒரு சவாலாக உள்ளது.

3. மனித மாண்பு: இறைவனின் படைப்புகள் என்ற முறையில் எல்லா மனிதரும் சமம். ஆனால் நடைமுறையில் இன்று ஆண் - பெண், உயர்ந்த, தாழ்ந்த சாதி, வெள்ளையன் . கருப்பன் என்று எத்தனையோ பாகுபாடுகள். மறுக்கப்படும் மனித மாண்பு திருச்சபைக்கு ஒரு சவால்.8 8 8

4. மனித உறவுகள்: பிற கிறிஸ்தவ சபைகளோடும் பிற சமயங்களோடும் உரையாடலை வளர்ப்பதும் எல்லா மனிதரையும் நல்லெண்ணத்தோடு . அணுகுதலும் இன்றைய தேவையாகும்.

5. அதிகாரப் பகிர்வு: திருச்சபை இன்று மக்கள் இயக்கமாக உருப்பெற வேண்டும் என்றால் அதன் வெவ்வேறு மட்டங்களில் அதிகாரப் பகிர்வு தேவை.

6. அரசியல் . கலாச்சார ஈடுபாடு: அரசியலோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல், அரசியல் அதிகாரத்துக்கு அடிமைப்படாமல் அதே நேரத்தில் அரசியலில் தாக்கம் கொணரும் வகையில் செயல்பட திருச்சபைக்குக் கடமை உண்டு. கிறிஸ்தவ நற்செய்தி கால, இட, பண்பாட்டுச் சூழலிலிருந்து விலகி நிற்பதோ அதை எதிர்த்து நிற்பதோ அல்ல. மாறாக, பண்பாட்டு மயமாக்கல் மற்றும் பண்பாட்டு மயமாதல் திருச்சபையின் தொடர் பணி. குறிப்பாக, அடிமட்டக் கலாச்சாரத்தின் ஏக்கங்களை அது முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

7. இறையாட்சிக்குச் சான்று: திருச்சபையும் அது போதிக்கும் நற்செய்தியும் உண்மை என்பது கொள்கையில் அல்ல, மாறாக, செயலில்தான் தெரியும். தொடர்ந்திடும் தன் வரலாற்றுப் பயணத்தில் இறைவனின் உடனிருப்பு உலகத்தில் உள்ளது என்பதை உணர்த்திட, உலகில் மலரும் இறையாட்சிக்குப் பணியாளாகச் செயல்பட திருச்சபை அழைக்கப்படுகிறது.

திருச்சபை வரலாறு பற்றி சில நூல்கள்

1. தமிழ்நாடு விரிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்ட நடுநிலையம். கிறிஸ்து நேற்றும் இன்றும். 8ஆம் வகுப்பு மறைக்கல்விப் பாடநூல், திண்டிவனம். 1987, பக். 132..

2. அரில் புரூஸ் பெர்த்: இந்திய திருச்சபை வரலாறு (தமிழாக்கம் ஆ.தே. மனுவேல்) கிறிஸ்தவ இலக்கியச் சங்கம். சென்னை , 1962, பக். 394.

3. C.B. Firth. An Introduction to Church History. CLS, Madras, 1992, pp. 304.

4. Christopher O'Mahony O.C.D., Dominic O.C.D...G.Vi+ birch History A Summary Vols.2, Pont. Institute of Theology and Philosophy, Alwaye, 1974, pp.368, 464.

* * * * * * * * * * * * * * நிறைவு * * * * * * * * * * * * * *

 

image